பகுதி - 835

பகுதி - 835

பதச் சேதம்

சொற் பொருள்

மைந்தர் இனியதந்தை மனைவி மண்டி அலறி மதிமாய

 

மண்டி: நெருங்கி, ஒன்றுகூடி;

வஞ்ச விழிகள்விஞ்சும் மறலி வன்கை அதனில் உறுபாசம்

 

மறலி: யமன்; பாசம்: பாசக் கயிறு;

தந்து வளைய புந்திஅறிவு தங்கைகுலைய உயிர் போமுன்

 

தந்து: வீசி; வளைய: (என் உயிரை) வளைக்க; தங்கை: தங்குகை, நிலைபெற்றிருத்தல்;

தம்ப(ம்) உனது செம்பொன் அடிகள் தந்துகருணை புரிவாயே

 

தம்பம்: ஸ்தம்பம், பற்றுக்கோடு;

மந்தி குதி கொள் அம்தண் வரையில் மங்கை மருவும்மணவாளா

 

மந்தி: குரங்கு;

மண்டும் அசுரர்தண்டம் உடைய அண்டர் பரவமலைவோனே

 

மண்டும்: நெருங்கிச் சூழும்; தண்டம்: தண்டாயுதம்; மலைவோனே: போரிட்டவனே;

இந்து நுதலும் அந்தமுகமும் என்றும்இனிய மடவார் தம்

 

இந்து: பிறைச் சந்திரன்; அந்த முகமும்: அந்தம் முகமும்—அழகிய முகத்தையும்; மடவார்தம்: வள்ளி, தேவானை ஆகிய தேவியர்களுக்கு;

இன்பம் விளையஅன்பின் அணையும் என்றும் இளையபெருமளே

 

 

மைந்தர் இனிய தந்தை மனைவி மண்டி அலறி மதி மாய... பிள்ளைகளும் இனியவரான தந்தையும் மனைவியும் நெருங்கி, கதறி அழுது அறிவு கெடும்படியாக;

வஞ்ச விழிகள் விஞ்சும் மறலி வன் கை அதனில் உறு பாசம்... வஞ்சத்தை வெளிப்படுத்தம் விழிகளைக் கொண்ட யமன், தன் கையிலுள்ள பாசக்கயிற்றை,

தந்து வளைய புந்தி அறிவு தங்கை குலைய உயிர் போ முன்... வீசி என் உயிரை வளைக்க; என் அறிவு ஒரு நிலையில் நிற்காமல் தடுமாறும்படியாக என் உயிர் போவதற்கு முன்னால்,

தம்ப(ம்உனது செம் பொன் அடிகள் தந்து கருணை புரிவாயே... பற்றுக்கோடாக விளங்குகின்ற உனது சிவந்த திருவடிகளைத் தந்து எனக்குக் கருணை புரிந்தருள வேண்டும்.

மந்தி குதி கொள் அம் தண் வரையில் மங்கை மருவும் மணவாளா... குரங்குகள் குதித்து விளையாடுகின்ற அழகிய குளிர்சியான மலையில் இருந்த வள்ளியம்மையைத் தழுவுகின்ற மணாளனே!

மண்டும் அசுரர் தண்டம் உடைய அண்டர் பரவ மலைவோனே... நெருங்கிச் சூழ்கின்ற அசுரர்களுடைய தண்டாயுதங்கள் உடையும்படியாகவும்; தேவர்கள் போற்றும்படியாகவும் போரிட்டவனே!

இந்து நுதலும் அந்த முகமும் என்றும் இனிய மடவார் தம்... பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியையும் அழகிய முகத்தையும் உடைய இனியவர்களான வள்ளி, தேவானை என்னும் இருவரும்,

இன்பம் விளைய அன்பின் அணையும் என்றும் இளைய பெருமாளே.... இன்பமுறுமாறு அன்போடு அணைத்துக்கொள்பவனாகவும் என்றும் இளையவனாகவும் விளங்குகின்ற பெருமாளே!

சுருக்க உரை

குரங்குகள் விளையாடுகின்ற குளிர்ச்சியான வள்ளி மலையிலே இருந்த வள்ளியம்மையின் மணாளனே! நெருங்கிச் சூழ்ந்த அசுரப் படைகளின் ஆயுதங்கள் உடைந்து சிதறும்படியாகவும் தேவர்கள் போற்றும்படியாகவும் போரிட்டவனே! பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியையும் அழகிய முகத்தையும் கொண்ட வள்ளி தேவானையருக்கு இன்பம் பெருகும்படியாக அணைக்கின்றவனே! என்றும் இளையவனாக விளங்குகின்ற பெருமாளே!

பிள்ளைகளும் இனியவரான தந்தையும் மனைவியும் ஒன்றுகூடிக் கதறி அழுது அறிவு கலங்கும்படியாக யமன் என் முன்னே தோன்றி, கையில் உள்ள பாசக் கயிற்றை வீசி என் உயிரை வளைப்பதனால் என் அறிவு நிலைகொள்ளாமல் தவித்து என் உயிர் பிரிவதற்கு முன்னால் உன்னுடைய திருவடிகளை அடியேனுக்குத் தந்து கருணைபுரிய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com