"குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு - குற்றச்சாட்டு சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு என்னும் குற்றச்சாட்டு சரியானதல்ல. நமது பாரதப் பிரதமர் மோடி தகுதிக்கு இதுபோன்ற அபாண்டமான குற்றச்சாட்டைக் கூறி இருப்பது அனைத்துத் தரப்பினரையும்

சரியானதல்ல

குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு என்னும் குற்றச்சாட்டு சரியானதல்ல. நமது பாரதப் பிரதமர் மோடி தகுதிக்கு இதுபோன்ற அபாண்டமான குற்றச்சாட்டைக் கூறி இருப்பது அனைத்துத் தரப்பினரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. அவர் தேர்தல் பிரசாரத்தில் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி வெற்றி பெற நினைப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. பாகிஸ்தான் எண்ணம் அதுவாக இருக்கலாம். ஆனால், பாரத மண்ணில் தோன்றிய எந்த ஒரு குடிமகனும் மாற்றானுக்கு நம் தேசத்தை அடகு வைக்க மனம் துணிய மாட்டான்.

சி. குறளமுதன், தே.பவழங்குடி.

தவறான முன்னுதாரணம்

குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு என்று குற்றஞ்சாட்டுவதும், அக் குற்றத்தை மத்தியில் ஆளுங்கட்சி கூறுவதும், அதை இந்தியாவில் முன்னர்ஆட்சி செய்தோர் மீது கூறுவதும் மிகவும் மலிவான, பலவீனமான நிலையைக் குறிப்பதாகும். தங்கள் ஆட்சியின் சாதனைகளையும், இனிமேல் செய்ய இருக்கும் திட்டங்களையும் கூறி அல்லவா வாக்குக் கேட்க வேண்டும்? மக்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய பிரச்னையாகிய அந்நிய நாட்டுத் தலையீட்டை ஆளுங்கட்சி கையிலெடுத்திருப்பது மிகவும் தவறான முன்னுதாரணமாகும். 

அ. கருப்பையா, பொன்னமராவதி.

அந்நியத் தலையீடு

எதிரணியினர் இக்கருத்தை முழுமையாக மறுக்கவில்லை. மணிசங்கர் அய்யர் இல்லத்தில் முன்னாள் மூத்த அரசியல் தலைவர்கள் "நாட்டின் வளர்ச்சி' பற்றிப் பேசியதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாதம். பாகிஸ்தானின் முக்கியப் பிரமுகர்கள் இருந்தார்களா? இல்லையா? தெரியவில்லை. பிரதமரே பகிரங்கமாகக் கூறியுள்ளதால் உண்மை நிலையை அறிவது நல்லது. இந்திய ஜனநாயகத்தில் அந்நியத் தலையீடு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.

ச.கந்தசாமி, சிந்தலக்கரை.

இயலாமையைக் குறிப்பது

குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு என்ற குற்றச்சாட்டு சரியில்லை. அவ்வாறு குற்றம் சாட்டுவது நம்முடைய இயலாமையைக் குறிப்பது. அப்படியே பாகிஸ்தான் தலையீடு இருந்தால் நம்முடைய அரசு இயந்திரங்கள் என்ன செய்கின்றன? இதுவரை அந்நிய சக்திகளை நாம் நம்முடைய தேர்தலில் குறிப்பிட்டதில்லை. இது வருங்கால அரசியலுக்கு ஆரோக்கியமன்று. அமெரிக்கத் தேர்தலில் ரஷியா தலையீடு என்ற அமெரிக்கா கூற்றைப் பார்த்து இப்படி கூறுகிறார்களோ?

டி.ஆர். ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

சரியே

குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு - குற்றச்சாட்டு சரியே. ஒரு மாநிலத்தில் தேர்தல் நடக்கும்போது அடுத்த மாநிலம் அதில் தலையிட முடியாது. இப்படி இருக்கும்போது அண்டை நாடான, அதுவும் சர்வாதிகார நாடான, பாகிஸ்தான் தலையிடுவது முறையன்று. நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. குஜராத் மாநிலம், பிரதமர் மோடி நிர்வகித்த மாநிலம் என்பதால் இவ்வாறு பாகிஸ்தான் தேவையின்றி தலையிடுவது சரியன்று. 

ப. தாணப்பன், தச்சநல்லூர்.

மலிவுப் பிரசாரம்

குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு என்று மத்திய அரசு ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறக் கூடாது. ஆதாரங்களையும் வெளிப்படுத்த வேண்டும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் - குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி போன்றோர் மீது சதிகுற்றம் செய்ததாக மலிவுப் பிரசாரத்தில் அரசு ஈடுபடக் கூடாது. குஜராத் மாநிலத் தேர்தலில் வெற்றிபெற இப்படிப்பட்ட அவதூறுகளை அள்ளி வீசக் கூடாது.

எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

கண்ணியம் காக்கப்படட்டும்

ஜனநாயகம் விரும்பிய முஷாரப் ஆட்சியில் இருந்தபோது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங் இந்தியா - பாகிஸ்தான் உறவுக்கு வழிவகுக்க ஆர்வம் காட்டவில்லை. இன்றைக்கு குஜராத் தேர்தல் வேளையில் அதுகுறித்து "விவாதிக்கப்பட்டது' என அவர் கூறுவது, இன்றைய பிரதமரது ஐயத்திற்கு ஏதுவாகிறது எனலாம். இதே தருணம், ஜனநாயகம் பேணும் வகையில் கருத்துச் சுதந்திரம் மதிப்பு பெற வேண்டும்; எத்தரப்பிலும் கண்ணியமுடன் காக்கப்பட வேண்டும்.

எஸ்.ஜி.இசட்கான், திருப்பூர்.

குற்றச்சாட்டு சரியே!

மோடி பாரதப் பிரதமரான பின் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் எல்லை மீறிய பயங்கரவாத தாக்குதல்களுக்கு அதிரடி ராணுவத் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள பாகிஸ்தான் நிர்வாகம் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜகவைத் தோற்கடிப்பதன் மூலம் அவரின் செல்வாக்கை குறைக்க எண்ணுகிறது. எனவே குஜராத்தில் பாகிஸ்தானின் தலையீடு என்ற குற்றச்சாட்டு முற்றிலும் சரியே!
பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

வீண் பழி!

குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு - என்ற குற்றச்சாட்டு சரியல்ல. குஜராத் இன்று இந்தியாவையே ஆட்டிப் படைக்கிறது. குஜராத் வாக்காளர்கள் மிகவும் தெளிவானவர்கள். தங்கள் மனசாட்சிப்படியே வாக்களிப்பார்கள். ஆதலால் பாகிஸ்தான் மீது வீண் பழி போடுவது சரியல்ல.

ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

நம்புதற்குரியதல்ல!

குற்றச்சாட்டிற்கு முன்னர் உண்மையை சந்தேகமற தெரிந்து கொள்வதுதான் விவேகம். குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு என்ற குற்றச்சாட்டு சரியல்ல. பகை நாடாக இருந்தபோதிலும்கூட யோசித்தே சொல்லியிருக்க வேண்டும். ராஜீய உறவுக்கு என்றும் ஊறு நேரக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கண்ணியமாகும். ஒரு மாநிலத் தேர்தலில் இன்னொரு நாடு தலையீடு என்பது நம்புதற்குரியதல்ல!

என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.

ஏற்கத் தகுந்த விளக்கமல்ல

சர்வதேச உறவுகள் என்று வரும்போது, நாட்டில் அதிகாரத்தில் உள்ள தலைவர்களும் அதிகாரிகளும் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடத்துவர் என்று கூற முடியாது. ஆனால் பாகிஸ்தானுடன் அனைத்துவிதமான பேச்சுவார்த்தைகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் அளவிலான பேச்சும் கிடையாது. எனவே, தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தனிப்பட்ட முறையில் இரு நாட்டு முக்கியப் புள்ளிகள் விருந்தில் சந்தித்து உணவருந்தினர் என்று கூறுவதும், நாட்டின் முன்னாள் குடியரசு துணைத் தலைவரும் பிரதமரும் விருந்தில் கலந்து கொண்டனர் என்பதும் ஏற்கத் தகுந்த விளக்கமல்ல.

கே.வி.விஜி, சென்னை.

முதிர்ச்சி தேவை

குற்றச்சாட்டு சரியில்லை. தேசப்பற்றில் தேசிய கட்சிகள் இரண்டின் தலைவர்களும் எவ்விதத்திலும் குறைந்தவர்களல்ல. இல்லையெனில் இரு நாட்டுக்கும் இடையில் இன்றளவும் பதற்றம் இருக்குமா? பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரும், மணிசங்கர் அய்யரும் கல்லூரி நண்பர்கள் என்ற முறையில் சந்தித்ததாக விளக்கம் தந்த பிறகு குற்றச்சாட்டு ஏற்புடையதாகாது. நட்பு வேறு; நாடு வேறு என்ற சிந்தனை முதிர்ச்சி தேவை!

உ. இராசமாணிக்கம், கடலூர்.

குற்றச்சாட்டு உண்மை!

குஜராத் தேர்தல் என்பது பாஜகவுக்கு ஒரு கௌரவப் பிரச்னை, குறிப்பாக பிரதமர் மோடிக்கு! அவர் சறுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்பும் என்பது எதிர்பார்கக் கூடியதே. அதனால் அது மறைமுகமாக தலையிடும் என்பதும் ஏற்கக்கூடியதுதான். ஆனால், எவ்வாறு அதன் தலையீடு இருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடியாது. பிரதமருக்கு உளவுப் பிரிவுத் தகவல் ஏதும் கிடைத்ததா என்பதும் தெரியவில்லை. ஆனால், மோடியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இருக்காது என்பதே சராசரி இந்தியனின் எண்ணம்!

கலைப்பித்தன், கடலூர்.

தவிர்க்க வேண்டும்

ஏற்கெனவே இந்தியாவை ஆட்சி செய்த கட்சி, இனிமேல் ஆட்சி செய்ய வாய்ப்பை எதிர்பார்க்கும் கட்சி, நமக்குப் பலவிதமான இன்னல்கள் கொடுத்து வரும் பாகிஸ்தான் நாட்டு நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தவிர்க்க வேண்டிய செயலாகும். அரசியலில் எதிரி செய்யும் பிழையைப் பெரிதாக்குவது அனைத்துக் கட்சிகளும் செய்யக் கூடியதே. எனவே குற்றச்சாட்டு சொல்பவர்களிடம் குறை காண முடியாது. குற்றச்சாட்டு வராமல் பாகிஸ்தான் விஷயத்தில் கவனமாக நடந்துகொண்டால் விமர்சனங்கள் வராது.

மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com