'தொலைக்காட்சிகளில் திரைப்பட நட்சத்திரங்கள் குடும்ப பிரச்னைகனை அலசி தீர்ப்பு சொல்வது சரியல்ல என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

"தொலைக்காட்சிகளில் திரைப்பட நட்சத்திரங்கள் குடும்ப பிரச்னைகனை அலசிதீர்ப்பு சொல்வது சரியல்ல என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்குவாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தவறான செயல்
எல்லா குடும்பங்களிலும் ஏதோ ஒருவிதத்தில் பிரச்னை இருக்கத்தான் செய்யும். அதை குடும்பத்தில் உள்ளவர்கள் பேசித் தீர்த்துக்கொள்வதுதான் நல்லது. ஊடகங்கள் தங்களின் விளம்பரத்திற்காகவும், வருவாய்க்காகவும் பிறரின் குடும்ப பிரச்னையின்மீது வெளிச்சம் பரப்புவது, தவறான செயலாகும். இதுவும் ஒருவகையில் கட்டப் பஞ்சாயத்துதான். கண்டிக்கத்தக்கதும்கூட!
இராம. முத்துக்குமரனார், கடலூர்.

தகுதியில்லை
தொலைக்காட்சிகளில் திரைப்பட நட்சத்திரங்கள் குடும்ப பிரச்னைகளை அலசி தீர்ப்பு சொல்வது தனி மனிதர்களின் உள்விவகாரங்களில் தலையிட்டு ஊர் அறிய செய்யும் ஒரு கேவலமான செயலாகும். அதுவும் நடிகைகளுக்கு அதில் சிறிதும் தகுதியில்லை. காவல் நிலையம், நீதிமன்றம் போன்ற தீர்வுகள் எட்டப்படக்கூடியவைகளை தாண்டி இவர்கள் தீர்ப்பு சொல்வது சரியல்ல.
மு. நடராஜன், திருப்பூர்.

பாலம்
பிரச்னையை நன்கு அலசிதானே தீர்ப்பு சொல்கிறார்கள். இதில் தவறு இல்லை. எல்லா பிரச்னைகளுக்கும் நீதிமன்றத்தில்தான் தீர்வு கிடைக்க வேண்டும் என்பது இல்லையே. எங்கே நடைபெறுகிறது என்பது முக்கியமல்ல, பிரச்னை தீர்க்கப்படுகிறதா என்பதே முக்கியம். மனம் விட்டு பேசினாலே பிரச்னைகள் தீர்ந்துபோகும். அதற்கு தொலைக்காட்சி ஒரு பாலமாக இருக்கட்டுமே.
சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

தேவையற்றது
குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் நான்கு சுவர்களுக்குள்தான் இருக்க வேண்டும். எனவே, தொலைக்காட்சிகளின் வழியாக குடும்ப பிரச்னைகள் ஒளிபரப்பப்படுவது தேவையற்ற விளம்பரத்தையும் கஷ்டத்தையும் மட்டுமே தரக்கூடியது. சம்பந்தப்பட்டவர்களின் அந்தஸ்து கெளரவம் சமூகத்தில் குறைவதற்கான வாய்ப்புகளே அதிகம் பொதுவாக இந்த நிகழ்ச்சியே தேவையற்றது.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.


ஏற்புடையதல்ல
நேயர்களை கவர்ந்திழுக்க தொலைக்காட்சிகள் குடும்பப் பிரச்னைகளை தீர்க்க நடிகைகளை பயன்படுத்துகிறார்கள். பிரபலமான நடிகைகளின் குடும்ப வாழ்க்கை பெரும்பாலும் விமர்சனத்துக்குரியதாக இருக்கும்போது அவர்கள் அலசி தீர்ப்பு சொல்வது ஏற்புடையதாக இருக்க இயலாது. மேலும் குடும்பப் பிரச்னை குடும்பத்துக்குள் இருக்க வேண்டுமே தவிர நடுவீதிக்கு வரக்கூடாது.
உ. இராஜமாணிக்கம், கடலூர்.

ரகசியம் தேவை
குடும்பப் பிரச்னைகளை கையாளுவதற்கும், சில முடிவுகளை பிரந்துரைக்கவும், கவுன்சிலிங் துறையில் பயிற்சி பெற்ற ஆலோசகர்களுண்டு. இதில் அந்தரங்கமும், தனிமனித உணர்வுகளும் இருப்பதால் ரகசியம் கட்டாயம். பகிரங்கப்படுத்துவது பாதிப்புகளை அதிகமாக்கும். நடிகைகளை வைத்து நடத்துவதால் தொலைக்காட்சிக்கு விளம்பரம் கிடைக்கலாம்; பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

தவறு
திரைப்பட நட்சத்திரங்கள் என்பதாலேயே அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைப்பது தவறு. இரு தரப்பினர் கருத்துகளையும் விளக்கமாக கேட்டபிறகுதானே அவர்கள் தீர்ப்பைக் கூறுகிறார்கள். அவர்கள் செய்வது சரி என்பதால்தான் மக்கள் அந்த நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்கிறார்கள். நிகழ்ச்சியின் விளைவைப் பார்க்க வேண்டும். நடத்துவது யார் என்று பார்க்கக் கூடாது.
கு. தங்கராசு, வத்திராயிருப்பு.

ஐயமே
இவ்வாறு ஆலோசனை கூறுவோர் உதாரணம் சொல்லும் அளவுக்கு அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை அமைந்திருக்கிறதா என்றால் ஐயமே. அவர்கள் பலரும் அறிந்த சினிமா ஸ்டார் என்பதைத்தவிர வேறு தகுதிகள் எதுவும் அவர்களுக்கு இல்லை. மனநலம் பயின்று, குடும்ப அமைப்புகள் அறிந்த அறிஞர் பெருமக்கள்தான் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முடியும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.


பணத்திற்காக
குடும்பப் பிரச்னைகளை தீர்க்க குடும்பநல நீதிமன்றங்கள் உள்ளன. இவர்கள் தங்களை நீதிபதியாக பாவித்துக்கொண்டு செயல்படுவது ஏற்க முடியாத செயலாகும். இவர்கள் மக்களின் பிரச்னை மீது அக்கறை கொண்டவராக இருந்தால் தனிப்பட்ட முறையில் அதை தீர்த்து வைக்கலாமே. இந்த நடைமுறை பணத்திற்காகத்தான். போலி நீதிபதியாக செயல்படும் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
பா. அருள்ஜோதி, மன்னார்குடி.

சட்ட அங்கீகாரம்
குடும்ப பிரச்னைகளை தொலைக்காட்சியில் திரைப்பட நட்சத்திரங்கள் அலசுவதால் அதை காணும் கோடிக்கணக்கான மக்களுக்கு என்ன பயன்? நேரம் வீணாவதும் மன உலைச்சலும்தான் மிச்சம். குடும்ப பிரச்னைகளை குடும்பத்திற்குள் பேசி தீர்த்து கொள்ளுவது நல்லது. திரைப்பட நட்சத்திரங்கள் தீர்ப்பு சொல்லுவதால் சட்டரீதியாக அங்கீகாரம் கிடைக்காதே. பின்பு எதற்கு இந்த கோர்ட்?
என்.கே. திவாகரன், கோயமுத்தூர்.

அக்கறை
திரைப்பட நட்சத்திரங்கள் நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை. இந்த குடும்பப் பிரச்னை நிகழ்ச்சியை உயர்நீதிமன்ற நீதிபதியை வைத்தா நடத்த முடியும்? நீதிமன்றங்களுக்கு பிரச்னையை கொண்டு செல்லும் அளவுக்கு வசதி இல்லாதவர்களே தொலைக்காட்சியை நாடுகிறார்கள். நிகழ்ச்சியை நடத்துவோரும் இரு தரப்பினரிடமும் அக்கறையோடுதான் பேசுகிறார்கள். எனவே இது சரியே.
மு. பரமேஸ்வரி, காஞ்சிபுரம்.

அறியாமை
நிஜ வாழ்வில் திரைப்பட நட்சத்திரங்கள் சொந்த குடும்ப பிரச்னைகளைத் தீர்க்க ஏன் நீதிமன்றங்கள் செல்கிறார்கள்? நமது மக்களின் அறியாமை, விளம்பரமோகம் திரைப்பட நட்சத்திரங்களைத் தேடி சென்று பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்கச் செய்கிறது. திரைப்படங்களில் டாக்டராக நடிப்பவர் நிஜமான நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யட்டும் பார்க்கலாம்.
இ. ராஜு நரசிம்மன், சென்னை.


விநோதம்
அப்பாவி மக்களின் குடும்ப விவகாரங்களை வெளிச்சமிட்டுக் காட்டுவது கண்டிக்கத்தக்கது. இந்த போலி பஞ்சாயத்துகள் கள்ளக்காதல், வறியவர்களின் குடும்பப் பிரச்னையை மட்டுமே விவாதப் பொருளாக்கும். பல வருடங்களாக நடந்துவரும் நீதிமன்ற வழக்குகளையெல்லாம் முப்பது நிமிடங்களில் தீர்த்து வைக்கும். இங்கு வழக்குரைஞரும், நீதிபதியும் ஒருவரே என்பது விநோதம்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

அனுபவம்
நடிகைகள் குடும்ப பிரச்னைக்கு தீர்வு சொல்ல அனுபவம் இல்லாதவர்கள். அவர்கள் மேலோட்டமாய் பதிலளிப்பவர்கள். பட்டறிவு குறைவு. ஏழை, நடுத்தர வர்க்க பிரச்னைகளை மூத்த எழுத்தாளர்கள், சமூக சிந்தனையாளர்களைக் கொண்டு பதிலளிக்க ஊடகங்கள் முன்வர வேண்டும். மக்களும் தங்களது பிரச்னைகளுக்கு ஊடகங்கள் மூலம் தீர்வு காண்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
பைரவி, புதுச்சேரி.

பொருத்தம்
இதுபோன்ற நிகழ்ச்சிகளை திரைப்பட நட்சத்திரங்கள் நடத்துவதுதான் மிகவும் பொருத்தம். குடும்ப பிரச்னைகள் நிறைந்த கதைகளில் நடிப்பதால் உளவியல் ரீதியாக பிரச்னையை அவர்கள் அணுகுவார்கள். சில நட்சத்திரங்களில் தனிப்பட்ட வாழ்வில் பிரச்னைகள் இருக்கலாம். அந்த அனுபவம் இந்த நிகழ்ச்சியை நடத்த அவர்களுக்கு கைகொடுக்குமே தவிர நிச்சயமாக அது ஒரு குறைபாடு கிடையாது.
இரா. ஆண்டியப்பன், மீன்சுருட்டி.

கட்டப்பஞ்சாயத்து
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சில நட்சத்திரங்கள் குடும்ப பிரச்னைகளை விசாரிப்பதும் அப்பிரச்னைக்கு தீர்ப்பு கூறுவதும் சரியானதல்ல. இதுபோன்ற நிகழ்ச்சிகளின்போது வரம்பு மீறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்ற நிலை ஏற்படுகிறது. குடும்ப பிரச்னைகள் சம்பந்தமாக இரு தரப்பாருக்கும் கவுன்சிலிங் கொடுப்பதை விட்டு தீர்ப்பு வழங்குவது கட்ட பஞ்சாயத்து செய்வதாகும்.
பி. துரை, காட்பாடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com