'புதிய வாகனம் வாங்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்கிற அரசின் உத்தரவு ஏற்புடையதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'புதிய வாகனம் வாங்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்கிற அரசின் உத்தரவு ஏற்புடையதா?' 

எதற்கு?
புதிய வாகனம் வாங்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்கிற அரசின் உத்தரவு ஏற்புடையதல்ல. ஒருவர் மிகவும் வசதியுள்ளவராக இருக்கலாம். அவர் புது வாகனம் வாங்கிவிட்டு அதனை ஓட்டுவதற்கு ஊதியத்திற்கு ஓர்ஓட்டுநரை அமர்த்தி கொள்ளலாம். அப்பொழுது எதற்கு ஓட்டுநர் உரிமம்? வாகனத்தை ஓட்டும் பொழுதுதான் உரிமம் தேவை. வாங்குவதற்கு தேவையில்லை.
டி.ஆர். ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

நல்லதல்ல
அரசின் உத்தரவு ஏற்புடையதல்ல. புதிய வாகனங்களை தொழிலதிபர்கள், அதிகாரிகள், செல்வந்தர்கள்தான் வாங்குகிறார்கள். அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வாங்க நேரமேது? பல சிந்தனைகளில் எந்த நேரமும் இருக்கும் தொழிலதிபர்கள் வாகனத்தை ஓட்டுவது நல்லதல்ல. உரிமம் பெற்ற தொழிலாளர்கள் வாகனங்களை ஓட்டுவதுதான் சிறந்தது.
என்.எஸ். முத்துகிருஷ்ணராஜா, 
இராஜபாளையம்.

தொல்லைகள்
உரிமம் இல்லாதவர்கள் மற்றும் காலாவதியான உரிமத்தோடு வாகனங்களை இயக்குபவர்கள் ஏற்படுத்தும் விபத்துகளில் சிக்கி காப்பீடு கிடைக்காமல் துன்பப்படுபவர்கள் ஏராளம். இதுபோன்ற தொல்லைகளையும், தேவையற்ற காலதாமதத்தையும் தடுக்க வேண்டுமென்றால், புதிய வாகனம் வாங்கும்போதே உரிமம் கட்டாயம் தேவை என்கிற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

கட்டாயம் கூடாது
இன்றைக்கு வசதிபடைத்தவர்கள் வாகனம் வாங்கும் விருப்பம் உள்ளவர்களாகவும், வறுமையில் உள்ளவர்கள் ஓட்டுநர் பயிற்சி பெற்றவர்களாகவும் இருப்பது யதார்த்தம். வாகனம் வாங்குவோர் ஓட்டுநரை பணியில் வைத்துக் கொள்கின்றனர். சொந்தமாக வாகனம் வாங்குவோர், ஓட்டுநர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துதல் கூடாது.
பொன் நடேசன், 
சின்ன அய்யம்பாளையம்.

இடையூறு
இக்கருத்து சரியானதே. வாகனமும் புதிது, ஓட்டுநரும் புதிது எனும்போது பாதுகாப்பான பயணத்திற்கு இடையூறு ஏற்படத்தானே செய்யும்! வாகனம் வாங்குவோர் அவற்றை நிறுத்துவதற்கும் தனி இடம் ஒதுக்கி, சாலைகளில் இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று அரசு விதி கூறும்போது ஓட்டுநர் உரிமம் அதைவிட முக்கியமானது என்பதை எல்லோருமே உணர்ந்து செயல்பட வேண்டும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

கேலிக்கூத்து
திறமையுள்ள ஓட்டுநர்கள் உரிமம் வாங்க இயலாத நிலை உள்ளது. படிப்பும், வாகனம் வாங்குமளவுக்கு பொருளாதார வசதியும் உள்ளவர்கள் ஓட்டுநர் பயிற்சி பெற ஆர்வம் காட்டுவதில்லை. வாகனத்தை இயக்க தனியாக ஓட்டுநரை பணி அமர்த்திக் கொள்ளும் இக்காலகட்டத்தில் புதிய வாகனம் வாங்குவோர் உரிமம் வைத்திருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிப்பது கேலிக்கூத்தானது.
ந. ஜெயசூர்யா, கண்ணமங்கலம்.

விபத்துகள்
இன்றைக்கு பத்து வயதில் உள்ளவர்கள் எல்லாம் வாகனங்களை ஓட்டுவதை நாம் பார்க்கிறோம். இது அடிக்கடி பெரும் விபத்துகளை ஏற்படுத்தக் காரணமாகிவிடுகிறது. எனவே உரிய வயது வந்தவர்கள் வாகனம் ஓட்டுவதற்குரிய உரிமம் பெற்று வாகனங்களை இயக்கினால் விபத்துகள் குறையும். எனவே ஓட்டுநர் உரிமம் உடையவர்களே வாகனம் வாங்க வேண்டுமென்பது சரியே.
இராம. கோவிந்தன், தென்னிலை.

நியாயமல்ல
புதிய வாகனம் வாங்குபவர்கள் அனைவரும் ஓட்டுநர் ஆக இருந்திட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வசதிபடைத்தவர்கள் தாம் கார் வாங்கிய பின்னர் ஓட்டுநர் உரிமம் பெற்றவரை தம் கார் ஓட்டுநராக பணியில் அமர்த்திக் கொள்வதில் தடை ஏதும் இருந்திட வாய்ப்பில்லை. எனவே புதிய வாகனம் வாங்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்கிற அரசின் உத்தரவு நியாயமல்ல.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

நோக்கம்
அரசின் இந்த உத்தரவு பொதுநலன் சார்ந்த ஒன்றாகும். இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று வாகனங்களின் பெருக்கம் அதிகம். ஆனால், சாலை வசதிகள் குறைவு. இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் இல்லாது வாகனம் ஓட்டுவது என்பது அடிக்கடி விபத்து ஏற்படுவதற்கு வழி வகுக்கும். முறையாகப் பயிற்சி பெற்ற பின்னர் வாகனம் ஓட்ட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி.

சர்வாதிகாரம் 
இந்த உத்தரவு சரியல்ல. வாகனத்தை ஓட்டுபவருக்குத்தான் ஓட்டுநர் உரிமம் தேவை. வாகனத்தை வைத்திருப்பவர் மிகவும் வயதானவராக இருக்கலாம். இதுவரை ஓட்டுநர் உரிமம் பெறாதவராக இருக்கலாம். ஓர் ஓட்டுநரை வைத்து வாகனத்தை இயக்கிக் கொண்டிருக்கலாம். அத்தகையவர் இப்போது புதிய வாகனத்தை வாங்கக் கூடாது என்று சொல்லுவது சர்வாதிகாரமாகும்.
இரா. தீத்தாரப்பன், தென்காசி.

உத்தரவாதம்
புதிய வாகனம் வாங்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்பது சரியே. அதற்குப் போதுமானதான பழகுநர் உரிமம் உடனே பெறுவதில் எவ்விதச் சிரமமும் இல்லை. விபத்து நேர்கையில் உரிய காப்பீடு பெற முடியும். இதனால் வயது குறைந்தோர் பெயரிலும், முதியோர் பெயரிலும் புதிய வாகனங்கள் வாங்குவது தவிர்க்கப்படும். உயிருக்கு உத்திரவாதம் உறுதியாகும்.
ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

சாலை விதிகள்
புதிய வாகனம் வாங்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்கிற அரசின் உத்தரவு ஏற்புடையதே. ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் முறையாக பயிற்சி பெற்று பின் உரிமம் பெற்று வாகனத்தை ஓட்டுவது இக்காலத்தில் சிரமமல்ல. மேலும் போக்குவரத்து பாதைகளையும், சாலை விதிகளையும் நன்குணர்ந்து வாகனம் ஓட்டினால் விபத்துகள் பெருமளவு குறையுமல்லவா?
உ. இராசமாணிக்கம், கடலூர்.

நகைப்பிற்குரியது
ஓட்டுநர் தேவையில்லாத டிராக்டர்கள் பற்றிய விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் புதிய வாகனம் வாங்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்கிற அரசின் உத்தரவு நகைப்பிற்குரியது. வாகன உரிமையாளர் பலர் சம்பளத்திற்கு வாகன ஓட்டிகளை நியமித்துப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க அரசின் உத்தரவு ஏற்கத்தக்கதல்ல.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

காரணம்
இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. தமிழகத்தில்தான் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன. இதற்கு அடிப்படை காரணம் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோர் அதிகமாகி வருவதே. மேலும் ஒரு வீட்டில் இரு சக்கர வாகனம் ஓட்ட உரிமம் பெற்றவர் ஒருவர் எனில், உரிமம் இல்லாமல் அதை பயன்படுத்துவோர் பலர் இருப்பர். இந்நிலையில் அரசு உத்தரவிட்டிருப்பது சரியே.
என். சண்முகம், திருவண்ணாமலை.

சாட்சி
சிறுவர்களும் சிறுமிகளும் கண்மண் தெரியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வதை அன்றாடம் பார்க்கின்றோம். மேலும் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களில் ஏறக்குறைய கால் பங்கிற்கு மேற்பட்டவர்களுக்கு உரிமம் இல்லையென்பதுதான் கசப்பான உண்மை. தற்சமயம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் காணப்படும் கும்பலே இதற்கு சாட்சியாகும்.
கே. வேலூச்சாமி, தாராபுரம்.

சரியல்ல
வாகனங்களை மூத்த குடிமக்கள் பலர் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக வாங்குகிறார்கள். இவர்கள் வாகனத்தின் உரிமையாளர்கள்தானே. அவர்களை உரிமம் வைத்திருக்க வேண்டுமென கூறுவது சரியல்ல. இவற்றை இயக்கும் ஓட்டுநர்களே கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். எனவே வாங்குவதற்கே ஓட்டுநர் உரிமம் கட்டாயமென்பது ஏற்புடையதல்ல.
மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com