26-10-2016 கேட்கப்பட்ட "விளம்பரங்களில் தோன்றும் கலைஞர்களே பொருட்களின் தரத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

ஒரு பொருளின் சிறப்பைப் பற்றிய விளம்பரத்தில் ஒரு நடிகரோ, நடிகையோ, பிரபலமான ஒருவரோ பேசும்போது,

நம்பகத்தன்மை
ஒரு பொருளின் சிறப்பைப் பற்றிய விளம்பரத்தில் ஒரு நடிகரோ, நடிகையோ, பிரபலமான ஒருவரோ பேசும்போது, பொதுமக்கள் மனதில் அந்தப் பொருள் மீது ஒரு நம்பகத்தன்மை ஏற்பட்டு விடுகிறது. அந்த நம்பிக்கையின் பேரில்தான் அப்பொருளை விரும்பி வாங்குகிறார்கள். அப்படியிருக்க அந்தப் பொருட்களின் தரத்திற்குப் பொறுப்பு விளம்பரத்தில் தோன்றும் கலைஞர்கள்தானே.
இராம. முத்துக்குமரன், கடலூர்.

கடமை
மக்கள், தங்களுக்குப் பிடித்த கலைஞர்கள் விளம்பரங்களில் பரிந்துரைக்கும் பொருட்களை நம்பி வாங்குகிறார்கள். அந்தப் பொருட்கள் தரமற்றவையாக இருந்தால் மக்களுக்கு பண இழப்புதானே ஏற்படுகிறது. எனவே, கலைஞர்கள் பணத்துக்காக, விளம்பரங்களில் தோன்றுவதைவிட, அப்பொருளின் தரமறிந்து தோன்றுவதே அவர்கள் மக்களுக்கு செய்யும் கடமையாகும்.
பூ.சி. இளங்கோவன், அண்ணாமலைநகர்.

உத்தரவாதம் 
நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என அனைவருமே பணத்துக்காகத்தான் விளம்பரங்களில் நடிக்கிறார்கள். அவர்கள் வாங்க வேண்டும் என்று சொல்கிற பொருட்களின்  தரத்தை சோதிப்பதோ ஆய்வு செய்வதோ அவர்களின் கடமை இல்லை. மேலும் ஒரு பொருளின் தரம் பற்றிய உத்தரவாதத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம்தான் கொடுக்க வேண்டும். நடிப்பவர்கள் தர முடியாது.
சோ. இராமு, செம்பட்டி.

தரக்கட்டுப்பாடு
பிரபலமாக இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கான விளம்பரத்தில் நடிப்பதற்கு முன்பு அப்பொருள் அரசின் தரக்கட்டுபாடுத் துறையின் சான்றிதழ் பெற்றிருக்கிறதா என்று தெரிந்துகொள்ள வேண்டும்.  தங்களுக்கு வேண்டிய பணத்தை தருகிறார்கள் என்பதற்காக எல்லா விளம்பரங்களிலும் தோன்றும் கலைஞர்கள் அந்தப் பொருட்களின் தரத்திற்குப் பொறுப்பேற்கதான் வேண்டும்.
என்.கே. திவாகரன், கோயமுத்தூர்.

பொம்மைகள்
புகழ் பெற்றவர்கள் விளம்பரங்களில் தோன்றுவது பணத்துக்காக. அவர்களை வைத்து விளம்பரம் செய்து பணம் சம்பாதிப்பது வியாபாரிகள். பொருட்களின் தரம் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பது பிரபலமானவர்களின் வேலை இல்லை. தரக்கட்டுப்பாட்டு அலுவலகம்தான் ஒரு பொருளின் தரத்தைப் பற்றி கூற முடியும். பாவம் கலைஞர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் வெறும் பொம்மைகளே.
கலைப்பித்தன், சென்னை.

அக்கறை இல்லை
விளம்பரங்களில் நடிப்பவர்களுக்கு உபயோகிப்பாளரின் நலனில் அக்கறை ஏதும் இருப்பதில்லை. மேலை நாடு ஒன்றில் விளம்பரப் பொருட்களுக்காக நடிப்பவர்கள் கட்டாயம் அந்தப் பொருளையே பயன்படுத்த வேண்டுமாம். மீறினால் அவர்களுக்குத் தண்டனை உண்டாம். அந்த நிலை இங்கு இல்லை. எனவே, விளம்பரத்தில் நடிப்பவர் தரத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பது சரியே.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

ஏமாற்றம்
ஒரு பொருளைப் பற்றிய விளம்பரத்தில் நடிப்பவர்கள் முதலில் அந்தப் பொருளின் தரத்தை தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். தன்னை நம்பி மக்கள் அந்தப் பொருளை வாங்கி ஏமாந்து போவார்கள் என்ற சிந்தனை இருந்தால், தரமற்ற பொருட்களுக்கான விளம்பரத்தில் நடிக்க மாட்டார்கள். எனவே, பொருட்களின் தரத்துக்கு கண்டிப்பாக நடிப்பவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்.
ஏரல் - ராஜிக் காஷிஃபி, சென்னை.

வேத வாக்கு
பல பொருட்களின் விற்பனைக்கு முக்கிய காரணம் விளம்பரமே. ஊடகங்களில் வரும் விளம்பரங்களில் தோன்றும் கலைஞர்களின் வாக்கை வேத வாக்காகவே கருதி மக்கள் பொருட்களை வாங்குகின்றனர். அப்படி இருக்க அந்த விளம்பரங்களில் தோன்றும் கலைஞர்களே பொருளின் தரத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்து மிகவும் சரியானதே.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

உண்மைத்தன்மை
ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருட்களாக கருதப்பட்டதெல்லாம் இப்போது அத்தியாவசியப் பொருள்களாக மாறிவிட்டதற்கு விளம்பரங்களே காரணமாகும். அப்படிப்பட்ட விளம்பரங்களில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும். உண்மைத்தன்மையற்ற பொருட்களின் விளம்பரங்களில் பிரபலமானவர்கள் நடிக்கக் கூடாது. நடித்தால் அவர்களே அப்பொருட்களின் தரத்திற்கு பொறுப்பு.
ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.

நியாயமே
கலைஞர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு விளம்பரங்களில் நடிக்கின்றனர். பொதுமக்களும் பொருளின் தரத்தைப் பற்றி கவலைப்படாமல் தங்களின் அபிமானக் கலைஞர்களின் விளம்பரத்தை மட்டுமே நம்பி, அப்பொருட்களை வாங்குகின்றனர். நம்பிக்கையினை விதைத்த கலைஞர்களே பொருள்களின் 
தரத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பது நியாயமே.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

எப்படி முடியும்!
நடிப்பது கலைஞர்களுக்கு தொழிலாகும். பொருளின் உற்பத்திக்கும், தரத்திற்கும் அவர்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்? மக்களை ஈர்ப்பதற்காக விளம்பரங்களில் கலைஞர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் அதற்கான ஊதியத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். அதோடு அவர்களது கடமை முடிந்துவிட்டது."மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்பது விளம்பரத்திற்கும் பொருந்தும்.
உ. இராஜமாணிக்கம், கடலூர்.

வாய்ப்பு இல்லை
விளம்பரங்களில் தோன்றும் கலைஞர்கள், குறிப்பிட்ட அந்த விளம்பப் பொருளை பயன்படுத்தி இருக்க வாய்ப்பில்லை. விளம்பர நடிப்பிற்குரிய ஊதியத்தை மட்டும் வாங்கிச் செல்பவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படியானால் அந்த விளம்பரத்தைக் காணும் மக்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றுதானே அர்த்தம்? எனவே பொருட்களின் தரத்திற்கு அவர்களே பொறுப்பு.
எஸ்.எஸ்.ஏ. காதர், காயல்பட்டினம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com