"வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக ரூ.5,000 இருக்கவேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்திருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

பாரத ஸ்டேட் வங்கியின் இந்த அறிவிப்பு சரியல்ல. வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களே.

சரியல்ல
பாரத ஸ்டேட் வங்கியின் இந்த அறிவிப்பு சரியல்ல. வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களே. தாங்கள் சிரமப்பட்டு வாழ்ந்தாலும் இயன்றவரை சேமித்து வைப்பவர்கள். எனவே குறைந்தபட்ச இருப்பு ரூ.5,000 என்பது அவர்களால் நிச்சயமாக இயலாத ஒன்று. வங்கியின் இந்த அறிவிப்பு பல வாடிக்கையாளர்களை வங்கியிலிருந்து விரட்டிவிடும்.
டி.ஆர். பாஸ்கரன், திண்டிவனம்.


நியாயமா?
பாரத ஸ்டேட் வங்கியின் அறிவிப்பு வணிக நோக்கமுடையது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களது மாத வருவாயில் மூன்றில் ஒரு பங்கினை இருப்பாக வைக்க வேண்டும் என்பது வாணிப நோக்கில் செயல்படும் தனியார் வங்கிகளின் நடவடிக்கைக்கு ஒப்பாக உள்ளது. சட்டம் அனுமதிக்கிறது என்பதால் பாரத ஸ்டேட் வங்கி சாமானியனை சங்கடத்திற்கு உள்ளாக்குவது நியாயமா?
ஆ. முத்துக்கிருட்டிணன், மதுரை.


பேராசை
வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூபாய் ஐந்தாயிரம் இருக்க வேண்டும் என்பது வங்கிகளின் பேராசையாகும். நூறு நாள் வேலைத் திட்டத்தால் பிழைக்கும் மக்கள் எவ்வாறு இத்தொகையை வைக்க இயலும்? நான்கு முறைக்கு மேலான பரிவர்த்தனைக்கு பணம் பிடிப்பதும், ஐயாயிரம் ரூபாய் இருப்பு அவசியம் என்பதும் மக்களைச் சுரண்டுவதாகும்.
பூ.சி. இளங்கோவன், சிதம்பரம்.


மாற்றம்
பாரத் ஸ்டேட் வங்கி அறிவித்திருப்பது சரியானதுதான். முன்பெல்லாம் வங்கி கணக்கு புத்தகம் மற்றும் காசோலை போன்றவை மிகவும் சாதாரணமாக இருந்தன. இப்பொழுது அவற்றையெல்லாம் தொழிலநுட்ப ரீதியாக மேம்படுத்தி, ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பெயர் அச்சடித்துத் தரப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஐயாயிரம் ரூபாய் என்பது ஒரு பெரிய தொகையல்ல.
என்.கே. திவாகரன், கோயமுத்தூர்.


மறுபரிசீலனை
இது தவறான கண்ணோட்டம். ஒருவர், நான்கு அல்லது ஐந்து வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால் அவரது பெருந்தொகை அந்த வங்கிகளில் முடக்கப்படுகிறது. பெருந்தொகை வங்கியில் இருந்தும் அவசர செலவுகளுக்காக அவரால் பணம் எடுக்க முடியாத சூழல் உருவாகும். எனவே, வங்கிகள் இருப்புத் தொகை அளவை ஆயிரம் ரூபாயாகக் குறைக்க வேண்டும்.
டி.கே. கங்காராம், கோயமுத்தூர்.


தவறு
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததிலிருந்தே, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே மிகவும் சிரமப்படுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் இருப்புத் தொகை ஐயாயிரம் கட்டாயம் என்று கூறுவது தவறு. மக்கள் தனியார் நிதி நிறுவனங்களை நாடத் தூண்டும் வகையில் இச்செயல்பாடு உள்ளது.
டி.வி. சங்கரன், தருமபுரி.


சாத்தியமல்ல
இது மிகவும் தவறான செயலாகும். அரசு ஊழியர்களில் பெரும்பாலோர் தங்களது ஊதியத்தை முதல் வாரத்திலேயே வங்கியிலிருந்து துடைத்து எடுத்து விடுகிற சூழ்நிலைதான் உள்ளது. தொகுப்பு ஊதியம், மதிப்பு ஊதியம் வாங்குபவர்களின் ஊதியமோ எட்டாயிரம் ரூபாய்க்குக் குறைவாகவே உள்ளது. அவர்களால் 5,000 ரூபாய் இருப்பு வைப்பதென்பது சாத்தியமற்றது.
எல். இரவி, செ.புதூர்.


ஏற்புடையதல்ல
ஓய்வூதியம் பெறுவோர், மூத்த குடிமக்கள், நடுத்தர குடும்பத்தினர் ஆகியோரை தங்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரத்தினை வைக்க வற்புறுத்துவது ஏற்புடையதல்ல. தேசிய மயமாக்கப்பட்ட பிற வங்கிகளில் ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகையாக இருக்கும் நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் முடிவு வேதனையளிக்கிறது.
எஸ். ஞானப்பிரான், சென்னை.


கடமை
பாரத ஸ்டேட் வங்கியின் அறிவிப்பால் வசதி படைத்தவர்கள் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள். ஆனால் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள். ஐயாயிரம் ரூபாய் என்பதை ஆயிரம் ரூபாய் என்று குறைத்து உதவலாம். வங்கி எடுக்கக்கூடிய முடிவுகள் அதன் வாடிக்கையாளர்களை பாதிக்காத அளவில் அமைதல் வேண்டும். வணிக நோக்கமின்றி மக்கள் சேவை ஆற்றுவதே வங்கிகளின் கடமை.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.


சிரமங்கள்
தற்போது ஆன்லைன் வர்த்தகம் நடைமுறைக்கு வந்தாகிவிட்டது. ஸ்மார்ட் கார்டு மூலம் பணப்பரிமாற்றம் செயப்பட உள்ளது. பொருளாதார மேம்பாட்டிற்கு பாரத ஸ்டேட் வங்கியின் குறைந்தபட்ச இருப்புத் தொகை ஐயாயிரம் ரூபாய் என்பது சரியான அறிவிப்பே. சிறு சிறு சிரமங்கள் ஏற்பட்டாலும் இந்த அறிவிப்பை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
த. நாகராஜன், சிவகாசி.


முடியாது
அதிக சம்பளம் பெறுபவர்க்கு சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.5,000 இருப்புத் தொகையாக வைப்பதில் பிரச்னை எழாது. குறைந்த சம்பளம் பெறுபவர் ரூ.5,000 வைத்திருப்பதென்பது முடியாது. ரூ.5,000 என்பதற்குப் பதிலாக ரூ.100-க்கும் குறையாமல் இருக்க வேண்டுமென அறிவித்தால் அடித்தள மக்களையும் கருத்தில் கொண்டு அறிவித்த அறிவிப்பாக இருக்கும்.
எஸ். ஸ்ரீகுமார். கல்பாக்கம்


பாதிப்பு
வங்கிகள் வாராக்கடனை வசூலிக்காமல் சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.5,000 என உயர்த்துவது அநியாயம். போதிய வருமானம் இல்லாதவர்களையும் மாதம் ரூ.1,000 கூட ஓய்வூதியம் பெறாத முதியோர்களையும் குறித்து வங்கி கவலைப்படவில்லை. சாமானிய மக்களை வங்கியின் முடிவு நிச்சயமாக பாதிக்கும்.
உ. இராஜமாணிக்கம், கடலூர்.


திண்டாட்டம்
பெரும்பாலான கடைநிலை ஊழியர்களின் மாதச் சம்பளம் ரூபாய் பத்தாயிரம்தான் இருக்கும். பல நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பாரத் ஸ்டேட் வங்கி மூலமாகவே ஊததியம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக ஐந்தாயிரம் என அறிவித்தால், இந்த ஊழியர்களின் வாழ்க்கைப்பாடு திண்டாட்டமே.
ஆதி. சீனிவாசன், திண்டிவனம்.


கட்டுப்படி ஆகாது
வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்கப்பட்டதும் பாஸ் புக், செக் புக், ஏ.டி.எம். கார்டு, கிரெடிக் கார்டு, நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் என்று ஏகப்பட்ட வசதிகளை தருவதால் பழங்காலத்து இருப்பு தொகை இப்போது கட்டுப்படி ஆகாது. சிலர் கணக்கை ஆரம்பித்துவிட்டு விட்டுவிடுவார்கள். குறைந்தபட்ச இருப்பு தொகையை அதிகரிப்பதால் தேவையில்லாமல் கணக்குகள் ஆரம்பிப்பது குறையும்.
எஸ். மோகன், கோவில்பட்டி.


தாக்குதல்
பாரத ஸ்டேட் வங்கியின் முடிவு வேதனைக்குரியது. இந்தியப் பொருளாதாரம் மேம்பட வேண்டுமானால் இதுபோன்ற நடவடிக்கைகளை வங்கிகள் தவிர்க்க வேண்டும். இந்த அறிவிப்பு ஏழை மக்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். சேமிப்பு, சிக்கனம், வளர்ச்சி என்ற நிலையில் வங்கிகள் செயல்பட வேண்டும். மக்கள் நம்பிக்கை வைத்துள்ள வங்கிகள் சந்தையாக மாறிவிடக் கூடாது.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.


ஊக்குவிப்பு
பெரும்பாலோர் தங்களிடம் அதிக பணம் இருப்பதால் சேமிப்பதில்ல. அவசர செலவுகளைக்கூட கட்டுப்படுத்திதான் சேமிக்கிறார்கள். அதிகமான கட்டுப்பாடுகள் விதித்தால் சேமிப்பின் திசை மாறிவிடும். இது வங்கிகளுக்கு பாதிப்பாக அமையும். எனவே கட்டுப்பாடுகளை தளர்த்தி சேமிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் நாடு வளம் பெறும் என்பதை வங்கிகள் உணர வேண்டும்.
த. யாபேத்தாசன், பேய்க்குளம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com