"மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி கீழமை நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கலாம் என்கிற யோசனை சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி கீழமை நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கலாம் என்கிற யோசனை சரியே.

தவறில்லை

தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி கீழமை நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கலாம் என்கிற யோசனை சரியே. அரசு ஆசிரியர், அரசு மருத்துவர், அரசுப் பணியாளர் என்று மத்திய } மாநில அரசு பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தி, நியமனம் செய்யப்படுகின்றது. அதுபோல் கீழமை நீதிமன்ற நீதிபதிகளை, தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி, நியமனம் செய்வதில் எந்த தவறும் இல்லை.

பி.கே. ஜீவன், கும்பகோணம்.

அறிவுத்திறன்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி கீழமை நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது வரவேற்கத்தக்க நல்ல யோசனையாகும். இதன் மூலம் தேர்வு செய்யப்படுபவரின் அறிவுத்திறன் சந்தேகத்திற்கிடமின்றி உறுதிச் செய்யப்படும். அது மட்டுமல்ல, இம்முறையால் அரசியல் கட்சிகளின் தலையீடு, சிபாரிசு, லஞ்ச ம், ஊழல் ஆகியவற்றிற்கு நிச்சயம் வாய்ப்பு இராது.

என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.


சமூகப்பணி

தேர்வாணையம் மூலம் தேர்வு செல்வது முற்றிலும் தவறு. இந்த முறையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அனுபவம் குறைவாக இருக்கும். நீதிபதி பதவிக்கு நுண்ணறிவும், பல வருட பட்டறிவும் இருக்க வேண்டும். பல சிக்கலான வழக்குகளை கையாண்டிருக்க வேண்டும். நீதிபதிகளின் பணியானது தயவு தாட்சண்யமின்றி நடுநிலையுடன் முடிவு எடுக்க வேண்டிய சமூகப் பணியாகும்.

பு. ரமேஷ், புதுச்சேரி.


சரியே

இந்த யோசனை சரியே. மருத்துவ பட்டப்படிப்பு, மருத்துவ மேல்படிப்பு ஆகியவற்றிற்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை நடத்துகிறது. அது போன்று கீழமை நீதிமன்ற நீதிபதிகளையும் தேர்ந்தெடுத்து நியமிக்கலாம். மேலும், வங்கி, பணியாளர் தேர்வு சார்ந்த தேர்வர்களுக்கும் இது பொருந்துவதாக அமையும்.

என்.எஸ். முத்துகிருஷ்ணராஜா, ராஜபாளையம்.

குழப்பம்

தேர்வாணையம் மூலம் நீதிபதிகள் நியமிக்கப்பட்டால், மொழிப் பிரச்னையால் புரிதலில் குறைபாடு வரும். அடுத்து, படிக்காத, சாமானிய மக்களே பெரும்பாலும் கீழமை நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கின்றனர். இந்நிலையில், நீதிபதி கேட்பதையும், பேசுவதையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லையென்றால் பெரும் குழப்பம் ஏற்படும். அதனால் இந்த யோசனை தவறு.

அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

நிலுவை வழக்குகள்

இந்த முறை முற்றிலும் சரியே. உயர்நீதிமன்றங்களிலும் கீழமை நீதிமன்றங்களிலும் ஏராளமான நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அனைத்து நீதிமன்றங்களிலும் சுமார் மூன்று கோடி வழக்குகள் முடிவுறாமல் நிலுவையில் உள்ளன. எனவே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர்ந்த அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் மத்திய அரசுத் தேர்வாணையத்துக்கு இப்பணியை விடுவதே சாலச் சிறந்தது.

இராம. கோவிந்தன், தென்னிலை.

மாநில உரிமை

கீழமை நீதிமன்ற நீதிபதிகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி தேர்வு செய்வது ஏற்கக்கூடியதல்ல. இச்செயல் மாநில உரிமைகளில் மத்திய அரசு மறைமுகமாகத் தலையீடுவதாகும். மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கு அதிகரித்து நமது சமஷ்டி அமைப்பு குலைந்து போக நேரும். உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மட்டும் அவ்வாறு தேர்வு நடத்தலாம்.

தி.ரெ. ராசேந்திரன், திருநாகேச்சுரம்.


பயிற்சி

இது நல்ல நடைமுறைதான். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற ஆட்சிப் பணியாளர்கள் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களாக இருப்பினும் அவர்கள் பணிக்கேற்ற சில பயிற்சிகளை முடித்த பின்னரே பணி நியமனம் பெறுகின்றனர். அதுபோலவே உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட துறையளவில் நேர்காணல் அடிப்படையில் வெயிட்டேஜ் கொடுத்து நியமனம் செய்தால் அது சிறப்பாக இருக்கும்.

அ. கருப்பையா, பொன்னமராவதி.

மதிப்பெண்

இந்த யோசனை சரியானதுதான். அவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்களுடன் வயது, பணியனுபவம், பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு, கல்வியின் தரம், குடும்பப் பின்புலம், ஒழுக்கப் பண்புகள், அதுவரை எந்த குற்றச்சாட்டுகளுக்கும் ஆட்படாதவர் போன்றவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து தேர்வு செய்து பணி நியமனம் செய்திடல் வேண்டும்.

பா. இராமகிருஷ்ணன், சிந்துபூந்துறை.

கணிப்பு தவறு

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன விஷயத்தில் மத்திய அரசின் கருத்தை நிராகரித்தது உச்சநீதிமன்றம். அதனை மனதில் வைத்தே நீதித்துறையை ஆழம் பார்க்கிறது மத்திய அரசு. தேர்வு மூலம் நியமனமாகும் நீதிபதிகள் அனைவரும் திறமைசாலிகள் என்கிற கணிப்பே தவறு. தேர்வு மூலம் நியமனமான மருத்துவர்கள், பொறியாளர்கள் இவர்களில் எத்தனை பேர் சாதித்துள்ளனர்?

ச. கந்தசாமி, சிந்தலக்கரை.

பெருமை

நீதிபதி பதவிக்கு விண்ணப்பிப்பவர்களின் முன் அனுபவம், வயது வரம்பு, முந்தைய செயல்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய வரன்முறைகளும் வகுக்கப்பட்ட தேர்வாக அது அமைதல் வேண்டும். பதவி நியமனத்தில் சிபாரிசு, பணப்பரிமாற்றம், சாதி அரசியல், கட்சி அரசியல் தலையீடு போன்றவற்றிற்கு இடமில்லாமல் பார்த்துக் கொண்டால் அது அப்பதவிக்குப் பெருமை சேர்க்கும்.

எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

பொருத்தமல்ல

நீதிமன்றப் பணிக்கு அனுபவமே முக்கியத் தேவையாகும். நீதிபதிகள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்படுவது எவ்வகையிலும் பொருத்தமாகாது. சட்டம் படித்து எத்தனை ஆண்டுகள் ஆணாலும் ஒரு வழக்குரைஞர் சிறந்தவர் என்ற பெயரைப் பெற முடியாது. பல வழக்குளைச் சந்தித்து பல வெற்றிகளை குவித்தவரே அப்பெயரை பெற முடியும்.

க.மா. சிட்டிபாபு, சென்னை.

திறவுகோல்

இது சரியான முடிவுதான். ஜனநாயகத்தின் மிக முக்கியமான தூண் நீதிமன்றம் என்பதை மக்கள் ஏற்க வேண்டும் என்றால், சரியான முறையில் தகுதியானவர்களை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும். மேலும், அரசியல் குறுக்கீடு இல்லாத நியமனம் ஏற்படவும் இம்முறையில் வாய்ப்பு அதிகம். தகுதி, திறமை அடிப்படையில் தேர்வு செய்யும் இம் முறையானது புதிய ஜனநாயகத்தின் திறவுகோல்.

க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

அனுபவம்

ஒவ்வொருவருக்கும் அனுபவம்தான் சிறந்த ஆசான். அனுபவ அறிவுக்கு ஈடாக எதையும் கூற முடியாது. தேர்வு எழுதச்செய்து நீதிபதிகளைத் தேர்வு செய்வதைவிட பணிமூப்பு அடிப்படையில் தேர்வு செய்வதே நல்லது. திறமையான வழக்குரைஞர்களை தேர்வு செய்து நீதிபதிகளாக நியமிக்கலாம். இதில் இருபக்கத்திலுமுள்ள சாதக } பாதகங்களை அலசி ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

என். சண்முகம், திருவண்ணாமலை.

இணக்கம்

இது மிகவும் சரியான, உடனே நடைமுறைப்படுத்த வேண்டிய நல்ல யோசனை. இதன் மூலம் சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்த, அறிவாற்றல் மிகுதியான வழக்குரைஞர்கள் மட்டுமே நீதிபதிகளாக வர வாய்ப்பு ஏற்படும். நீதிபதிகளின் தரம் உயர்ந்தால் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். அத்துடன் அரசுக்கும் நீதிமன்றங்களுக்கும் இணக்கமான உறவும் உண்டாகும்.

என்.எஸ். குழந்தைவேலு, சங்ககிரி.

கட்டாயம்

தேர்வு நடத்தி கீழமை நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யலாம். ஆனால், வழக்குரைஞர் தொழிலில் குறைந்தது 10 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றவர்களே தேர்வு எழுத முடியும் என்று விதி ஏற்படுத்த வேண்டும். நீதிபதியின் தீர்ப்பு என்பது சமன் செய்து சீர்தூக்கும் கோல் அல்லவா? அதனால் அதற்கு வயதும், அனுபவமும் கட்டாயம் தேவை. எனவே இம்முடிவு சரியே.

மகிழ்நன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com