12-10-2016 அன்று கேட்கப்பட்ட "நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள்தொடுக்கப்படுவது சுய விளம்பரத்திற்காகவே என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடுக்கப்படுவது விளம்பரத்துக்காகவே என்று கூறுவது சரியான கருத்தல்ல

பழி தூற்றல்
நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடுக்கப்படுவது விளம்பரத்துக்காகவே என்று கூறுவது சரியான கருத்தல்ல. ஒருவர் தனது நேரத்தை வீணாக்கிக் கொண்டு, பணத்தையும் செலவு செய்து வழக்குத் தொடுப்பதை விளம்பரம் என்று சொல்வது அவரைப் பழி தூற்றுவது போலாகும். சமுதாயத்தில் உள்ள குற்றங்குறைகளைக் களைவதற்கு ஒருவர் முன்வந்தால் அவரைப் பாராட்ட வேண்டும்.
அரு. சுந்தரேசன், வேலூர்.

மன நிறைவு
அரசியல் செல்வாக்கு மிக்க சில நிறுவனங்களின் செயல்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும்போது, சமூக அக்கறையுள்ள சிலர் தாமே முன்வந்து பொதுநல வழக்கு தொடுக்கின்றனர். இதனால், பொதுமக்களுக்கு உதவி செய்தோம் என்கிற மன நிறைவைத் தவிர வேறெதுவும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, பொதுநல வழக்கில் விளம்பர நோக்கம் இல்லை.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

வீணாகும் நேரம்
ஒரு சிலர் பொதுநல வழக்கு என்ற பெயரில் மக்களுக்குப் பயனில்லா விட்டாலும் விளம்பரத்திற்காக நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்து விடுகிறார்கள். இத்தகைய வழக்குகளால் நீதிமன்றத்தின் பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறது. வேறு பல முக்கிய வழக்குகளை விசாரிக்க முடியாமல் போகிறது. பொதுநல வழக்குகள் சுய விளம்பரத்திற்காக தொடுக்கப்படுகிறது என்பது உண்மையே.
கே. வேலுச்சாமி, தாராபுரம்.

நன்மைதான்
பொது நன்மைக்கு பாதகம் விளைவிக்கும் செயலுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடரப்பட்டு அதன்மூலம் நல்ல மாற்றம் ஏற்படுமானால், அம்மாதிரியான வழக்குகளால் சமூகத்திற்கு நன்மையே. ஒரு சிலர் விளம்பரத்திற்காக பொதுநல வழக்கு தொடுக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக பொதுநல வழக்கு சுய விளம்பரத்திற்காகவே என்ற கருத்து ஏற்கக் கூடியதல்ல.
க.மா. சிட்டிபாபு, சென்னை.

பாதுகாப்பு
இன்று நடைமுறையில் இருக்கும் பல நல்ல திட்டங்கள் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டதால் வந்தவைதான். அரசும், அரசு சார்ந்த அமைப்புகளும் தவறான பாதையில் செல்லும்போது, அதை தட்டிக் கேட்க பொதுநல வழக்கு அவசியமான ஒன்று. பொதுமக்களைப் பாதுகாக்கும் ஆயுதம் பொதுநல வழக்குகள். அது சட்டத்தின் ஆட்சிக்கும், ஜனநாயகத்தின் மாண்பிற்கும் உயிராகும்.
த. வேலவன், திருக்கோவிலூர்.

அறியாத உண்மைகள்
எல்லா பொதுநல வழக்குகளும் சுய விளம்பரத்திற்கே என்று சொல்ல முடியாது. பொதுநல வழக்கு மூலமாக, அதுவரை யாரும் அறியாத பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. பொதுநல வழக்கு தொடுப்பதனாலே ஒருவருக்கு விளம்பரம் கிடைத்துவிடாது. பொதுநல வழக்கு தொடுக்கப்படுவது என்பது சமூக நோக்கம் கொண்டது. அதனை விளம்பரம் என்று சொல்வது சரியல்ல.
மா. பழனி, பென்னாகரம்.

உத்தரவு
சில ஆண்டுகளுக்கு முன்பு சாலைகளில் கட் அவுட்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டு போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டது. ஒருவர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். நீதிமன்றம், அத்தனை கட்அவுட்டுகளையும் பேனர்களையும் உடனே அகற்ற உத்தரவிட்டது. எனவே, எல்லா பொதுநல வழக்குகளும் சுய விளம்பரத்திற்கு என்று சொல்ல முடியாது.
ப. அடைக்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

சரியான கருத்து
பெரும்பாலான பொதுநல வழக்குகள் நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு, வழக்கு தொடுத்தவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுவதைப் பார்க்கும்போது பொதுநல வழக்கு போடப்படுவது சுய விளம்பரத்திற்காகவே என்ற கருத்து சரியானதாகத்தான் தோன்றுகிறது. உண்மையிலேயே பொதுநலத்திற்காக வழக்கு தொடுக்க எண்ணினால், ஒரு பொதுநல அமைப்பு மூலமாக தொடரலாம்.
உ. இராஜமாணிக்கம், கடலூர்.

சமூக அக்கறை
பொதுநல வழக்குகள் தொடுக்கப்படுவதற்குக் காரணம் சமூக அக்கறையே. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் அண்மையில் தொடுத்த பொதுநல வழக்கின் காரணமாக, துப்புரவுப் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விளம்பரத்திற்காகவா போடப்பட்டது?
மா.பெ. குருசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர்.

பாராட்டு
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளுக்கு நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுப்பதன் மூலமே தீர்வு காணப்படுகின்றது. ஒருசிலர் சுய விளம்பரத்திற்காக வழக்கு தொடுத்தாலும்கூட ஒட்டுமொத்தமாக எல்லோரையும் அவ்வாறு கூறிவிட முடியாது. ஒருவர் பொதுநலனுக்காக வழக்குத் தொடுக்கிறார் என்றால் அவரைப் பாராட்ட வேண்டும்.
எஸ். நிர்மலாதேவி, பாலவநத்தம்.

மக்கள் பிரச்னை
இந்தக் கருத்து சரியில்லை. பல பொதுநல வழக்குகள் மக்கள் பிரச்னையை மனதில் வைத்தே தொடுக்கப்படுகின்றன. சில பொதுநல வழக்குகள் சுய விளம்பரத்திற்காக அமைந்து விடலாம். நீதிமன்றங்கள் பொதுநல வழக்குகளுக்கு ஒரு சரியான வரைமுறையை ஏற்படுத்த வேண்டும். அந்த வரைமுறைக்குள் வந்தால் அந்த வழக்கை ஏற்கலாம். இல்லையெனில் நிராகரித்துவிடலாம்.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை

நன்மைதான்
இந்தக் கருத்து சரியல்ல. சில விஷயங்கள் பொதுமக்களுக்கு தெரிய வேண்டியதில்லை என்று அரசு தானாகவே முடிவு செய்கிறது. இதுபோன்ற நேர்வுகளில் பொதுநல வழக்கின் மூலம்தான் விவரங்களை அறிந்து கொள்ள முடிகிறது. சமூக ஆர்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்வது, நன்மையில்தான் முடிந்திருக்கிறது.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

ஏற்கக் கூடாது
ஊருக்கு ஒரு நன்மை ஏற்படுமென்றால் அதற்காக பொதுநல வழக்கு தொடரலாம். ஆனால், அரசியல்வாதிகளுக்கு எதிராக தொடுக்கப்படும் பொதுநல வழக்குகள் எல்லாம் சுய விளம்பரத்திற்காகவே. அதனால், தனிப்பட்ட நபருக்கு எதிராக பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டால் அதனை நீதமன்றம் ஏற்கக் கூடாது. பெரும்பாலான பொதுநல வழக்குகள் விளம்பரத்திற்காகவே.
மகிழ்நன், சென்னை.

கட்டாயம் தேவை
கல்விக் கூடங்களில் அதிகக் கட்டண வசூல், வழிபாட்டுத் தலம், கல்வி நிலையம் அருகே மதுக்கடை அமைந்திருத்தல், பொது விநியோகக் கடைகளில் முறைகேடு, பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற அவலங்களை தீர்க்கவே பெரும்பாலும் நீதிமன்றத்தை நாடுகிறோம். இவை சுய விளம்பரத்திற்காக செய்வதல்ல. சமூக அவலங்களுக்குத் தீர்வு கிடைக்க இது கட்டாயம் தேவை.
வி.எஸ். கணேசன், சென்னை.

மிகவும் சரி
நீதிமன்றத்தில் சுய விளம்பரத்திற்காகவே பொதுநல வழக்கு தொடுக்கப்படுகிறது என்பது உண்மையே. வாய்தா, சாட்சி என பல தடைகளை தாண்டி வழக்கை நடத்த வேண்டும். குறைந்த செலவில் தனக்கு அதிக விளம்பரம் கிடைக்க நீதிமன்றங்களில் பொதுநல வழக்கு தொடுக்கின்றனர். சுய விளம்பரத்திற்காகவே பொதுநல வழக்கு தொடுக்கப்படுகிறது என்பது மிகவும் சரியே.
என். சண்முகம், திருவண்ணாலை.

ஆபத்தான செயல்
நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடுக்கப்படுவதை சுய விளம்பரத்திற்காக என்று கொச்சைப்படுத்தக் கூடாது. பின்னணி பலம் உள்ளவர்களை எதிர்த்து பொதுநல வழக்கு போடுபவர்கள், பல வழிகளில் தொல்லைக்கு ஆளாவது உண்டு. பொதுநலத் தொண்டு என்று கருதியே இந்த ஆபத்தான செயலில் இறங்குகிறனர். இதனை சுய விளம்பரம் என்று கூறுவது அபத்தமானதாகும்.
சி. மாயகிருட்டிணன், சென்னை.





























































 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com