'ஜல்லிக்கட்டுக்குத் தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி விற்பனையைத் தடைசெய்யப் போராட வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்குவாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'ஜல்லிக்கட்டுக்குத் தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி விற்பனையைத் தடைசெய்யப் போராட வேண்டும் என்கிற கருத்து சரியா?'

மனோபாவம்

ஜல்லிக்கட்டிற்குத் தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி விற்பனையைத் தடை செய்யப் போராட வேண்டும். மாடு, ஆடு, கோழி விற்பனைக்கும் தடைபோட வேண்டுமல்லவா? "கொன்றால் பாவம் தின்றால் போச்சு' என்கிற மனோபாவத்தில் இருப்பது தவறு. ஐரோப்பிய நாடுகளில் காளையை ஈட்டியால் கொல்லுகிறார்கள். ஆனால் ஜல்லிக்கட்டு தமிழகத்தின் கலாசார விளையாட்டு.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

சரியா?
ஆண்டாண்டு காலமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறதே. இதுவரை எந்தக் காளையாவது அடிபட்டதாகவோ, இறந்து போனதாகவோ செய்தி உண்டா? அப்படி இருக்கும்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் வாதம் சரியா? இதனால் மாட்டுக்குத் துன்பம் என்று கூறுவோர் மாட்டை அடித்துக் கொன்று உண்பதைத் தடை செய்ய முதலில் போராட வேண்டும்.
சண்முகசுப்பிரமணியன், திருநெல்வேலி.

ஒற்றைப் பண்பாடு
இது சரியல்ல. தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று நிரூபித்தவர்கள் நாம். விலங்குகளைக் கொல்வதைத் தடை கோருபவர்கள் தாவரங்களை அழித்து உண்பதற்கும் தடைகோர முன்வருவார்களா? ஆடு, கோழி, பன்றி போன்ற விலங்கினங்கள் கொல்லப்படுவதற்கும் தடை விதிக்கப்படுமா? பன்முகப் பண்பாடு கொண்ட இந்திய நாட்டில் ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கும் முயற்சிதான் இது.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

கருணை
மனித சமுதாயத்திற்கு பல வகையிலும் உதவி செய்யக் கூடிய விலங்குகள் மீது ஒவ்வொரு இந்திய குடிமகனும் கருணை காட்டுவது கட்டாயம் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. இதனை நடைமுறைப்படுத்த மக்கள் மத்தியில் ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் போராட வேண்டும். இந்த முயற்சியில் தொண்டு நிறுவனங்களும் பங்கு கொள்ள வேண்டும்.
என்.எஸ். முத்துகிருஷ்ணன்,
ராஜபாளையம்.

முறையல்ல
மாட்டுக்கறி உண்பவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஏறத்தாழ 70 சதவீதத்திற்கு மேல் இருக்கின்றனர். பெரும்பாலான மனிதர்களின் உணவுப்பட்டியலில் இடம்பெற்றுவிட்ட மாட்டுக்கறி விஷயத்தில் எந்தவித போராட்டம் நடத்தினாலும் அது எடுபடாது. அதுமட்டுமல்ல, தனிப்பட்டவர்களின் உணவு விஷயத்தில் அரசோ, நீதிமன்றமோ தலையிடுவது முறையல்ல.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

ஒற்றுமை
ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்றால் கசாப்பு கடைகளில் அடிமாடுகளுக்கு என்ன கதி ஏற்படுகிறது? ஜல்லிக்கட்டு தமிழரின் பாரம்பரியம் என்பதை உணர்ந்து நமது அரசியல் தலைவர்கள் ஒற்றுமையோடு முயற்சி செய்யவில்லை. எனவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்குமுன் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க வேண்டுமென ஒவ்வொரு தமிழனும் போராட வேண்டும்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

வியப்பு
இன்றும் சில மாவட்டங்களில் பொங்கல் விழா கொண்டாட்டங்களில் ஜல்லிக்கட்டுதான் முக்கியமான விழாவாக இருந்து வருகிறது. மாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று கூறுவோர் மாடுகளை வெட்டி கொன்று அதன் இறைச்சியை உண்பதைக் கண்டும், அதற்கு தடை கூறாதது வியப்பளிக்கிறது.
கே. சிங்காரம், வெண்ணந்தூர்.

காரணங்கள்
இக்கருத்து சரியல்ல. ஜல்லிக்கட்டு வேண்டும் என்று கோருபவர்களுக்கு சாதகமாக பல காரணங்கள் இருக்கும்போது மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை தங்களுக்குத் துணையாக அழைப்பது தவறு. கொன்று தின்னலாம். ஆனால் துன்புறுத்தக் கூடாது என்றுதான் கூறுகிறார்கள். ஆகையால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளர்கள் மாடுகள் துன்புறுத்தப்படுவதில்லை என்று மட்டுமே வாதிட வேண்டும்.
வரதன், திருவாரூர்.

பாசம்
ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்கள் அவற்றைத் தங்கள் குழந்தைகளைப் போலவே கருதி பாசத்துடன் வளர்ப்பார்கள். அப்படி அன்பும் பாசமும் காட்டி மாட்டை வளர்ப்பவர்களா அவற்றைத் துன்புறுத்துவார்கள்? அவர்களைவிட மாடுகள் மீது அதிக அக்கறை உள்ளவர்களாக தங்களை காட்டிக் கொள்
பவர்கள் முதலில் மாட்டிறைச்சி விற்பனையைத் தடை செய்யப் போராடட்டும்.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

இரு கோணங்கள்
ஜல்லிக்கட்டுக்குத் தடை போடுவது என்பதும் மாட்டிறைச்சி விற்பனையைத் தடை செய்வது என்பதும் இருவேறு கோணங்கள். ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு. மாட்டிறைச்சி என்பது உணவுப் பழக்கம். உணவுப் பழக்கத்தில் சட்ட விரோதமானது எதுவும் கிடையாது, தாவரத்திற்குகூடதான் உயிர் இருக்கிறது. அதற்காக அரிசியையும் காய்கறிகளையும் சாப்பிடக்கூடாது என்று சொல்லலாமா?
இ. ராஜுநரசிம்மன், சென்னை.

சுயநலம்
காளையுடன் காளையர்கள் விளையாடும் விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு என்பது. இக்காளைகளை ஈன்ற பசுக்கள் மனிதர்களின் உணவுக்காக இறைச்சியாக்கப்படுகிறது. இதுகுறித்துப் பேசாமலும் தடைகேட்டு நீதிமன்றம் செல்லாமலும் இருப்பதில் சுயநலமே தெரிகிறது. உயிர்களிடத்தில் அன்பு வேண்டுமென்பது ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு மட்டும்தானா?
மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்.

சாத்தியமல்ல
மாட்டிறைச்சி விற்பனையைத் தடை செய்யக் கோருவது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. எந்த விலங்கினத்தின் இறைச்சியையும், மனிதன் அதனை ஒரு உணவாக உண்ணும் வரை, தடை செய்வதென்பது சாத்தியமல்ல. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதால் மாட்டிறைச்சிக்கும் தடை தேவை என்பது ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்பது போன்றது.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

நோக்கம்
ஜல்லிக்கட்டுக்கு சில அமைப்புகள் தடை கோருவதன் நோக்கம், நம் நாட்டு மாடுகளின் கருவூட்டலுக்கு அந்நிய நாட்டு காளைகளின் விந்தணுக்களைப் பெற கையேந்த வைப்பதே. உண்மையில் பசுக்களை - காளைகளை காக்க வேண்டுமெனில், அதனை இறைச்சிக்காகக் கொல்வதையும் அனுமதிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டைத் தடை செய்யுமுன் மாட்டிறைச்சி விற்பனையைத் தடை செய்ய வேண்டும்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

ஏன்?
ஜல்லிக்கட்டை மிருகவதை என்று சொல்லி தடை கோருபவர்கள், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பசுக்களும், காளை மாடுகளும் கேரளாவுக்கும் பிற மாநிலங்களுக்கும் அடிமாடுகளாக அனுப்பப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்க முன் வராதது ஏன்? ஜல்லிக்கட்டை எதிர்ப்பதற்கு முன்பு மாட்டிறைச்சி விற்பனையைத் தடை செய்ய போராட வேண்டும் என்ற கருத்து முற்றிலும் சரியே.
பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

தேவையல்ல
மாட்டிறைச்சி என்பது பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் உணவு. உணவுப் பொருளாதாரம் இந்தியாவில் அதிகரிக்க மாட்டிறைச்சி ஒரு முக்கிய காரணம். இந்நிலையில், மாட்டிறைச்சி விற்பனையைத் தடை செய்யப் போராட வேண்டும் என்பது சரியல்ல. அதோடு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டோடு மாட்டிறைச்சியைத் தொடர்புபடுத்தத் தேவையில்லை.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

அக்கறை
ஜல்லிக்கட்டில் மாடு துன்புறுத்தப்படுகின்றது என்றால் மாட்டிறைச்சிக்காக வெட்டப்படும்போது மாடு இன்பமடைகிறதா? உண்மையில் விலங்குகள் மேல் அக்கறை உள்ளவர்கள் மாமிசத்திற்காக கொல்லப்படும் விலங்குகளைக் காப்பாற்ற முதலில் போராடி இருக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் மாடுகளுக்கு எவ்வித காயமும் ஏற்படுவதில்லை. மேலும் அது தமிழரின் பாரம்பரிய விளையாட்டுமாகும்.
ஐ. சுரேஷ், பழைய காயல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com