"வாழும்போது தரப்படாவிட்டால் விருதுக்கு மதிப்பு இருக்காது என்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சரிதான். விருது என்பது ஒருவரின் சாதனைகளுக்கு வழங்கப்படும் கெளரவம் ஆகும்.

கெளரவம்

சரிதான். விருது என்பது ஒருவரின் சாதனைகளுக்கு வழங்கப்படும் கெளரவம் ஆகும். அந்த கௌரவம் வாழும்போதே கிடைத்தால்தான் சாதனை செய்தவர்க்கு மகிழ்ச்சி ஏற்படும். காந்தி, நேரு போன்ற தலைவர்களுக்கு அவர்கள் உயிரோடு இருந்தபோது வழங்காத விருதுகளை இப்போது வழங்குவதால் என்ன பயன்? உயிர் நீத்தவர்களுக்கு வழங்கப்படுவதால் விருதுக்கு மரியாதை இல்லை.

மகிழ்நன், சென்னை.

தூண்டுதல்

ஒருவரின் இறப்புக்குபின் விருது என்பது காவல்துறை, ராணுவம் போன்றவற்றிற்கு மட்டுமே பொருந்தும். பிற துறைகளில் சாதனை புரிந்தோருக்கு வழங்கப்படும் விருதுகள் அவர்கள் உயிரோடிருக்கும்போதே வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்த விருது பெறுபவர்களுக்கு உற்சாகம் கிடைப்பதோடு, அவர்கள் மேலும் பல சாதனைகள் படைக்க அவ்விருது தூண்டுகோளாகவும் அமையும்.

சோ. இராமு, செம்பட்டி.

நடுநிலை

சிலருடைய உழைப்பும் சாதனைகளும் அவருடைய இறப்பிற்குப் பின்பே சமுதாயத்திற்கு முழுமையாகத் தெரியவரும். அப்போது அவர்களுக்கு விருது தருவதுதானே முறை? எனவே வாழும்போது மட்டுமல்ல, வாழ்க்கைக்குப் பிறகு விருது வழங்கப்பட்டாலும் அதற்கு மதிப்பு இருக்கும். எனவே, இந்தக் கருத்து ஏற்புடையதல்ல. ஆயினும் நடுநிலை தவறாது விருதுகள் தரப்பட வேண்டும்.

உ. இராஜமாணிக்கம், கடலூர்.

உண்மை

பசித்தவனுக்கு உணவு, நோயாளனுக்கு மருந்து இதுதானே உலகியல் உண்மை. தனது சாதனைக்காகவோ தியாகத்திற்காகவோ விருது பெறுபவர் உயிரோடு இருந்தால் பெரிதும் மகிழ்ச்சியடைவார். அதன் மூலம் அவரால் பல சாதனைகள் சமூகத்திற்கு கிடைக்கும். மறைந்தபின் கொடுக்கும் விருதால் யாருக்கு என்ன பலன்? எனவே இக்கருத்து முற்றிலும் சரிதான்.

ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

மதிப்பு

இறந்த பிறகு தரக்கூடிய விருதுக்கு மதிப்பில்லை என்பது மட்டுமல்ல, அது சம்பந்தப்பட்டவரை அவமதிக்கக்கூடிய ஒரு செயலுமாகும். ஒருவர் வாழும்போது செய்த சாதனைகள் அவர் இறந்த பிறகுதான் விருது கொடுப்பவர்களின் கண்களுக்குத் தெரியுமா? உரிய காலத்தில் தரப்படும்போதுதான் ஒரு விருது மதிப்புக்குரியதாக போற்றப்படும்.

பொன் நடேசன்,சின்ன அய்யம்பாளையம்.

அவசியமல்ல

ஒருவர் இறப்பிற்குப் பின் அவருக்கு விருது வழங்குவதில் என்ன தவறு? நாட்டைக் காக்கும் வீரர்கள் களத்தில் தங்கள் இன்னுயிரை இழக்கிறார்கள். அவர்களின் தியாகத்தை நாம் போற்ற வேண்டாமா? இறப்பிற்குப் பின் அவருக்கு விருதினை வழங்காவிட்டால் நாம் நன்றி கொன்றவர்களாகி விடுவோம். எனவே, விருதினைப் பெறுவோர் உயிரோடு இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல.

செ. சத்தியசீலன், கிழவன் ஏரி.

பயனில்லை

சமூகச் சிந்தனையோடு எழுதக்கூடிய எந்த எழுத்தாளரும் விருதிற்காக எழுதுவதில்லை. அவர்கள் வறுமையிலும் செம்மையான வாழ்வு வாழ்ந்தவர்கள். இருப்பினும் அவர்களும் ரத்தமும், சதையும் நிறைந்த உணர்ச்சியுள்ள மனிதர்கள்தான் என்பதை மறக்கலாகாது. அவர்கள் வாழ்ந்து முடிந்தபின் விருதுகள் வழங்குவதால் அவர்களுக்கும் பயனில்லை. விருதிற்கும் மதிப்பில்லை.

எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.


மகிழ்வு

விருது பெறத் தகுதியிருக்கும் நபருக்கு அவர் வாழும் காலத்தில் அவர் கையில் விருது கொடுப்பதே சிறந்ததாகும். விருது பெறுகின்றவர் அதனால் மகிழ்ச்சி அடைவார். அந்த விருது தனது தகுதிக்குப் பொருத்தமற்றது என்று அவர் கருதினால், அதை மறுப்பதற்கும் அவருக்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே ஒருவர் வாழும்போது விருது கொடுப்பதுதான் மிகவும் நல்லது.

மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

சிறப்பு

விருது பெறுபவரைப் பலரும் பாராட்டுவதற்கும், அவர் மேலும் தன்னைத் தகுதியாக்கிக் கொள்வதற்கும் வாழும் காலத்தில் விருது அளிப்பட்டால்தான் முடியும். வீரதீரச் செயல் புரிந்தோருக்கு இறந்த பின்பு விருதுகள் அளிக்கப்படுகின்றன. ஆனால், அதன் பின்னர் அவர்களது குடும்பங்கள் கௌரவிக்கப்படுகின்றன என்பதால் அது சரியே. பிற விருதுகளை வாழும் காலத்தில் அளிப்பதே சிறப்பு.

அ. கருப்பையா, பொன்னமராவதி.

வாய்பில்லை

இக்கருத்து சரியல்ல. ஒருவருக்கு விருது வழங்கப்படுகிறதென்றால் அவரை காட்டிலும் அவரைச் சார்ந்தவர்களும் அவருடைய சாதனைக்குத் துணையாயிருந்தவர்களுமே பெரிதும் மகிழ்வுறுவர். மேலும் வீர தீர சாகச செயல்களுக்கு தரப்படும் விருதுகள் வாழும்போது தரப்படுவதற்கு வாய்ப்பில்லை. எனவே வாழும்போது தரப்படாவிட்டால் விருதுக்கு மரியாதை இல்லை என்பது தவறு.

வரதன், திருவாரூர்.


ஊக்கம்

ஒரு சாதனையாளர் வாழும்போதே அவருக்கு விருது தரப்படுவதுதான் மரியாதையும், பண்பும் ஆகும். அதனால் அவர் பெறக்கூடிய பெருமைக்கும், மகிழ்ச்சிக்கும் ஈடு வேறேதும் கிடையாது. இதனால் அவர் ஊக்கமுற்று முன்னிலும் தீவிரமாக அத்துறையில் முனைப்பு காட்டி நாட்டிற்கு நலம் பயக்க செய்யக்கூடும். அவர் மறைவுக்குப்பின் விருது பெறுவதால் எந்தப் பயனும் இல்லை.

என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.


உத்வேகம்

எந்த விருதுமே ஒருவர் வாழும்போது தரப்படாவிட்டால் அந்த விருதுக்கு மதிப்பில்லை. ஒருவரின் சாதனைக்காகவே விருது வழங்கப்படுகிறது. அதனை அவர் உயிருடன் இருக்கும்போது வழங்கினால்தான் அதனை மகிழ்வோடு ஏற்றுக் கொள்வதுடன் அவர் மென்மேலும் பல சாதனை புரிய அது ஒரு உத்வேகத்தையும் கொடுக்கும். எனவே வாழும்போதே விருதுகள் வழங்கப்பட வேண்டும்.

எம்.எஸ். இப்ராகிம், சென்னை.


பெரும் கொடை

வாழ்வுக்குப் பின்னரே பலரது நற்பணிகள், தியாகங்கள் உலகுக்குத் தெரியவருகின்றன. ஒருவரது வாழ்வுக்குப் பின்னர் வழங்கப்படும் விருது, அவரது தலைமுறைக்கு அவரால் கிடைத்த பெருமைமிக்க பெரும் கொடை. வாழும்போது தரப்படும் விருதுகளில் அரசியல் கட்சிகளின் பரிந்துரைகள், கையூட்டுகள் வழங்குதல் போன்றவை நடைபெற வாய்ப்புகள் அதிகம்.

ஆ. லியோன், மறைமலைநகர்.

அங்கீகாரம்

வாழும்போது ஒருவருக்கு விருது வழங்கப்பட்டால் மட்டுமே அவருக்குப் பெருமை கிடைக்கும். அதை வைத்து மற்றவர்கள் அவரைப் பாராட்டவும் அந்த விருதின் காரணமாக சமூகத்தில் அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவும் வழி ஏற்படும். இறந்தபின் வழங்கப்படும் விருதால் அதை வைத்து அவர் மகிழவோ, கொண்டாடவோ இயலாது. இது கடலில் விழுந்த மழை போலத்தான்.

கோ. ராஜேஷ் கோபால், அருவங்காடு.


விதிவிலக்கு


நாட்டுக்காக போர் புரிந்து வீர மரணத்தை தழுவும் வீரர்களுக்கு இறப்புக்குப்பின் விருது வழங்கப்படலாம். மற்றபடி இலக்கியம், மருத்துவம், அறிவியல் போன்ற துறைகளில் சாதனை செய்வோருக்கு வாழும்போதே விருது வழங்கி கெளரவப்படுத்த வேண்டும். வாழும்போது தரப்படாத விருதுக்கு மதிப்பு இருக்காதுதான். எனினும் ராணுவத்திற்கும் காவல்துறைக்கும் விதிவிலக்கு தரலாம்.

மதியரசன், கிருஷ்ணாபுரம்.

முனைப்பு

விருது என்பது ஒருவருக்குக் கிடைக்கும் அங்கீகாரம் ஆகும். அதோடு எதிர்காலத்தில் கூடுதல் முனைப்போடு செயல்படுவதற்குத் தூண்டுகோலாகவும் அவ்விருது அமைகிறது. இந்நிலையில், வாழும்போதே விருது தரப்படாமல் மரணத்திற்குப் பிறகு வழங்கப்படுவதால் யாருக்கு என்ன பயன்? சம்பந்தப்பட்டவருக்குமில்லை; சமூகத்திற்குமில்லை. வாழும்போது விருது வழங்குவதே சிறப்பு.

அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com