'சரியாகச் செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார்வசம் ஒப்படைக்கலாம் என்கிற மத்திய கொள்கைக் குழுவின் பரிந்துரை சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'சரியாகச் செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார்வசம் ஒப்படைக்கலாம் என்கிற மத்திய கொள்கைக் குழுவின் பரிந்துரை சரியா?'

காரணங்கள்
சரியாகச் செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவு தவறானது. அப்படி ஒப்படைப்பதாயிருந்தால், பெரும்பான்மையான அரசுப் பள்ளிகளை அவ்வாறு ஒப்படைக்க நேரிடும். அரசுப் பள்ளிகள் சரியாகச் செயல்படாததற்கான காரணங்களை அறிந்து அவற்றைக் களைவதுதான் சரியாகும். இம்முடிவு, ஏழை மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும்.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

பெரும் பணம்
எந்த அரசு நிறுவனமும் சரியாகச் செயல்படவில்லையெனில் அதை தனியார் மயமாக்குதல் தான் தீர்வா? தனியார் பள்ளிகளில் மாணவர் நலன் என்பது இரண்டாம் பட்சம்தான். அவர்களின் நோக்கம், மாணவரின் மதிப்பெண், அதன்மூலம் அந்த நிறுவனம் பெறும் பெரும் பணம். ஆனால், அரசுப் பள்ளிகள் ஏழை, எளிய மாணவர்களை, மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்றன. 
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

முன்னேற்றம்
சரியாகச் செயல்படாத அரசுப் பள்ளிகளைத் தனியார் நிறுவனங்கள் தத்தெடுத்துக் கொண்டு அவற்றிற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை சுகாதார வசதிகள் என அவசியமான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து தரும்போது இயல்பாகவே மாணவர் சேர்க்கை, தேர்ச்சி விகிதம் எனப் பலவற்றிலும் முன்னேற்றம் காண முடியும். இம்முடிவு வரவேற்கத்தக்கதே.
வெ. பாண்டுரங்கன், திருநின்றவூர்.

இயந்திரம்
தனியார் வசம் ஒப்படைத்தால் அரசுப் பள்ளிகள் சரியாக இயங்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? மேலும் தனியார் வசம் உள்ளபள்ளிகளில் முறைகேடான நியமனங்கள், மாணவர்களிடம் அதிகக் கட்டண வசூல் போன்றவை வழக்கமாக நடைபெற்று கல்வித்தரம் குறைவதைப் பார்க்கிறோம். ஓர் இயந்திரம் பழுது அடைந்துவிட்டால் பழுதை நீக்க முயற்சி செய்ய வேண்டுமே தவிர, அதை விற்றுவிடுவது நமக்கு இழப்புதான்.
வளவ. துரையன், கூத்தப்பாக்கம்.


நாட்டமின்மை
மத்திய கொள்கைக் குழுவின் பரிந்துரை நகைப்பிற்குரியது. அரசால் சரி செய்ய முடியாததைத் தனியார் சரி செய்ய முடியுமென்றால் அப்புறம் அரசு எதற்கு? அரசு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி அனைவருக்குமான கல்வியைக் கொடுக்க முன்வராமல் கல்வியை வியாபார ரீதியாகச் செயல்படுவது கல்வியின் மீது அரசிற்கு இருக்கும் நாட்டமின்மையையே காட்டுகிறது.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

ஒளிவிளக்கு
அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவு ஏற்கத்தக்கதல்ல. இலாப நோக்கமே குறிக்கோளாகக் கொண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஏழைகளுக்கு எட்டாக்கனியாக கல்வி ஆகிவிடக் கூடாது. எனவே ஒரு மனிதனுக்கு அனைத்து விழுமியங்களையும் வழங்கி சமுதாயத்தில் சிறப்பெய்தி வாழ்ந்திடத் துணை நிற்கும் கல்வி என்னும் ஒளிவிளக்கை அரசுப் பள்ளிகளில் மட்டுமே பெற்றிட இயலும்.
இராம. கோவிந்தன், தென்னிலை.

எச்சரிக்கை
இந்தப் பரிந்துரை சரியானதே. அரசு சேவைகள் மிகவும் மந்தமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே தனியார் வசம் ஒப்படைத்தால் அரசு நிர்வாகத்தைவிட சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதில் பணிபுரியும் ஆசிரியர்கள் நலன் பாதிக்கப்படாமல் இந்த மாற்றம் நிகழ வேண்டும். மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்துவிடாமலும் எச்சரிக்கை செய்ய வேண்டும்.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

கடமை
சரியாகச் செயல்படாத அரசுப் பள்ளிகளைச் செயல்பட வைப்பது அரசின் திட்டமாக இருக்க வேண்டும். கல்வியை வணிகமாகப் பார்க்கக் கூடாது. அரசு தனியார் வசம் ஒப்படைத்தால் கல்வி வியாபாரமாக மாற வாய்ப்பு உண்டு. மேலும் கல்வி அறிவை வளர்க்கும் மூலதனம் என்பதை மறந்துவிடக் கூடாது. மத்திய கொள்கைக் குழுவின் பரிந்துரை தவறானது. அனைவருக்கும் கல்வியை கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.


எட்டாக்கனி
இது விவேகமற்ற செயல். அரசுப் பள்ளிகள் சரியாகச் செயல்படாததற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்ய வேண்டாமா? சரியாக செயல்படாத அரசு கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதால் ஏழை, எளியவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாகிவிடும். இந்தப் பரிந்துரை மிகமிகத் தவறானது.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

பண பலம்
ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் எந்த வசதியும் இல்லாத நிலையில் உள்ளன. அப்பள்ளிகளை தனியார் ஏற்று நடத்த முன்வர மாட்டார்கள். தனியார் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை படிக்கவைக்க பெரும்பாலானவர்களிடம் போதிய பண பலம் இல்லை. குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்க வசதி உள்ளது. தனியார் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களையே சேர்த்துக் கொள்வர்.
கே. கோவிந்த ராஜன், அல்லூர்.

கண்கூடு
தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணக் கொள்ளை அதிகமாகயிருந்தாலும் கண்டிப்பான ஒழுங்குமுறை ஆசிரியர்களின் கடன உழைப்பு, ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளை மாணவர்கள் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு மற்றும் உயர்தரமான கல்வி போன்றவை உள்ளன. அரசு அதிகாரிகள், ஊழியர்களின் பிள்ளைகளை தனியார் பள்ளிகளிலேயே சேர்க்கிறார்கள் என்பது கண்கூடு.
செ. சுவாமிநாதன், டால்மியாபுரம்.

இடமாற்றம்
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களைப் பணி நிரவல் முறையில் வெளி மாவட்டப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்திட வேண்டும். மாணாக்கர்களை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன்பின், செயல்படாத பள்ளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். ஆங்கில மோகமும், நகர மோகமும் பெற்றோர்களிடம் குறைந்தால்தான் இதற்கொரு விடிவு வரும்.
ச. சுப்புரெத்தினம், 
மயிலாடுதுறை.


லட்சியம்
சரியாகச் செயல்படாத அரசுப் பள்ளிகளை திறனாய்வு செய்து சிறப்பாக செயல்பட வைக்க வேண்டுமே தவிர, தனியார் வசம் ஒப்படைப்பது என்பது ஏற்புடையதல்ல. அரசுப் பள்ளிகள் தனியார் வசமானால் அது கல்வி வணிகமாக மாறுமே தவிர, எல்லோர்க்கும் கல்வி என்ற லட்சியம் சிதைந்து போய்விடும். கல்வியில் எந்த மாற்றமும் வல்லுநர் குழுவின் பரிந்துரையோடு கொண்டுவர வேண்டும்.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

எப்போது?
அரசுப் பள்ளிகளைச் சீரமைத்து, மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தி தரமான கல்வியை ஏழை, எளியவர்க்குக் கொடுப்பதை விட்டுவிட்டு, எங்களால் இயலாது என்று அரசுப் பள்ளிகளைத் தனியார் வசம் ஒப்படைக்கலாம் என்கிற அரசின் கொள்கை மிகமிகத் தவறானதாகும். கல்வியில் சிறந்த நாடுதான் வளம் நிறைந்த நாடு என்று நம் நாட்டைப் பற்றி நாம் பெருமையோடு சொல்லிக் கொள்வது எப்போது?
அ. கருப்பையா, பொன்னமராவதி.

மக்கள் நலன்
ஒரு துறையை அரசு எடுத்து நடத்துவதன் அடிப்படை நோக்கமே மக்கள் நலன்தான். அதில் பல சீர்திருத்தங்களும், கண்டிப்பான நடவடிக்கைகளும் எடுக்க வேண்டுமே தவிர, தனியார் வசம் அதை கொடுக்கக் கூடாது. லாப நோக்கம் இன்றி தனியார் நிறுவனம் இயங்க முடியாது. ஓர் அரசாங்கம் சரியாக இயங்கவில்லை எனில் தனியார் வசம் அதை கொடுத்துவிட முடியுமா?
கி. சந்தானம், மதுரை.

புகலிடம்
இது படிப்படியாக கல்வித் துறையை தனியாருக்குத் தாரை வார்க்கும் ஒத்திகையே. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்கள் தம் பிள்ளையின் கல்விக்கு அரசுப் பள்ளிகளையே நம்பியுள்ளனர். தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியாத ஏழைகளின் புகலிடமாக அரசுப் பள்ளிகளே விளங்குகின்றன. காலியாக உள்ள ஆசிரியப் பணி இடங்களை நிரப்புவதே அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும்.
பொன் நடேசன், 
சின்ன அய்யம்பாளையம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com