பகுதி - 787

அருமா மதனை பிரியாத...
பகுதி - 787

பதச் சேதம்

சொற் பொருள்

அருமா மதனை பிரியாத சரம் கயல் ஆர் நயன கொடியார் தம்

 

மதனை: மன்மதனை; சரம்: பாணம்; கயலார்: மீன்போன்ற;

அழகு ஆர் புளக புழுகு ஆர் சயிலத்து அணையா வலி கெட்டு உடல் தாழ

 

புளக: மயிர்க்கூச்சம் எடுக்கிற; புழுகு: புனுகு; சயிலத்து: மலைபோன்ற (தனங்களை); அணையா: அணைத்து;

இருமா நடை புக்கு உரை போய் உணர்வு அற்று இளையா உளம் உக்கு உயிர் சோர

 

இருமா நடை: இருமுகின்ற தன்மை; உளம் உக்கு: மனம் மெலிவுற்று; உயிர் சோர: உயிர் சோர்வுபட;

எரி வாய் நரகில் புகுதாதபடிக்கு இரு பாதம் எனக்கு அருள்வாயே

 

எரிவாய் நரகு: கும்பி பாகம் எனப்படுவது—இங்கே தீ கொழுந்துவிட்டெரியும் (Inferno)

ஒரு மால் வரையை சிறு தூள் படவிட்டு உரமோடு எறி பொன் கதிர் வேலா

 

 

உறை மான் அடவி குற மா மகளுக்கு உருகா ஆறிரு பொன் புய வீரா

 

உறைமான் அடவி: மான் உறை அடவி என்று மாற்றி, மான்கள் வாழும் காடு என்று கொள்க; உருகா: உருகுகின்ற;

திருமால் கமலப் பிரமா விழியில் தெரியா அரனுக்கு அரியோனே

 

 

செழு நீர் வயல் சூழ் அருணா புரியில் திரு வீதியினில் பெருமாளே.

 

 

அருமா மதனைப் பிரியாத சரம் கயல் ஆர் நயனக் கொடியார் தம்... அரியவனும் அழகனுமாகிய மன்மதனை விட்டுப் பிரியாத மலர்க் கணைகளைப் போன்றவையும் கயல் மீன்களைப் போன்றவையுமான கண்களையும் கொடியிடையையும் உடைய பெண்களுடைய,

அழகு ஆர் புளக புழுகு ஆர் சயிலத்து அணையா வலி கெட்டு உடல் தாழ... அழகானதும் மயிர்க்கூச்சம் தருவதும் புனுகு பூசியதுமான குன்றனைய தனங்களைச் சேர்ந்து, வலிமையை இழந்து உடல் தாழ்வடைய;

இருமா நடை புக்கு உரை போய் உணர்வு அற்று இளையா உளம் உக்கு உயிர் சோர... இருமல் மிகுந்த தன்மை வந்துசேர; பேச்சு நின்றுபோய், உணர்வும் போய், இளைத்து, உள்ளம் மெலிவுற்று, உயிர் சோர்ந்து;

எரி வாய் நரகில் புகுதாதபடிக்கு இரு பாதம் எனக்கு அருள்வாயே.... கும்பி பாகம் எனப்படுகின்ற எரியும் நரகத்தில் விழுந்துவிடாமல் உன்னுடைய இரண்டு திருவடிகளையும் தந்து ஆண்டுகொள்ள வேண்டும்.

ஒரு மால் வரையைச் சிறு தூள் படவிட்டு உரமோடு எறி பொன் கதிர் வேலா... ஒப்பில்லாததும் மாயைகளைச் செய்ததுமான கிரெளஞ்ச மலையைச் சிறுசிறு தூள்களாகப் போகுமாறு வலிமையோடு செலுத்தப்பட்ட அழகியதும் ஒளிபொருந்தியதுமான வேலை ஏந்தியவனே!

உறை மான் அடவிக் குற மா மகளுக்கு உருகா ஆறிரு பொன் புய வீரா... மான்கள் வாழ்கின்ற காட்டிலே, குறமகளான வள்ளிக்கு உருகி நின்ற பன்னிரு தோள்களை உடைய வீரா!

திருமால் கமலப் பிரமா விழியில் தெரியா அரனுக்கு அரியோனே... திருமாலாலும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனாலும் காண முடியாத அரனுக்கே அரியவனே!

செழு நீர் வயல் சுற்று அருணா புரியில் திரு வீதியினில் பெருமாளே.... செழிப்பான நீர்வயல்கள் சூழ்ந்திருக்கின்ற திருவண்ணாமலையின் வீதியில் வீற்றிருக்கும் பெருமானே!

சுருக்க உரை

ஒப்பற்றதும் மாயைகளைப் புரிந்ததுமான கிரெளஞ்ச மலையைத் தூள் தூளாகப் போகும்படி வலிமையோடு வீசப்பட்ட வேலை ஏந்தியவனே! மான்கள் வாழும் காட்டிலே இருந்த வள்ளிக் குறமகளுக்கு உருகிய பன்னிரு தோள்னே! திருமாலாலும் கமலத்தில் வீற்றிருக்கின்ற பிரமனாலும் காணமுடியாத சிவபெருமானுக்கே அரியவனே! செழிப்பான நீர்வயல்கள் சூழ்ந்திருக்கின்ற திருவண்ணாமலையின் வீதியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

அரியவனும் அழகனுமான மன்மதனைப் பிரியாத பாணங்களைப் போன்றவையும் கயல் மீன்களைப் போன்றவையுமான கண்களையும் கொடி இடையையும் உடைய பெண்களுடைய தனங்களைச் சேர்ந்து, வலிமை இழந்து, உள்ளம் மெலிந்து, உயிர் சோர்வுற்று எரிநரகத்துக்குள் புகாதபடிய அடியேனுக்கு உன்னுடை இரு திருப்பாதங்களையும் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com