'மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை 60}லிருந்து 70-ஆக உயர்த்த வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை 60}லிருந்து 70-ஆக உயர்த்த வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தவறு
மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை 60-லிருந்து 70-ஆக உயர்த்த வேண்டும் என்கிற கருத்து மிகவும் தவறானது. மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணம் உள்ளிட்ட மிக குறைந்த அளவே சலுகைகள் வழங்கப்படுகின்றன. 60 வயதில் ஒருவர் பிறர் துணையின்றி தனியாக பயணிக்க முடிவதில்லை. இதில் 70 எனில் மிகவும் சிரமம். எனவே வயதை 70-ஆக உயர்த்தக் கூடாது.
என். சண்முகம், திருவண்ணாமலை.

மக்கள் நலன்
இக்கருத்து சரியானதல்ல. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூத்த குடிமக்களுக்கான அரசின் சலுகைகளை எப்படி அனுபவிக்க முடியும்? சலுகைகள் வழங்குவது குறையும் என்பதால் அரசாங்கத்திற்கு பண இழப்பு ஏற்படாது என்பதை மட்டும் கணக்கிடாமல், நாட்டு மக்களின் நலனை எண்ணிப் பார்த்து தற்போதுள்ள 60 வயது என்பதே மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பாகத் தொடர வேண்டும்.
எஸ்.எஸ்.ஏ. காதர், காயல்பட்டினம்.

பாதிப்பு
விஞ்ஞான வளர்ச்சியால் மனிதனின் சராசரி ஆயுள் கூடிக்கொண்டிருக்கிறது. தற்போது 60 வயதை தாண்டிய மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். தங்கள் வயதை மறந்து இளமை எண்ணத்தோடு வாழும் அவர்களுக்கு மூத்த குடிமகன் என்ற பட்டத்தை சூட்டுவதால் அவனது உள்ளம் பாதிப்புக்கு ஆளாகிறது. இதனைத் தவிர்க்க மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 70 என மாற்றுவதே சரி.
எஸ். முருகானந்தம், தாழக்குடி.

அவசியமல்ல
மூத்த குடிமக்களின் வயது வரம்பை 60-லிருந்து 70-ஆக உயர்த்தினால் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் வங்கியில் வைத்திருக்கும் வைப்புத் தொகைக்கான வங்கி வட்டி விகிதம் குறையும். ரயில் பயணக் கட்டணச் சலுகையையும் இழக்க நேரிடும். முதுமை
யினால் ஏற்படும் மருத்துவச் செலவை ஈடுகட்ட முடியாது. எனவே இதனை 70-ஆக உயர்த்த வேண்டியது அவசியமல்ல.
சி. இராசேந்திரன், மணலி.

நிம்மதி
தற்போது மூத்த குடிமக்களாகக் கருதப்படும் 60 வயது நிறைந்தவர்கள் அரசின் சலுகைகள், தங்கள் சேமிப்பு போன்றவற்றிற்குப் பெறும் கூடுதல் வட்டித்தொகை இவற்றைப் பெறுவது நியாயமாகும். வயது வரம்பை 70-ஆக ஆக்கி, அவர்களைத் தவிக்க விடுவது நியாயமல்ல. அறுபது ஆண்டு உழைத்துக் களைத்தவர்கள் மீதி காலத்தை நிம்மதியாகக் கழிக்க 60 வயதை மாற்றக் கூடாது.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

அநியாயம்
பணி நிறைவிற்குப் பின்னும், வாழ்ந்து காட்ட உற்சாகமூட்ட மூத்த குடிமக்களுக்கு அரசால் வழங்கப்படுபவைதான் சலுகைகள். அப்படிப்பட்ட சலுகைகளை மூத்த குடிமக்கள் என்று கூறி இதுவரை அறுபது வயதில் கொடுத்துவிட்டு தற்போது அதனை அரசே பறிப்பது சரியல்ல. மாற்றம் என்ற மனப்பான்மை பிறவற்றில் வருவது நியாயம். வயதுச் சலுகையில் வருவது அநியாயம்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

தடையல்ல
நம் நாட்டில் அரசு நிதி உதவிகள் மூத்த குடிமக்கள் என்பதால் 60 வயதிலிருப்பவர்களுக்கு பெருமளவுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டு அவர்களை உழைக்க மறுப்பவர்களாக்கி விடுகிறது. இந்த நிதியை சமூக முன்னேற்றம் போன்ற மிக முக்கியமான அடிப்படை விஷயங்களுக்கு செலவிடலாம். உழைப்புக்கும் சாதனைக்கும் வயது ஒரு தடையல்ல. 70-ஆக உயர்த்துவதே சரி.
ரோஜா ராஜசேகரன், பட்டுக்கோட்டை.

விபரீதம்
மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை 60-லிருந்து 70-ஆக உயர்த்த வேண்டும் என்பது விபரீதமான யோசனையாகும். 60 வயது அடைந்துவிட்ட பாமர மக்கள், நடுத்தரப் பிரிவு மக்கள் மூத்த குடிமக்களுக்காக அரசு வழங்கும் சலுகைகளையும் பயன்களையும் அரசாங்கமே ஏன் தட்டிப்பறிக்க வேண்டும்? இது மானுட நேயமற்ற ஒரு செயலாகும். எனவே வயது வரம்பு 60 என்பதே சரியாகும்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

பிரச்னைகள்
இக்காலத்தில் வேலைப்பளு, நோயின் தாக்கம் மற்றும் மனஅழுத்தம் காரணமாக 50 வயதிலேயே பலரால் வாழ்க்கைப் போராட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இந்த வயதிலேயே, நினைவு மறதி, உடல் நலிவு போன்ற பல பிரச்னைகள் வரத்தொடங்கி, 60 வயதில் அவை உச்சத்தை அடைகின்றன. அதனால், மூத்த குடிமக்களுக்கான வயது 60 என்பதே சரி. 70-ஆக்க வேண்டாம்.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

போர்க்கொடி
மருத்துவ வளர்ச்சி காரணமாக ஒரு மனிதனின் சராசரி வயது முன்பைவிட அதிகரித்துள்ளது. எனவே மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை 70-ஆக உயர்த்துவதில் தவறில்லை. ஆனால் அரசுப் பணியில் உள்ளோர் தங்களின் ஓய்வு பெறும் வயதையும் உயர்த்த வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினால் வேலை வாய்ப்பற்றிருக்கும் பல இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
துரை.ஏ. இரமணன், துறையூர்.

பதற்றம்
இக்கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இன்றைய நிலையில் மனிதர்களுக்கு மன அழுத்தம் அதிகம். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களிடையே சிந்தனைத் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. எதிலும் அவசரம் எங்கும் பதற்றம். எல்லாவற்றிலும் குழப்பம். இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு அறுபது என்பது சரியே. வயது வரம்பை உயர்த்த வேண்டாம்.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

மன உளைச்சல்
இந்த கருத்து சரியல்ல. 60 வயது ஆனாலே உடல் உழைப்பு என்பது பெரும்பாலானவர்களால் முடியாத நிலை உள்ளது. 70 வயதாக உயர்ந்துகின்றபோது அரசு சலுகைகள் கிடைக்காமல் போகலாம். பெற்ற பிள்ளைகள் பெற்றோரை புறம்தள்ளும் நிலையில் அரசு சலுகையும் கிடைக்காமல் போனால் மன உளைச்சலுக்கு ஆட்படுவார்கள். எனவே மூத்த குடிமக்களுக்கான வயதை உயர்த்துவது சரியல்ல.
கே. சிங்காரம், வெண்ணந்தூர்.

அவலம்
சிலருக்கு ஓய்வூதியம் வருகிறது என்ற எண்ணத்தில்தான் பிள்ளைகள் அவர்களைத் தங்களுடன் வைத்துள்ளார்கள். இல்லையெனில் முதியோர் இல்லம் தேடி அலையும் அவலம்தான் ஏற்படும். 60 வயதில் கொடுக்கப்படும் அரசு சலுகைகள் எல்லாம் கிடைக்க வாய்ப்பு இல்லை. 60-ஐக் கடந்துவிட்டால் வாழும் காலம் குறைவாக உள்ளது. எனவே வயதை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை.
சி. இராஜேந்திரன், சித்தலப்பாடி.

கண்கூடு
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது அறுபது என வரையறை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தனியார் நிறுவனங்களும் பணி ஓய்வுக்கான வயதை அறுபது முதல் அறுபத்தி ஐந்து வரை நிர்ணயித்திருப்பதும் கண்கூடு. இந்தச் சூழ்நிலையில் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை அறுபதிலிருந்து மாற்றி எழுபது என நிர்ணயிப்பதுதான் முறையானதும், நியாயமானதும் ஆகும்.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

பொருத்தமற்றது
மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை 60-லிருந்து 70-ஆக உயர்த்த வேண்டும் என்ற கருத்து பொருத்தமற்றது. சராசரி மனிதனின் உடலமைப்பு 50 வயதிற்கு மேலாக வரும்போது ஏதேதோ நோய்கள் அவனைப் பிடித்துக்கொள்கின்றன. அவர்கள் 60-ஐ நெருங்கும்போது மனச்சோர்வு, உடல்சோர்வு பெற்று தவிக்கின்றனர். எனவே மூத்த குடிமக்கள் வயது வரம்பை மாற்ற வேண்டாம்.
எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.

ஏற்கத்தக்கதல்ல
60 வயதுக்கு மேல் அளிக்கப்படும் சலுகைகளை 70 வயதுக்குமேல் என்று உயர்த்திவிட்டால் சலுகைக்கான செலவினம் குறைந்துவிடும் என்பது அரசின் எண்ணம். குறைந்த வயதிலேயே நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், சலுகைகள் அளிக்கப்படும்போது, 60 வயது மூத்த குடிமக்களுக்கு சலுகையைக் குறைப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com