21-09-2016 அன்று கேட்கப்பட்ட "அரசியல் தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்வது தேவையற்றது என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

அரசியல் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்வது தேவையற்றது.

சரியல்ல
அரசியல் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்வது தேவையற்றது. கைதிகள் அவர்களின் நன்னடத்தைக்கு ஏற்ப தண்டனைக் காலத்திற்கு முன்பாக விடுதலை செய்யப்படுகிறார்கள். ஒரே நாளில் பல பேரை விடுதலை செய்வது சரியல்ல. அப்படிச் செய்வது, தான் செய்தது குற்றம் என்றுகூட உணராத கைதிகளை மீண்டும் குற்றவாளியாக்கவே வழி வகுக்கும்.
ஜெயந்தி சாமிநாதன், சென்னை.

நியாயமா?
குற்றச் செயலில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட கைதிகளை அவர்களின் தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுதலை செய்வதென்பது நியாயமா? இதனால், குற்றவாளிகளுக்கு சிறைச்சாலை குறித்த பயமே இல்லாமல் போய்விடும். எனவே, அரசியல் தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கைதிகளை முன்கூட்டிய விடுதலை செய்யக்கூடாது.
கே. வேலுச்சாமி, தாராபுரம்.

வீண் செலவு
சிறைக் கைதிகள் காலமெல்லாம் சிறையில் தங்கள் வாழ்நாளைக் கழிப்பது நல்லதல்ல. அவர்கள் செய்த தவறை உணர்ந்த பிறகு அவர்களை விடுதலை செய்வதே நல்லது. மேலும், கைதிகளுக்காக அரசு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை வீணாக செலவு செய்து கொண்டு இருக்கிறது. எனவே, அரசியல் தலைவர்களின் பிறந்த நாளில் கைதிகளை விடுவிக்கலாம்.
ஏரல் ரஸீக் காஷிஃபி, சென்னை.

தனித்தகுதி
அரசியல் தலைவர்கள் என்று சொல்வதற்கு ஒரு தனித் தகுதி வேண்டும். அக்காலத் தலைவர்கள் பொதுநலவாதிகளாக, தன்னலமற்றவர்களாக, மக்களுக்குச் சேவை செய்தனர். அப்படிப்பட்ட தலைவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் அர்த்தமுண்டு. ஆனால், எல்லா அரசியல் தலைவர்களும், தகுதி படைத்தவர்கள் என்று கூற இயலாது. எனவே, இத்திட்டம் தேவையற்றது.
ஆ. கிருஷ்ணன், சென்னை.

வருந்துவதற்கல்ல
கொடுங்குற்றம் செய்தோரைத் தவிர ஏனைய கைதிகளை விடுதலை செய்வதில் தவறில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் உணர்ச்சிவசப்பட்டு குற்றம் செய்துவிட்டு சிறையில் தண்டனை அனுபவிப்பவர்களை விடுவிக்கலாம். குற்றத்தின் தன்மை கடுமையாய் இருந்தாலொழிய ஏனைய சிறு குற்றம் செய்பவர்களை விடுதலை செய்வது சரிதான். திருந்துவதற்கே சிறைவாசம்; வருந்துவதற்கல்ல!
உ. இராஜமாணிக்கம், கடலூர்.

தவிர்க்க முடியாது
குற்றம் புரிந்தவர் தண்டனையை அனுபவிப்பதுதான் முறை. நீதிமன்றத்தில் சாட்சிகள், ஆவணங்கள் அடிப்படையில்தான் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்படுகிறது. அந்த தண்டனையை குற்றவாளிகள் முழுமையாக அனுபவித்தால்தான் அவர்கள் ஓரளவுக்காவது திருந்துவார்கள். முன்கூட்டியே விடுதலை செய்தால் அவர்கள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுவதைத் தவிர்க்க முடியாது.
என். சண்முகம், திருவண்ணாமலை.

முன்னுதாரணம்
சமூக பிரக்ஞையுள்ள தலைவர்களின் பிறந்த நாளில் சிறைக் கைதிகளை விடுவிப்பது சரிதான். அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு இனியாவது நல்வழியில் நடக்க வேண்டும் என்ற எண்ணம் குற்றவாளிகள் மனதில் உருவாகும். சிறந்த தலைவர்களின் பிறந்தநாளில் சிறையிலுள்ளவர்களை விடுவிப்பது என்பது அந்தத் தலைவர்களை பெருமைப்படுத்துவதாகும்.
பொன் நடேசன், சின்ன அய்யம்பாளையம்.

ஊக்குவிப்பு
சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தவறு. சிறையில் இருப்பவர்கள் மனதில் நம்மை முன்கூட்டியே விடுதலை செய்து விடுவார்கள் என்கிற எண்ணம் ஏற்பட்டு விடும். முன்கூட்டியே விடுதலை செய்வது, தவறு செய்பவர்களை ஊக்குவிக்கும் செயலாகிவிடும். கைதிகளை அவர்களின் நடத்தையை வைத்தே விடுதலை செய்ய வேண்டும்.
வி.எஸ். ராமு, செம்பட்டி.

தேவையற்றது
சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்து விட்டு சிறையில் கைதிகளாக இருப்பவர்களை தண்டனை காலம் முடிவதற்கு முன்பாகவே விடுதலை செய்வதில் தவறில்லை. ஆனால், குறிப்பிட்ட தலைவரின் பிறந்த நாளன்று சிறைக்கைதிகள் விடுதலை என்பது இத்தனை பேரை விடுவித்தோம் என்று கணக்குக் காட்டவும், தங்கள் தலைவரின் பெயரால் விளம்பரம் தேடவுமே. இது தேவையற்றது.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

நன்னடத்தை
சிறைச்சாலை என்பது வெறும் தண்டனைக் கூடமல்ல. இங்கும் சிலர் தங்கள் தவறுக்காக வருந்தி தங்களால் இயன்ற நல்ல செயல்களை செய்கின்றனர். இதன் காரணமாக நன்னடத்தை உள்ளவர்களாக அவர்கள் கருதப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் அரசியல் தலைவர்களின் பிறந்தநாளில் விடுதலையாவதால் அந்தத் தலைவர்களின் வழியைப் பின்பற்றி வாழ்வில் உயரக்கூடும்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

அதிகாரம் உண்டா?
அரசியல் தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கைதிகளை விடுதலை செய்வது தேவையற்றது. அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வந்தால் கைதிகள் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகுமா? நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்ட சிறைத் தண்டனைக் காலத்தைக் குறைப்பது நீதிமன்றத்தை அவமதித்த குற்றமாகும். சிறைத் தண்டனைக் காலத்தைக் குறைக்க அரசுக்கு அதிகாரம் உண்டா?
ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.

பயிற்சிக் கூடம்
சிறைச்சாலை என்பது தவறு செய்தவன் தன்னைத் திருத்திக் கொள்ளும் பயிற்சிக் கூடமே. அப்படியிருக்க நன்னடத்தையுள்ள கைதிகளை விடுதலை செய்வதில் தவறு இல்லை. ஆனால், தலைவர்களின் பெயரைச் சொல்லி ஆளும்கட்சியின் ஆதரவாளர்களை மட்டும் விடுவிப்பது தவறான நடைமுறை. தவறை உணர்ந்து திருந்திய சிறைக் கைதிகளை அரசியல் தலைவர்களின் பிறந்த நாளில் விடுவிக்கலாம்.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

குறுக்கீடு கூடாது
வருடக்கணக்கில் சிறையில் இருந்த தியாகிகளுக்கு இம்மாதிரியான சலுகைகள் இல்லை. சிறைக்கைதிகளை நம் விருப்பம்போல் விடுதலை செய்வது, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை அவமதிக்கும் செயலாகும். நீதிமன்றச் செயல்பாடுகளில் அரசியல்வாதிகள் குறுக்கிடக் கூடாது. தண்டனைக் காலத்தில் கைதிகளை நல்வழிப்படுத்தி, தண்டனைக் காலம் முடிந்தபின் விடுதலை செய்வதுதான் சரி.
டி.வி. சங்கரன், தருமபுரி.

ஆபத்தானது
அரசியல் தலைவர்களின் பிறந்த நாளில் கைதிகளை விடுவிப்பது என்பது கைதிகள் செய்த குற்றங்களை தலைவர்கள் மன்னிப்பது போல உள்ளது. குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பு சொல்ல நீதிபதிகள் இருக்கிறார்கள்.கைதிகளின் நல்லெண்ண நடவடிக்கையைப் பார்த்து தண்டனையைக் குறைக்கலாமே தவிர இதுபோன்று காரணங்களைச் சொல்லி அவர்களை விடுதலை செய்வது ஆபத்தானது.
எஸ்.வி. ராஜசேகர், சென்னை.

தக்க தருணம்
தான் செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்று பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்கள், நிச்சயம் மனம் திருந்திய நிலையில்தான் இருப்பார்கள். நம் பாரத நாடு ஒரு ஜனநாயக நாடு. குற்றவாளிகள் மனம் திருந்தி தன் வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்ள இதுவே தக்க தருணம். எனவே, அரசியல் தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்வது சரியே.
சு. இலக்குமணசுவாமி, மதுரை.

குற்றம் அதிகரிக்கும்
நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. அப்படியிருக்க, அரசே விடுதலை செய்வதென்பது குற்றங்கள் அதிகரிக்கவே வழி செய்யும். இதனால், விரைவில் வெளியில் வந்துவிடலாம் என்ற எண்ணம் குற்றவாளிகள் மனதில் உருவாகும். எனவே, அரசியல் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறைக்கைதிகள் விடுதலை என்பது தேவையற்றது.
க.மா. சிட்டிபாபு, சென்னை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com