14-09-2016 அன்று கேட்கப்பட்ட "ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு அந்தந்த மாநில மொழியில் நடத்தப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?'என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

எல்லாத் தேர்வுகளும் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படுவதே சிறப்பு. அவரவர் மொழியில் தேர்வு நடத்தப்பட்டால்

மாற்றம் தேவை
எல்லாத் தேர்வுகளும் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படுவதே சிறப்பு. அவரவர் மொழியில் தேர்வு நடத்தப்பட்டால் வினாக்களைப் புரிந்து கொள்வதற்கும், விடையளிப்பதற்கும் எளிதாக இருக்கும். ஆங்கில மொழியிலோ  அல்லது ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளிலோ நடத்தப்படும் முறையில் மாற்றம் தேவை. ஒருவர் தனது தாய் மொழியில் தகுதி பெறுவதேசிறப்பு.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

உயர்வானது
நம் நாட்டில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. ஆனால், பிரான்ஸ், கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் வல்லரசு நாடான சீனத்திலும் அவரவர் தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தாய்மொழி வழிக் கல்விதான் உயர்வானது. எனவே, ஐ.ஐ.டி.  படிப்புக்கானநுழைவு தேர்வை அவரவர் தாய்மொழியில் நடத்துவதே சாலச் சிறந்ததாகும்.
ஞானி, கிருஷ்ணாபுரம்.

நிதர்சன உண்மை
ஐ.ஐ.டி. தேர்வில் வெற்றி பெற்று பணிக்குச் செல்ல வேண்டுமானால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறன் உள்ளதா என்றுதான் பார்க்கிறார்கள். மாநில மொழிகளில் தேர்வை எழுதித் தேர்வு பெற்றவர்கள் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெற்றுவிட முடியுமா? ஆங்கில மொழியில் எழுதினால் பரவலாக வேலைவாய்ப்பைப் பெறலாம் என்பதுதான் நிதர்சன உண்மை.
கே. வேலுச்சாமி, தாராபுரம்.

இடர்ப்பாடு
ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி பயில பிற மொழிகளில் தேர்வினை நடத்தும் பொழுது மொழி ஒரு பெரிய இடர்ப்பாடாக உள்ளது. திறமையான மாணவராக இருப்பவர்கூட தாய்மொழி அல்லாத மொழியில் தேர்வை எழுதும்போது சரியாக எழுத இயலாமல் போகிறது. எனவே, அந்தந்த மாநில மொழியிலேயே ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும்.
எம். ஜோசப் லாரன்ஸ், 
சிக்கத்தம்பூர் பாளையம்.

தவறு இல்லை
இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வையே தமிழ் உள்ளிட்ட எல்லா மாநில மொழிகளிலும் எழுத முடியும் என்று ஆகிவிட்ட பிறகு ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் நடத்துவதில் எந்தவித தவறும் இல்லை. அதே நேரத்தில் நாம் தாய் மொழியோடு நின்றுவிடாமல் ஆங்கிலத்தையும் இந்தியையும் கற்றுக்கொள்வது நல்லது.
க. சுல்தான் ஸலாஹீத்தீன், 
காயல்பட்டினம்.

தேசிய நீரோட்டம்
ஐ.ஐ.டி. தேர்வுகளை மாநில மொழியில் நடத்துவது சரியல்ல. பொது மொழியாகிய ஆங்கிலம் அல்லது தேசிய மொழியாகி இந்தியில் நடத்துவதே சாலச் சிறந்தது. குறுகிய எண்ணங்களை விட்டொழித்து, தேசிய நீரோட்டத்தில் வருங்கால இளைஞர்களை கலக்கச் செய்து, ஏற்றம் பெறச் செய்ய வேண்டும். எனவே, மாநில மொழியில் ஐ.ஐ.டி. தேர்வு நுழைவுத் தேர்வு என்பது சரியல்ல.
கே. கோவிந்தராஜன், அல்லூர்.

புது வசந்தம்
சரியே. அந்தந்த மாநில மொழியுடன் ஆங்கில மொழியிலும் வினாத்தாள் அமைய வேண்டும். தொழில்நுட்ப வார்த்தைகளைப் புரிந்துகொள்ள ஆங்கிலம் உதவும். தாய்மொழியின் மூலம் எழுதும் தேர்வே ஒரு மாணவனின் முழு திறமையை அறிய உதவும். கிராமப் பகுதி மாணவர்கள் அச்சமின்றி தேர்வை எதிர்கொள்வார்கள். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு புது வசந்தம் கிடைக்கும்.
சோ. இராமு, செம்பட்டி. 

நியாயமல்ல
இந்த கருத்து சரிதான். வட மாநிலங்களில்கூட இந்தி பொது மொழியாக இருப்பினும், அந்தந்த மாநில மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்தியா போன்ற நாட்டில், ஒரு மொழித் தேர்வு என்பது நியாயமானதாக இருக்க முடியாது. இந்தியாவில் உள்ள அனைவரும் கல்வி, வேலைவாய்ப்புகளில் சமஉரிமை பெற வேண்டுமெனில், மாநில மொழித் தேர்வே நியாயமானது.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

சரிவராது
இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி.) தேசிய அளவிலான தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு. இதற்கென்றே தேசிய அளவில் உருவாக்கப்பட்ட ஒரே மாதிரியான பாடத் திட்டமும், பயிற்றுவிப்பு முறையும் நிபுணர்களால் வரையறுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் இதற்கான நுழைவுத் தேர்வை, மாநில மொழியில் நடத்த வேண்டும் என்பது சரிவராது.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

ஒருமைப்பாடு
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்கிற கருத்து சரியே. அவரவர் திறமை மூலம் நுழைவுத் தேர்வுகளில் வெற்றியடைய வாய்ப்புண்டு. இந்திய தேசிய ஒருமைப்பாட்டை இதன் மூலம் நிரூபணம் செய்ய முடியும். உண்மையான திறமையாளருக்கு வாய்ப்புக் கிடைக்க வழியுண்டு; இக்கருத்தில் மொழியொன்றும் தடையாகாது.
சு. இலக்குமணசுவாமி, மதுரை.

ஜனநாயகம்
தாய்மொழி சிந்தனைதான் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலியது. மத்திய அரசு பணிகளில் வடமாநிலத்தவர் தாய்மொழியில் தேர்வு எழுதி தென்னிந்தியரின் பணியை தட்டிப் பறிக்கின்றனர். ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வை ஆங்கிலம், இந்தியில் நடத்தி மாநில மொழியை புறந்தள்ளுகின்றனர். அனைத்து தேர்வுகளையும் அந்தந்த மாநில மொழியில் நடத்துவதே ஜனநாயகம்.
த. வேலவன், திருக்கோவிலூர்.

வேலைவாய்ப்பு
ஐ.ஐ.டி.யில் தேர்ச்சி பெற்றவுடன் பெரும்பாலும் வெளிநாடுகளில்தான் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. நம் நாட்டில் வேலையில் சேர்ந்தாலும் அந்த நிறுவனமே வெளிநாடு செல்ல நிர்ப்பந்திக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நுழைவுத் தேர்வு ஆங்கிலத்தில் நடப்பதுதான் சரி. தாய்மொழிப்பற்று வாழ்க்கைக்கு அவசியம் என்றாலும் உலகளாவிய வேலைவாய்ப்புக்கு ஆங்கிலமே அவசியம்.
உ. இராஜமாணிக்கம், கடலூர்.

கலாசார ஒற்றுமை
ஐ.ஐ.டி. தேர்வினை அந்தந்த மாநில மொழிகளிலே நடத்தினால் பிராந்திய மொழிகளிலே கல்வி கற்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்று உன்னத நிலையை அடைய முடியும். தேசிய ஒருமைப்பாடு ஏற்படும். இந்தி படித்தவர்கள் உயர்ந்தவர், மாநில மொழிகளில் படித்தவர் தாழ்ந்தவர் என்ற நிலை மாறிவிடும். வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் கலாசார ஒற்றுமையும் ஏற்படும்.
செ. இராசேந்திரன், பாடாலூர்.

மொழிக்கு அல்ல
வட மாநிலங்களில் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு நடத்தும்போது ஆங்கிலத்திலும் இந்தியிலும் வினாத்தாள்கள் தரப்படுகின்றன. அதுபோல பிற மாநிலங்களிலும் ஆங்கிலத்திலும் அந்தந்த மாநில மொழிகளிலும் வினாத்தாள்கள் தரப்பட வேண்டும். மதிப்பெண் என்பது திறமைக்குத்தானே தவிர மொழிக்கல்ல. எந்தத் தேர்வும் தாய்மொழியில் எழுதும்போது எளிதாக இருக்கும்.
கோ. ராஜேஷ் கோபால், அருவங்கோடு.

வீண் முயற்சி
ஐ.ஐ.டி. போன்ற தேர்வுகளில் மாநில மொழியில் தேர்வு எழுதி வெற்றி பெறுவது என்பது அரிது. மேலும் ஐ.ஐ.டி. தேர்வு எழுதி முடித்து விட்டு பலதரப்பட்ட இடங்களுக்கு பணிபுரிய செல்பவர்களுக்கு அவசியம் தேவை தொடர்பு மொழியான ஆங்கிலம்தான். இந்தியாவில் எந்தத் தொடர்புக்கும் பயன்படுவது ஆங்கிலம்தான். ஆகவே தேவையில்லை இந்த வீண் முயற்சி.
ஆ. ஜெயபிரகாசம், சென்னை.

சம வாய்ப்பு
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகள் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட்டால் தேர்வின் ஆய்வாளர்கள், தமது மொழியில் எழுதுபவர்களுக்கு நிறைய மதிப்பெண்கள் தர விரும்பலாம். வெவ்வேறு மொழிகளில் அமையும் விடைகளைத் தரம் பிரிப்பது கடினம். எல்லா விடைகளும் ஆங்கிலத்தில் இருந்தால் அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்புகள் இருக்கும்.
எம்.ஏ. ராஜசேகரன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com