"நீண்ட காலமாக விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை உயர்நீதிமன்றம் விடுவிக்க முன்வர வேண்டும் எனறு மத்திய அமைச்சர் கூறியுள்ளது சரியா?'

இக்கருத்து சரியானதே. விசாரணைக் கைதிகளுக்கு ஜாமீன் தர எவரும் முன்வராத காரணத்தால்தான் இவர்கள் நீண்ட காலமாக சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

நன்னடத்தை

இக்கருத்து சரியானதே. விசாரணைக் கைதிகளுக்கு ஜாமீன் தர எவரும் முன்வராத காரணத்தால்தான் இவர்கள் நீண்ட காலமாக சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, துயரத்துடன் சிறையில் நாட்களைக் கழிக்கும் இவர்களின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு இவர்களை உயர்நீதிமன்றம் தானே முன்வந்து விடுதலை செய்வதே சரியானதாகும்.

சி. இராசேந்திரன், மணலி.


கடுந்தண்டனை

விசாரணைக் கைதிகளை வருடக்கணக்கில் சிறை வைப்பது ஏற்புடையதல்ல. கொடுமையான குற்றம் புரிந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டாலும்கூட அவர்களையும் அதிக ஆண்டுகள் சிறையில் அடைக்காமல் காலவரையறை நிர்ணயித்து விடுதலை செய்வதுதான் நியாயமாக இருக்கும். அப்போதுதான் அவர்கள் திருந்தி வாழ முடியும். நீண்டகால சிறைவாசம் என்பதும் ஒரு கடுந்தண்டனைதான்.

உ. இராஜமாணிக்கம், கடலூர்.


காரணங்கள்

மத்திய அமைச்சர் கூறியுள்ளது சரியன்று. காலதாமதத்திற்குக் காரணம், காவல்துறை, அரசுத்துறை போன்றவை. இதில் ஆளும்கட்சியின் குறுக்கீடு, அரசியல் கட்சிகளின் சப்பைக்கட்டு இவைமட்டுமன்றி மக்கள்தொகைக்கேற்ப நீதிபதிகள் நியமனமின்மை போன்றவைகளும் காரணங்களாகும். எல்லாரையும் விடுதலை செய்தால் நீதி, நியாயம் எல்லாம் நிலைநாட்டப்படாது போய்விடும்.

பி. சுந்தரம், வெண்ணந்தூர்.


மறுவாழ்வு

குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றால் விசாரணைக் கைதிகளை விடுதலை செய்ய சட்டத்தில் இடமிருக்கிறது. ஏழைகளும் அப்பாவிகளும்தான் விசாரணைக் கைதிகளாக நீண்ட காலம் சிறையில் வாடுகிறார்கள். அவர்களை உயர்நீதிமன்றம் விடுவிப்பது சிறந்தது. இது விடுவிக்கப்படும் கைதிகளுக்கு மறுவாழ்வு தரக்கூடிய செயலாகும்.

மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.


தாமதம் கூடாது

குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள்தான் விசாரணைக் கைதிகளாக நீண்ட நாட்கள் சிறையில் வைக்கப்படுகின்றனர். சிலருக்கு வழக்கு முடிந்து தண்டனை அறிவிக்கப்படும்போது, தண்டனை காலமும் முடியும்நிலை ஏற்படுகிறது. அதுபோன்ற குற்ற வழக்குகளை தாமதம் செய்யாமல் விரைந்து முடிப்பதே நல்லது. இதனால் நிரபராதிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க வழியேற்படும்.

அ. கருப்பையா, பொன்னமராவதி.


நியாயமல்ல

தவறிழைக்காத ஒருவன் கைதி என முத்திரைக் குத்தப்பட்டு நீண்ட காலம் சிறையிலடைக்கப்பட்டால் அவன் குடும்பமே சிதிலமடைந்து போகாதா? விரைவில் விசாரணை நடத்தி குற்றம் புரிந்தவர் என நிரூபணமானால் ஒருவரை சிறையில் அடைப்பது நியாயம். குற்றம் நிரூபணமாகாமல் விசாரணைக் கைதி என்ற பெயரிலேயே நீண்டகாலம் சிறையிலடைத்து வைப்பது நியாயமல்ல.

எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.


அபராதம்

பல வழக்குகள் விரோத எண்ணத்துடனும், தொந்தரவு தரும் நோக்கத்துடனும் தாக்கல் செய்யப்படுகின்றன. அம்மாதிரி வழக்குகளைத் தாக்கல் செய்பவர்களுக்கு மிக அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்பட்டால்தான், தேவையற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்படுவது குறையும். விசாரணைக் கைதிகள் பற்றிய வழக்குகளுக்கென தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.

டி. சேகரன், மதுரை.


வரவேற்கத்தக்கது

பண பலம் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டால் மிகவும் எளிதாக பிணையில் வருவதோடு, விரைவில் விடுதலையும் பெற்று விடுகின்றனர். ஆனால், எந்த பலமும் இல்லாத சாமானிய மக்கள், நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இது எந்தவிதத்திலும் நியாயமற்றது. எனவே இவர்களை விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

கே. கோவிந்தராஜன், அல்லூர்.


முறையல்ல

ஒருவரை கைது செய்தால், அவர் குற்றமிழைத்ததை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தி, தண்டனை பெற்றுத்தர வேண்டியது காவல்துறையினரின் கடமை. ஒருவர்மீது சுமத்தப்படுகிற குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டால் ஏற்கலாம். ஆனால், அப்படி எதுவுமில்லாமல் பல வருடங்களாக ஒருவர் குற்றவாளியைப்போல் சிறையில் இருப்பது முறையல்ல.

அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.


நிர்ப்பந்தம்

குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டே தீரவேண்டும். நிரபராதிகளை தாராளமாக விடுதலை செய்யலாம். நீண்ட காலம் என்பது ஒரு காரணமல்ல. நீதி விசாரணையை துரிதப்படுத்தி செய்த குற்றத்தைப் பொருத்து சட்டப்படி ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே விடுவிக்கலாம். அதை விடுத்து நீதிமன்றத்தை நிர்ப்பந்தப்படுத்துவது முறையல்ல.

ச. கண்ணபிரான், திருநெல்வேலி.


யார் பொறுப்பு?

மத்திய அமைச்சர் கூறியது சரியே. உதாரணமாக ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் சிறையில் கழித்த ஒருவருக்கு வழக்கின் முடிவில் சட்டப்படி ஒராண்டுதான் சிறை என்று தீர்ப்பு வழங்கப்பட்டால், அவர் சிறையில் கழித்த அத்தனை ஆண்டுகளுக்கு யார் பொறுப்பு? எல்லா நீதிமன்றங்களிலும் தேங்கிக் கிடக்கும் வழக்குகளைவிரைந்து முடிக்க வேண்டும்.

என்.எஸ். முத்துகிருஷ்ணராஜா, இராஜபாளையம்.


முரண்

ஒருவர் குற்றம் புரிந்தாரா இல்லையா என்பது தெரியாமலே நீண்ட காலமாக விசாரணைக் கைதியாக சிறையினில் அடைத்து வைத்திருப்பது இயற்கை நீதிக்கு முரணானதாகும். நெடுங்காலத்திற்குப் பிறகு, விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தவர் நிரபராதி என நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும்போது அவர் சிறையில் இழந்த காலத்தை மீட்க முடியுமா? அமைச்சரின் கருத்து சரியே.

என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.


முடிவு

ஒரு விசாரணைக் கைதி, அவர் செய்ததாக சொல்லப்படும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி எத்தனை நாள் அல்லது எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படுமோ அந்த அளவுக்கு சிறை தண்டனையை அவர் விசாரணைக் கைதியாகவே அனுபவித்து இருப்பின் அவரை விடுதலை செய்வதுதான் நியாயமான முடிவாக இருக்கும். இதை நடைமுறைப்படுத்தவேண்டும்.

பி.கே. ஜீவன், கும்பகோணம்.


ஆய்வு தேவை

அரசியல் கட்சிக்கு வேண்டியவர்கள் குற்றவாளிகள் எனினும் விடுவிக்கப்பட்டார்கள். வேண்டாதவர்களும் அப்பாவிகளும்தான் சிறையில் உள்ளார்கள். இப்போது நீதிமன்றத்திற்கு சுமை கூடியுள்ளது என்பதும் உண்மைதான். ஆயினும் நீதித்துறை கண்ணை மூடிக்கொண்டு எல்லாரையும் விடுவிக்காமல் சமன் செய்து சீர்தூக்கி ஆய்வு செய்து விடுவிப்பது நல்லது.

மு. நாச்சியப்பன், காரைக்குடி.


அநீதி

இக்கருத்து வரவேற்கத்தக்கது. குற்றமே நிரூபிக்கப்படாமல் சிலரை சிறையில் வைத்திருப்பது, சம்பந்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.தற்போது இலவச சட்ட உதவி மையங்கள் இருந்தும் இதுபோன்ற நிலை நீடிப்பது வருந்தத்தக்கது. எனவே நீண்ட காலம் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகளை விடுவிக்க உயர்நீதிமன்றம் முன்வர வேண்டும் என்கிற கருத்து சரியே.

க.மா. சிட்டிபாபு, சென்னை.

ஏற்புடையதல்ல

பத்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்க வேண்டிய குற்றம் புரிந்தவர் என்றால் அவர் வழக்கை மூன்று மாதங்களுக்குள்ளும் 10 ஆண்டுகளுக்கு கீழ் தண்டனை பெறக்கூடிய குற்றம் புரிந்தவர் என்றால் அவர் வழக்கை இரண்டு மாதங்களுக்குள்ளும் முடித்து விடவேண்டும். எவரையும் நீண்ட காலமாக விசாரணைக் கைதியாக சிறையில் அடைத்து வைப்பது ஏற்புடையதல்ல.

கே. சிங்காரம், வெண்ணந்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com