"திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது தேவையற்றது என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

நெருடல்

திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது நிச்சயம் தேவையற்றதே. இன்றைய கால கட்டத்தில் திரைப்படங்களை குடும்பத்தோடு பார்ப்பதென்பது நெருடலான விஷயம். நம் தேசியகீதத்தை நாமே ஏன் அவமதித்துக்கொள்ள வேண்டும்? தேசியகீதத்தின் பெருமையை பள்ளி மாணவர்களின் மனதில் பதியச் செய்வோம்; ரசிகர்கள் மனதில் அல்ல.
இரா. நீதிதேவன், ஆலம்பாடி.

விஷப்பரீட்சை

இப்போது நம் நாடே ஒரு சினிமாத் தனமாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. நடிகைகளுக்கு கோயில் கட்டுவதும், நடிகர்களின் "கட்-அவுட்'டிற்கு பாலபிஷேகம் செய்வதும், பால்குடம் எடுப்பதும், மொட்டை போடுவதும் நடந்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற கலாசாரம் பரவியிருக்கும் நேரத்தில் திரையரங்குகளில் தேசியகீதம் இசைப்பதை கட்டாயப்படுத்துவது விஷப்பரீட்சையாகும்.
கோதைமாறன், திருநெல்வேலி.

கடமை

நாட்டில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சியின் முடிவிலும் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது மரபு. கடந்த சில காலமாக ஏனோ அதை கடைப்பிடிக்காமல் விட்டுவிட்டார்கள். தற்போதைய மத்திய அரசு மீண்டும் தேசப்பற்றை வளர்க்க முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் இது. எங்கு எப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டாலும் மரியாதை செலுத்த வேண்டியது நம் கடமை.
என்.கே. திவாகரன், கோயமுத்தூர்.

தேவையற்றது

தேசியகீதத்திற்கு திரையரங்குகளில் மரியாதை கிடைக்குமா? அரசு நிகழ்வுகளில் நிகழ்வு தொடங்குமுன் இசைக்கப்படும் தேசியகீதத்திற்கு அந்நிகழ்வோடு தொடர்பற்ற சாலைகளில் பயணிப்பவர் மரியாதை செய்ய முடியுமா? திரையரங்கு என்பது மக்கள் பொழுதுபோக்குவதற்கான இடம். அப்படிப்பட்ட இடத்தில் தேசியகீதம் இசைப்பதை கட்டாயப்படுத்துவது தேவையற்றது.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.


பலன்

இந்தக் கருத்து முற்றிலும் தவறானது. இமயம் முதல் குமரி வரை பரந்து கிடக்கும் நம் பாரத நாடு, தேசவிரோத சக்திகளால் பல வகைகளிலும் சோதனைகளை சந்தித்து வருகிறது. இக்காலகட்டத்தில், நம் நாட்டு மக்களிடத்திலும், இளைஞர்களிடத்திலும் நாட்டுப்பற்றை உருவாக்க வேண்டியது அவசியம். அதற்கு திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படுவது நல்ல பலனைத்தரும்.
பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.


சரியல்ல

இப்போதெல்லாம் திரையரங்குகளில் நூறு பேர்கூடப் படம் பார்ப்பது இல்லை. ஆயிரம் பேர் படம் பார்த்த அரங்கம் நிறைந்த காட்சிகள் இப்போது இல்லை. தேசியகீதம் என்பது உயிரினும் மேலான மரியாதைக்குரிய வணக்கப் பாடல் ஆகும். இன்றைய கட்டுப்பாடற்ற இளைஞர்கள் எழுந்து நின்ற மரியாதை செய்ய மாட்டார்கள். எனவே இந்தக் கருத்து சரியல்ல. தவிர்க்கப்பட வேண்டியது.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

மரியாதை
திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசியகீதம் நம் நாட்டின் இதயகீதம். இது இசைக்கும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்துவது கட்டாயமான ஒன்று. ஒரு நாட்டின் தேசியகீதம் எங்கு ஒலித்தாலும் அதற்குரிய மரியாதையை செய்வதுதான் அந்நாட்டுக் குடிமகனின் கடமை. அதை நாம் முழுமையாக நிறைவேற்றுவோம்.
என். சண்முகம், திருவண்ணாமலை.


தவறு

திரையரங்கம் என்பது கேளிக்கை கூடம். அங்கே தங்கள் அபிமான நட்சத்திரங்களை கானவரும் ரசிகர்களை தேசியகீதத்திற்கு எழுந்து நிற்க சொல்லி கட்டாயப்படுத்துவது தவறு. முன்பு படம் முடிந்த பிறகு தேசியகீதம் இசைக்கப்பட்டது. மக்கள் மரியாதை தராததால் அது நிறுத்தப்பட்டது. தேசியகீதத்தின் மதிப்பு கெடாமலிருக்க வேண்டுமானால், திரையரங்கில் தேசியகீதம் வேண்டாம்.
மல்லிகா அன்பழகன், சென்னை.

அவசியம்

திரை அரங்குகளில் தேசியகீதம் கட்டாயம் ஒலிக்கச் செய்ய வேண்டும். சாமானியர்களிடம் நாட்டுப் பற்றை ஏற்படுத்த இது நல்ல வாய்ப்பு. தேசியகீதத்திற்கு மதிப்பளிக்கச் செய்வதன்மூலம், மக்களிடம் பொது சொத்திற்கு சேதம் செய்யும் வன்முறை மனப்பான்மை குறையும். பொழுதுபோக்க சில மணி நேரம் ஒதுக்குபவர்கள் தேசிய கீதத்திற்கு சில நிமிடங்கள் ஒதுக்குவது அவசியமே.
கு. இராசாராமன், சீர்காழி.


கட்டாயம்
முன்னர் திரையரங்குகளில் தேசியகீதம் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் அது மறைந்துபோய்விட்டது. தற்போது அது திரும்பவும் வருகிறது. வரும் தலைமுறையினரிடம் நாட்டுப்பற்றை விதைப்பது காலத்தின் கட்டாயம். இந்த நாட்டைக் காக்கப் போகிறவர்கள் இளைஞர்கள்தான் என்பதால், அவர்கள் அதிகம் கூடும் திரையரங்குகளில் தேசியகீதத்தை இசைக்க கட்டாயப்படுத்துவது நல்லதே.
எஸ்.வி. ராஜசேகர், சென்னை.

நாட்டுப் பற்று
முன்பு திரையரங்குகளில் திரைப்படம் முடிந்தவுடன் தேசியகீதம் இசைக்கப்பட்டது. தேசியகீதத்துக்கு உரிய மரியாதையை மக்கள் தரவில்லை. எனவே அது நிறுத்தப்பட்டது. இப்பவும் மக்களிடையே இதே மனநிலைதான் இருக்கிறது. எனவே திரையரங்குகளில் தேசியகீதம் இசைப்பது, தவிர்க்கப்பட வேண்டியதே. மேலும் தேசியகீதத்தை கேட்பதால் மக்களிடம் நாட்டுப்பற்று வளர்ந்து விடுமா?
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

ஒற்றுமை
பல்வேறு விதமாக பிரிந்து இருப்பவர்களை ஒற்றுமையாக்குவது தேசியகீதம்தான். திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படும்போது நாம் அனைவருமே இந்தியர்கள் என்ற எண்ணம் மேலோங்குகிறது. ஆகையால் திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் வரும் தலைமுறை தேசப்பற்றோடு திகழும்.
இராம. முத்துக்குமரன்,
கடலூர் துறைமுகம்.
 

முக்கியத்துவம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்கின்றோம். மன்னர்களே தேசியகீதத்தை மதிக்கவில்லை என்றால் வேறு யார்தான் தேசிய கீதத்தை மதிப்பார்கள்? செய்ய வேண்டியதைச் செய்ய மறுக்கும் பொழுது கட்டாயப்படுத்துவதில் தவறொன்றும் இல்லை. திரைப்படத்திற்குத் தரும் முக்கியத்துவத்தைவிட தேசியகீதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
மு. சிதம்பர வில்வநாதன், சென்னை.

அவமதிப்பு
திரையரங்கு என்பது மக்கள் பொழுதுபோக்கும் இடம். மக்கள் பொழுது போக்கவரும் இடத்தில் தேசியகீதத்தை இசைத்து அவமதிக்க வேண்டாம். முதலில் எல்லா கல்வி நிறுவனங்களிலும் தேசியகீதம் இசைக்கப்படுகிறதா? அரசு நிகழ்ச்சிகளில் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்கிற விதி சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. அவற்றை சீர்திருத்தினாலே போதும், திரையரங்கில் வேண்டாம்.
மகிழ்நன், சென்னை.

என்ன குறை?
ஒவ்வொரு மனிதனுக்கும் தேசப்பற்று வேண்டும். தேசியகீதத்தை மத்திய அரசு கட்டாயமாக்கவில்லை. நீதிமன்றம் திரையரங்குகளில் தேசியகீதம் இசைப்பதைக் கட்டாயமாக்கியது. இதில் என்ன குறை? கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், திரையரங்குகள் எந்த இடத்தில் தேசியகீதம் ஒலிபரப்பினாலும் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவதே நல்ல குடிமகனின் கடமை.
மு. நாச்சியப்பன், காரைக்குடி.

சிறப்பு
அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் தேசியகீதம் பாடுவதே வழக்கம். பொழுதுபோக்கும் இடமான திரையரங்கில் தேசியகீதம் இசைக்ககப்படுவதைக் கட்டாயப்படுத்தவும் வேண்டாம். அதற்குரிய மரியாதையை எதிர்பார்க்கவும் வேண்டாம். நீதிமன்ற உத்தரவு மூலம் கட்டாயப்படுத்துவதைவிட மக்கள் தாங்களே முன்வந்து தேசியகீதத்திற்கு மதிப்பளிக்குமாறு செய்வதே சிறப்பாகும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com