'இந்தக் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த முடிவெடுத்திருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'இந்தக் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த முடிவெடுத்திருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சுமை குறையும்
இந்தக் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடத்த முடிவெடுத்திருப்பது சரியே. மத்திய இடைநிலை கல்வி வாரிய திட்டப்படி இதை மாற்றியமைத்திருப்பதால் மாணவர்களின் பாடச்சுமை பெருமளவு குறையும். மேலும் ஆசிரியர்களுக்கும் கேள்விக்கான பதில்களை சரி பார்ப்பது எளிதாகும். எப்போதோ செய்ய வேண்டியதை இப்பொழுது செய்திருக்கிறார்கள்.
எஸ்.வி. ராஜசேகர், சென்னை.

ஆசை
பெரும்பாலான பள்ளிகள் 12-ஆம் வகுப்புப் பாடங்களுக்கே முக்கியத்துவம் கொடுக் கின்றன. தனிப்பயிற்சிக் கல்லூரிகள் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்கிற ஆசையை மாணவர் மனதில் விதைத்து பெரும் தொகையை வசூலிக்கின்றன. நல்லப் பாடப்பிரிவுகளைத் தெரிந்தெடுத்துப் படிக்க 11-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு அவசியமான ஒன்று.
இராம. கோவிந்தன், தென்னிலை.

குழப்பம்
பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த முடிவெடுத்திருப்பது சரியல்ல. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து, பிளஸ் 2 பாடத்தை தேர்வு செய்து அதில் பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கும்போதே பிளஸ் 1 - இல் பொதுத்தேர்வு என்றால் பாடத்தைவிட, தேர்வில்தான் மாணவர்களின் கவனம் செல்லும். ஒருவித பயம் ஏற்படும். இது மாணவர்களிடையே வீண் குழப்பத்தை உருவாக்கும்.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

அக்கறை
இம்முடிவு வரவேற்புக்குரியது. காலத்தை விரயப்படுத்தாமல் எப்போதும் கல்விச் சிந்தனை முனைப்பில் இருக்க இத்திட்டம் வழிவகுக்கிறது. 11-ஆம் வகுப்பில் தவறியவர்கள் கல்வியைத் தொடர முடியாது எனக்கூறாமல் 12-ஆம் வகுப்பிற்கு வந்து பயின்று தோல்விப் பாடத்தைச் சரி செய்து தேர்வு எழுதலாம் என்ற கருத்தும் மாணாக்கர்களைக் கல்வியில் முழு அக்கறை கொள்ளச் செய்யும்.
தெ. முருகசாமி, புதுச்சேரி.

எளிமை
சரியான முடிவை அரசு எடுத்திருக்கிறது. இதன்படி பிளஸ் 1-இல் தேர்வு எழுதுவோர், பிளஸ் 2 வகுப்பிலும் எளிதாகத் தேர்ச்சி
பெறலாம். அவர்கள் உயர்கல்விக்குத் தகுதி உடையவர்களாகவும் திகழ முடியும். மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண்கள் இரண்டும் சேர்த்துத் தேர்ச்சி அளிக்கப் பெறுவதும் வரவேற்கத்தக்கதே. மாணவர்க்கு நிச்சயமாக இது எளிமையாகும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

பாதிப்பு
பல பள்ளிகள் 12-ஆம் வகுப்புப் பாடத் திட்டங்களை பிளஸ் 1 படிக்கும்போதே தொடங்கி விடுகின்றன. 11-ஆம் வகுப்பில் உள்ள பாடங்களைப் படிக்காமலே 12-ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் பாடங்களைப் படிப்பதால் அம்மாணவர்கள் பலவிதங்களிலும் பாதிக்கப்படுகின்றார்கள். ஆகவே பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதிய பிறகே பிளஸ் 2 பொதுத்தேர்வு என்பதே புத்திசாலித்தனம்.
சோம. பொன்னுசாமி, சென்னை.

அளவுகோல்
பொதுத்தேர்வு என்று வந்துவிட்டால் ஆசிரியர்களும் மாணவர்களும் பிளஸ் 1 பாடத்திட்டத்தில் முழு கவனம் செலுத்த வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் மன அழுத்தம் குறையும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும். தேர்வு பயத்தைப்போக்க உளவியல் சார்ந்த பயிற்சியைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். தேர்வு என்பது கல்வியை அளக்கும் அளவுகோல் என்ற சிந்தனை மாற வேண்டும்.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

பின்பற்றக் கூடாது
இது தேவையல்ல. பிளஸ் 2 வகுப்புப் பொதுத்தேர்வுக்கான மாற்றம் பெரும்பாலும் சி.பி.எஸ்.இ.யை ஒத்துள்ளது. அதை அப்படியே பின்பற்றக் கூடாது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான மதிப்பெண்ணை 100-ஆகக் குறைக்கக் கூடாது. மொழிப் பாடங்களுக்கு 2 வினாத்தாள்கள் தேவையில்லை. ஒரே தாளை வைத்தால் 100 + 100 = 200 மதிப்பெண்கள் குறையும்.
ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.

அலட்சியம்
பிளஸ் 1 பயிலும் மாணவர்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாதவர்கள். எதுவாக இருந்தாலும் பிளஸ் 2 வகுப்பில் பார்த்துக் கொள்ளலாம் என்னும் அலட்சியப் போக்கு அவர்களிடம் உள்ளது. பிளஸ் 1 வகுப்பிற்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்களின் பாடச்சுமை குறையும். மேலும் பிளஸ் 2 குறித்து மாணவர்களிடையே நிலவும் அச்சத்தையும் இது போக்கும்.
கி. பாஷ்யம், சலுப்பை.

மன உளைச்சல்
பிளஸ் 1 வகுப்பிற்கு பொதுத்தேர்வு தேவையில்லை. இது நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு கை கொடுக்கும். சுமாராகப் பயிலும் மாணவர்களுக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் இதனால் தீமைதான். தனியார் பள்ளிகளும் தங்களது பெருமையை நிலைநாட்ட வேண்டுமென்பதற்காக மாணவர்களுக்கு அதிக கெடுபிடிகள் உண்டாக்கி மாணவர்களின் மன உளைச்சலை அதிகரிக்கும்.
பைரவி, புதுச்சேரி.

தேவையற்றது
பிளஸ் 1}க்கு பொதுத்தேர்வு நடத்துவதால் மட்டுமே கல்வித்தரம் உயர்ந்து விடுமா? சிறந்த முறையில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அது உதவக்கூடும். தொடர்ந்து மூன்று பொதுத்தேர்வுகளை சந்திப்பதால் மாணவர்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டு படிப்பில் ஆர்வம் குறைந்துவிடும். பாடத்திட்டத்தில் மாற்றத்தை வரவேற்கலாம். பிளஸ் 1-க்கு பொதுத்தேர்வு தேவையற்றது.
க.மா. சிட்டிபாபு, சென்னை.

சிறந்த பலன்
மூன்று வருடங்கள் தொடர்ந்து பொதுத்தேர்வு என்றால் மாணவர்களின் மன அழுத்தம் அதிகமாகும். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பயந்து பயந்து படிப்பதால் மாணவர்களின் உடல் நலன் பாதிக்கக்கூடும். இதைத் தவிர்த்து பிளஸ் 1 வகுப்பு பாடங்களை நடத்தாமல் நேரடியாக பிளஸ் 2 பாடத்தை நடத்தும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதே சிறந்த பலனைத் தரும்.
வி. நாமதுரை, சென்னை.

தடுமாற்றம்
சில தனியார் பள்ளிகள் நேரடியாக பிளஸ் 2 பாடங்களுக்கு சென்று விடுகிறார்கள். அடிப்படை கல்வி இல்லாமல் மாணவர்கள் தடுமாறுகிறார்கள். பிளஸ் 2 பொதுத்தேர்வின் முடிவுகளை மனதில் கொண்டு பிளஸ் 1-இல் பாஸ் மார்க் வாங்கினாலும் நிறுத்திவிடுகிறார்கள். நியாயமான கல்விக்கு பிளஸ் 1}இல் பொதுத்தேர்வு நிச்சயம் தேவை.
என்.எஸ். முத்துகிருஷ்ணராஜா,
இராஜபாளையம்.

தூண்டுகோல்
தற்போது பிளஸ் 1 வகுப்பில் சரியாக படிக்காதவர்கள் தேர்வு பற்றிய கவலை இன்றி ஏனோ தானோ என்று இருந்து விடுகிறார்கள். தேர்வு என்பது மாணவர்களை முட்டாள்கள் ஆக்கும் வேலையல்ல. தரமாக படித்து மேலும், மேலும் அறிவை வளர்த்துக் கொள்ள ஒரு தூண்டுகோல்தானே. ஆகவே பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு நடத்த முடிவெடுத்து இருப்பது மிகவும் சரியானதுதான்.
என்.கே. திவாகரன், கோயம்பத்தூர்.

பாடத்திட்டம்
இம்முடிவு மிகவும் சரியே. மேல்நிலைக் கல்விக்கான அடிப்படை பாடத்திட்டம் பிளஸ் 1ல்தான் இருக்கிறது. ஆனால் அதற்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. பெரும்பாலான தனியார் பள்ளிகள் அப்பாடத்தை நடத்துவதேயில்லை. பிளஸ் 1 பாடத்திட்டத்திலிருந்தே போட்டித் தேர்வுகளில் பெரும்பாலான கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு அவசியமானதே.
சூ. காயத்ரி, சிதம்பரம்.

அவசியம்
இது முற்றிலும் சரியானதேயாகும். பெரும்பான்மையான பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பாடங்களை முதல் 4 மாதங்களில் விரைந்து நடத்தி முடித்துவிட்டு பிளஸ் 2 பாடங்களை தொடங்கி விடுகிறார்கள். அதை தடுத்து முதலாண்டு பாடங்களை ஆசிரியர்கள் முறையாக நடத்துவதற்கும், மாணவர்கள் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கும் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு அவசியமாகும்.
பா. இராமகிருஷ்ணன், சிந்துபூந்துறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com