கடந்த 23.11.2016 அன்று கேட்கப்பட்ட "நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற கருத்து மிகவும் சரியே.

பணிச்சுமை
நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற கருத்து மிகவும் சரியே. தேர்தலுக்கான செலவுகளை குறைக்கவும், மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் பணிச்சுமைகளை பெருமளவு குறைக்கவும், ஒரே நாளில் தேர்தல் நடத்துவது மிகவும் உதவியாக இருக்கும்.
கி. சந்தானம், மதுரை.

வரவேற்கத்தக்கது
இந்த கருத்து மிகவும் சரியானதுதான். ஏற்கெனவே இந்த முறை நம்நாட்டில் நடைமுறையில் இருந்தது. அப்போது தேசியக் கட்சிகள் வலிமையாக இருந்தன. நேர்மையாகவும் இருந்தன. இடையில் ஏற்பட்ட மெத்தனப் போக்கினால் சில தவறுகள் நடைபெற்றுவிட்டன. இந்தியா வலிமை குன்றத் தொடங்கியது. இன்றைய சூழ்நிலையில் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் முறை வரவேற்கத்தக்கதாகும்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

சாத்தியமல்ல
இந்தக் கருத்து சரியல்ல. சட்டப்பேரவைத் தேர்தல் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை என்றாலும் அது மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு காலகட்டத்தில்தான் வரும். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி, ஆளுநர் ஆட்சி அறிவிப்பு போன்ற காரணங்களால் ஒரு மாநில அரசு செயல்படாதபோது, அங்கு தேர்தல் வரத்தானே செய்யும்! எனவே தேர்தலை சேர்த்து நடத்துவது சாத்தியமல்ல.
அ. யாழினி பர்வதம், சென்னை.

கொள்கைகள்
இக்கருத்து சரியே. அகில இந்திய கட்சிகள் தங்கள் கொள்கைகளை முன்வைத்து மக்களை சந்திக்க முடியும். அப்படி நடக்கும்போது சிறிய கட்சிகள் மறைந்து தேசிய கட்சிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு பெரும் அளவில் பணம் மிச்சமாகும். அரசு அலுவலர்கள் தேர்தலுக்காக மாதக் கணக்கில் நேரத்தை செலவழிப்பது தவிர்க்கப்படும்.
என்.எஸ். முத்துகிருஷ்ணராஜா,
ராஜபாளையம்.

வளர்ச்சிப் பாதை
ஒருமுறை தேர்தலை நடத்துவதற்கான மனித சக்திகளின் உழைப்பும், பணச் செலவும் மிக மிக அதிகம். அதுவே பல முறையானால் என்னவாகும்? ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமெனில் மனித உழைப்பும், தேர்தலுக்கான செலவும், கால விரயமும் மிச்சமாகும். திட்டமிட்ட சமுதாயப் பணிகளும் தடை
களின்றி மக்களைச் சென்றடையும். இதனால் இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்லும்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

நிதர்சனம்
மாநிலங்களில் அமையும் அரசுகள் பெரும்பாலும் ஐந்தாண்டுகள் நீடிப்பதில்லை. ஆனால் எந்தக்காரணத்தால் ஆட்சி கவிழ்ந்தாலும் மீண்டும் ஆறு மாதத்திற்குள் அங்கு தேர்தல் நடத்தியாக வேண்டும். எனவே, நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது நடைமுறைச் சிக்கல்களால் சரிவராது என்பதுதான் நிதர்சனம்.
கே. வேலுச்சாமி, தாராபுரம்.

ஆதிக்கம்
இது சரியான முறையே. இதன்மூலம் தேர்தலுக்குத் தேர்தல் அரசுக்கு ஏற்பட்டு வரும் இரட்டிப்பு செலவு குறைக்கப்படும். ஆனால், இந்த நடைமுறையில் மாநில கட்சிகளைக் காட்டிலும், தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. அதை கையாளுவது தேர்தல் ஆணையத்தின் கையில்தான் உள்ளது. ஒரே நேரத்தில் நாட்டின் இரு முக்கிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
பா. அருள்ஜோதி, மன்னார்குடி.

வாக்களிக்கும் நேரம்
இந்தக் கருத்து சாலச் சிறந்தது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை பல கோடி ரூபாய் வீணாவதைத் தடுக்கலாம். காலம் விரயம் ஆகாது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணிசுமை குறையும். மேலும் காவல்துறை பணியாளர்கட்கும் சிரமம் குறைவு. ஆனால் வாக்களிக்கும் நேரம் சற்றுக் கூடுதலாகும். அதனை சீராக்க வாக்களிக்கும் நேரத்தை அதிகப்படுத்தலாம்.
இரெ. இராமமூர்த்தி, சிதம்பரம்.

தனிக்கவனம்
சில மாநிலங்களில் தேர்தல் முடிந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடையாத நிலையில் அந்த கால இடைவெளியை எப்படிச் சரிசெய்வது? மேலும் நமது தேர்தல் ஆணையம் இவ்வளவு பெரிய பணிச்சுமையைச் சமாளிக்க முடியாமல் திணறும். நாட்டையே ஆள வேண்டிய பொறுப்புக்கு வரக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலை தனிக் கவனத்துடன் தனியே நடத்துவதுதான் சரி.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

தேசிய சிந்தனை
இக்கருத்து மிகவும் சரி. அமெரிக்க அதிபர் தேர்தல் போல் குறிப்பிட்ட ஆண்டு குறிப்பிட்ட மாதம் நாடாளுமன்ற சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்த வேண்டும். மாநிலக் கட்சிகள் மாநில சட்டப்பேரவைகட்கும் தேசியக் கட்சிகள் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் போட்டியிடலாம் என்றால் இமயம் முதல் குமரி வரை தேசிய சிந்தனை வளரும்.
மு. நாச்சியப்பன், சிவகங்கை.

உதிரிக்கட்சிகள்
இந்தியாவில் பல மாநிலங்களில் பல உதிரிக் கட்சிகள் கூட்டணி ஏற்படுத்தி ஆட்சி செய்வதால் ஒருமித்த கருத்து ஏற்பட முடியாது. அவ்வாறு ஆட்சி அமைத்த கூட்டணி கட்சிகள் ஆட்சியைப் பறிகொடுத்த நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆறு மாத காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளதால் ஐந்து வருட காலத்தில் பல இடைத்தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படும்.
முத்து பார்த்தசாரதி, சென்னை.

அத்துமீறல்
இந்தக் கருத்து முழுக்க முழுக்க சரி. நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவதால் அரசாங்கத்திற்கு பெருமளவு செலவுகள் குறையும். இதனால் ஓட்டுபோடும் பொதுமக்களுக்கும் அதிக சிரமம் இருக்காது. இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரம் நடத்துவதால் தீவிர கண்காணிப்பு இருக்கும். அதனால் அரசியல் கட்சிகளின் அத்துமீறல்கள் பெருமளவு குறையும்.
எஸ்.வி. ராஜசேகர், சென்னை.

புதிய விதிகள்
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சிக்கல்தான். மாநில ஆட்சிகளின் பதவிக் காலம் முடிந்தால் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் காலம் வரை மாநிலத்தில் ஆளுநர் ஆட்சியை அனுமதிக்க வேண்டும். அதற்கும் புதிய சட்ட முறைகள், புதிய விதிகள் கொண்டு வரப்பட வேண்டும். ஓராண்டு கால அவகாசமே இருக்கக்கூடிய மாநிலங்களில் மட்டும் ஒரே நேரத்தில் இரு தேர்தல்களையும் நடத்தலாம்.
மகிழ்நன், சென்னை.

பிரசாரம்
இரண்டு தேர்தல்களையும் ஒரே சமயத்தில் நடத்துவது நாட்டுக்கு நல்லது. தேர்தல் ஆணையத்துக்கு செலவும் வேலைப்பளுவும் குறையும். காவல்துறை, ராணுவம் போன்றவர்களுக்கும் அலைச்சல் மிச்சம். தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கும் வெளியூரிலிருந்து வாக்களிக்க வருவோர்க்கும் சிரமம் குறையும். எல்லா கட்சிகளும் ஒரே நேரத்தில் பிரசாரம் செய்து ஆதரவு கோரலாம்.
பைரவி, புதுச்சேரி.

கட்டாயம்
ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை நடைமுறைபடுத்த முடியாது. மாநிலத்தில் ஒரு கட்சியும் மத்தியில் வேறொரு கட்சியும் ஆட்சி நடத்தும்போது, கருத்து மாறுபாட்டால் மாநில அரசைக் கலைப்பதற்கு ஆளுநர் வற்புறுத்தப்படுவார். அந்த மாநில அரசு கலைக்கப்பட்டால் மீண்டும் ஆறு மாதத்தில் தேர்தல் என்கின்ற கட்டாயம் வரும். எனவே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இயலாது.
முருகானந்தம், தாழக்குடி.

நிம்மதி
மாநில சட்டப்பேரவைகளுக்கு அவ்வப்போது தேர்தல் நடந்துக் கொண்டே இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களை நடத்தி அரசியல்வாதிகளை ஆட்சி செய்ய விட்டுவிட்டால் நிம்மதியாக இருக்கலாம். இடையில் ஏற்படும் காலி பதவியிடங்களுக்கு, ஏற்கெனவே பதவியிலிருந்த கட்சியினரையே நியமித்துவிட வேண்டும்.
டி. பஷீருத்தீன், பேரணாம்பட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com