’தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

’தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில... 

கல்விப்பணி

ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடும்போது, நீண்டதூரம் தனியே பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு நேரங்களில் தனியே தங்க வேண்டியதாகிறது. மேலும் தேர்தல் பணிக்குச் செல்லும்போது தடைபடும் கல்விப்பணியை அவர்களால் ஈடுசெய்ய இயலாது. எனவே, ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.
செ. சத்தியசீலன், கிழவன் ஏரி.

தகுதி
ஆசிரியர்கள்தான் பொதுமக்களோடு பழகி, அவர்களைப் புரிந்துகொண்டவர்களாக இருப்பர். அதனால்தான் அரசு சில முக்கிய புள்ளிவிவரங்களைத் தயாரிக்கும் பணியில் அவர்களை ஈடுபடுத்துகிறது. அவற்றில் ஒன்றுதான் தேர்தல் பணி. இப்பணியால் ஆசிரியர்களுக்கு சில நேரங்களில் மனச்சோர்வு ஏற்படக்கூடும். எனினும் இந்தப் பணியை சிறப்பாகச் செய்து முடிக்க தகுதியானவர்கள் ஆசிரியர்களே.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

இலக்கு
மேனிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு நூறு சதவீத தேர்ச்சி என்ற இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. தேர்ச்சி விகிதம் சற்றே குறைந்தாலும் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்கப்படுகிறது. இதுபோன்ற கூடுதல் பணிகளால் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனும், தேர்ச்சி விகிதமும் கண்டிப்பாகப் பாதிக்கப்படும். எனவே தேர்தல் பணியிலிருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
வெ. பாண்டுரங்கன், திருநின்றவூர்.

ஆணிவேர்
தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஆணிவேர். எனவே இந்த முக்கியமான பணிக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்துவதுதான் சரியானது. ஆசிரியர்கள் குறைந்த வேலைநாட்களே வேலை செய்கின்றனர். நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ஆறு மணி நேரம் மட்டுமே வேலை செய்கின்றனர். எனவே மற்ற அரசு ஊழியர்களைவிட ஆசிரியர்களே தேர்தல் பணியை விரும்பிச் செய்ய வேண்டியவர்கள்.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

இன்னல்
தேர்தல் காலங்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்குவது முதல் முடிவுகள் அறிவிக்கப்படுவதுவரை ஆசிரியர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். தொலைதூரத்தில் உள்ள இடத்திற்கு பணியமர்த்தப்படும்போது ஆசிரியர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே தேர்தல் பணியிலிருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கருத்து சரியே.
பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

பாதிப்பு இல்லை
பள்ளிக்கூடங்களில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பராமரித்துப் பயிற்சி பெற்றிருப்பதால் ஆசிரியர்கள் வாக்குச் சாவடியில் அதே மாதிரியான ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பராமரிக்க முடியும். தேர்தல் பணியின்போது ஓன்றிரண்டு நாட்களே பணியாற்றுகிறார்கள். அந்த ஓரிரண்டு நாட்களால் கல்விப் பணி பெரிதாக பாதிக்கப்படப் போவதில்லை. தேர்தல் பணி என்பது தேசப்பணி.
ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.

பணிச்சுமை
ஆசிரியர்களின் பணிக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத ஏராளமான பணிச்சுமைகள் அவர்கள் மீது திணிக்கப்படுகின்றன. அதனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி அவர்கள் எப்பணிக்காக நியமிக்கப்பட்டார்களோ அந்த கற்பித்தல் பணியை சரிவர செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தாமல் இருந்தால் நல்லது.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

கட்சி முத்திரை
பல நேரங்களில் தேர்தல் பணியாற்றும் ஆசிரியகள் மீது அரசியல் கட்சி முத்திரை குத்தப்படுகிறது. மேலும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு போன்ற பணிகளில் பட்டியலில் யாராவது ஒருவர் பெயர் விடுபட்டுப் போனால்கூட ஆசிரியர்களைக் குற்றவாளிகளைப்போல் பார்க்கின்றனர். எனவே ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்பது சரியானது.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

பாதுகாப்பு
குடும்ப அட்டை விவரம் சரிபார்ப்பதாகட்டும், வாக்காளர் அட்டை கணக்கெடுப்பாகட்டும் அனைத்திற்கும் கூப்பிடு ஆசிரியர்களை என்றே பழகிவிட்டிருக்கிறார்கள். இதனால் விடுமுறை நாளில்கூட குடும்பத்தை கவனிக்க இயலாத சூழ்நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மேலும் பெண் ஆசிரியர்
களின் பாதுகாப்பிற்கும் சிக்கல் வருகிறது. எனவே இது தவறே.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

பொறுப்பு
நேர்மையானவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். பொதுவாகவே ஆசிரியர்கள் தவறு செய்ய அஞ்சுபவர்களாக இருப்பதால், அவர்களை ஈடுபடுத்துவதே பொருத்தமானது. அதோடு, ஆசிரியர்களுக்கு மற்ற ஊழியர்களைக் காட்டிலும் பணி நாட்கள் குறைவு. நல்ல சமூகத்தை உருவாக்க ஒத்துழைப்பது ஆசிரியர்களின் பொறுப்பு.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

கவனம்
தேர்தல் பணி என்பது மிகவும் கவனத்துடனும் செய்ய வேண்டிய பணி. கற்பித்தல் பணியில் கவனம் செலுத்தும் ஆசிரியப் பெருமக்கள் மீது கடினமான பணிச்சுமையை ஏற்றுவது சரியல்ல. நம் நாட்டில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் லட்சக்கணக்கில் இருக்கும்போது அவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களை அப்பணியில் அமர்த்தினால் என்ன?
ஆறு. கணேசன், திருச்செந்தூர்.

மன பாதிப்பு
இது சரியல்ல. ஆசிரியப் பணி சுமை மிக்கது. தேர்தல் பணியும் அத்தனை எளிதல்ல. தேர்தல் பணிக்கென்றே தனியாக ஆட்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்த வேண்டும். விருப்பம் கொண்ட ஆசிரியர்களை மட்டுமே தேர்தல் பணிக்கு நியமிக்க வேண்டும். அனைவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. கட்டாய பணிச்சுமையினால் ஆசிரியருக்கு மனரீதியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
கி. சந்தானம், மதுரை.

களங்கம்
இது மிகவும் சரியான வாதமே. ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின்மீது ஈடுபாடு இருக்கலாம். அந்த ஈடுபாட்டின் காரணமாக அவர்களின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கப்படலாம். ஆசிரியர்கள் சமூகத்தில் மதிப்பு மிக்கவர்கள். மாதா பிதாவிற்கு அடுத்தாக குருவே உயர்ந்தவர். எனவே, ஆசிரியர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

மதிப்பு
ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வியிலும் ஒழுக்க மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி நல்ல சமுதாயத்தை உருவாக்குவதே சிறப்பு. தேர்தலில் பல்வேறு தரப்பினரும் போட்டியிடுவார்கள். அவர்கள் அனைவரும் ஆசிரியர்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள் என்று கூற முடியாது. எனவே ஆசிரியர்களைக் கல்விப்பணியில் மட்டுமே கவனம் செலுத்த விட்டால் அவர்கள் மதிப்பு உயரும்.
வி.எஸ். கணேசன், சென்னை.

ஊதியம்
மற்ற அரசு ஊழியர்களோடு ஒப்பிடும்போது ஆசிரியர்களுக்கு விடுமுறை அதிகம்; அதே நேரத்தில் வேலைப்பளுவும் குறைவு. அப்படியிருக்கும்போது, தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கருத்து சரியல்ல.மேலும், தேர்தல் பணிக்கென ஒரு தொகையை ஊதியமாகப் பெறும் ஆசிரியர்கள் அப்பணியில் விருப்பத்தோடு ஈடுபடுவதே சரி.
உ. இராஜமாணிக்கம், கடலூர்.

குறைபாடு
ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடச் செய்வதால் மாணவர்களின் படிப்பு தடைபடுகிறது. தேர்தல் பணி, வாக்காளர் பட்டியல் பணி, குடும்ப அட்டை பணி என பல்வேறு பணிகளை அவர்களுக்குத் தருவதால் அவர்களால் முழுமையாக கல்விப் பணியில் ஈடுபட முடிவதில்லை. இதனால் கற்பித்தலில் குறைபாடு நிகழ்கிறது. ஆசிரியர்களை கல்விப் பணி மட்டுமே செய்யவிட வேண்டும்.
என். சண்முகம், திருவண்ணாமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com