'பொதுத் துறை வங்கிகள் முழு செயல் திறனுடன் இயங்க வேண்டுமானால் அவை தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'பொதுத் துறை வங்கிகள் முழு செயல் திறனுடன் இயங்க வேண்டுமானால் அவை தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சரியா?'

வரவேற்கத்தக்கது அல்ல
அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் கோரிக்கை வரவேற்கத்தக்கது அல்ல. வங்கி நடவடிக்கைப் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வுகளில் கவனம் செலுத்தாமை, பொறுப்பைத் தட்டிக் கழித்தல், இவையே வங்கி மோசடிகளை நடைபெறுவதற்கு காரணம். அரசியல் செல்வாக்குடைய பெருஞ்செல்வந்தர்களின் தலையீட்டால் வங்கி அதிகாரிகளும் கூட தடம் மாறிச் செல்லும் வாய்ப்புகள் உண்டு.
வி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, வரட்டணப்பள்ளி

மூட்டைப்பூச்சிக்கு பயந்து...
பொதுத்துறை வங்கிகள் முழு செயல்திறனுடன் இயங்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் அவை தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அபத்தமானது. பொதுத்துறை வங்கிகள், நிறுவனங்கள் முழு செயல்திறனுடன் இயங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை யாராவது கொளுத்துவார்களா?
கே. பாலச்சந்திரன், சிதம்பரம்

அரசியல்வாதிகள் தலையீடின்றி...
தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் காட்டும் கனிவான அணுகுமுறை, மென்மையான பேச்சு, துரித சேவை, எளிய நடைமுறைகள் இவைகளை வைத்து எல்லா வங்கிகளையும் தனியார்மயமாக்கிவிடலாம் என்று எண்ணத் தோன்றினாலும், தனியார் லாப நோக்கை முதன்மையாக வைத்துச் செயலாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. பொதுத்துறை வங்கிகள் லாப நோக்கத்தோடு சமூக சேவையையும் முதன்மைப்படுத்துகின்றன. அரசுத் துறை வங்கிகளில் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் இருந்தாலே போதும்.
எஸ். மணி, தச்சநல்லூர்

தனியார் வங்கியின் சேவை
தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவை அளித்து வருகின்றன. தனியார் வங்கியில் ஒரு தவறு நடந்தால் உடனே கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மேல் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுத் துறை வங்கியில் இவ்விதம் நடப்பதில்லை. விசாரணையைத் தாமதப்படுத்துதல், குற்றவாளிகள் தப்புவதற்கு மறைமுக வழிகள் செய்வது போன்றவை இயல்பாக நடக்கின்றன. 
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி

கேடு விளையும்
அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் கோரிக்கை சரியானது அல்ல. தனியார்மயத்தால் கேடு விளையும். பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகளை நன்கு ஆராய்ந்து, குறை நீக்கி, தற்போது உள்ள நடைமுறைகளைச் செப்பம் செய்தால் போதுமானது. தனியார்மயமாக்க வேண்டாம்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி

கோரிக்கை தவறு!
ஏழைகளுக்கான அரசின் பல்வேறு உதவிகள், மானியங்கள், நலத்திட்டங்கள் பொதுத் துறை வங்கிகள் மூலமாகத்தான் நிறைவேற்றப்படுகின்றன. அவ்வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால் இவையெல்லாம் பாதிக்கப்படும். கோரிக்கை தவறு.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி

பணம் பிரதானமாகிவிடும்
விவசாயக் கடன், கல்விக் கடன் போன்றவற்றைப் பொதுத்துறை வங்கிகளில் எளிதினில் பெறலாம். தனியார்மயமானால் இவ்விரண்டுமே தடைபடும். சமூக சேவை எனும் மனப்பாங்கு மறைந்து, பணம் ஈட்டுவதே பிரதானமாகிவிடும். எனவே தனியார் மயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தவறு.
ப. தாணப்பன், தச்சநல்லூர்

ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம்
பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கினால் கிராமப்புற கிளைகள் தொடர்ந்த நீடிக்குமா என்பது கேள்விக்குறி. தனியார்மயம் என்பது ஏற்ற தீர்வாகாது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியை அதிக அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டும். அதன் மூலம் பொதுத் துறை வங்கிகளின் செயல்திறனை மீட்டுருவாக்கம் செய்தலே நம் நாட்டுக்கு ஏற்றதாகும்.
என். கனகசபை, சென்னை

கடமையை உணர்ந்து...
பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வேண்டும் என்னும் கோரிக்கை சரியல்ல. பொதுத் துறை வங்கிகளில் பணி புரிபவர்கள் தங்கள் கடமையை உணர்ந்து பணி செய்தால் அந்த வங்கிகள் முழு செயல் திறனுடன் இயங்கும்.
அ. அமீர்பாட்சா, அறந்தாங்கி

எட்டாக்கனியாகிவிடும்
பொதுத் துறை வங்கிகளின் செயல்திறனை மேம்படுத்துதல் அவசியம். ஆனால் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்ற கருத்து சரியல்ல. பொதுத் துறை வங்கிகளின் தவறான அணுகுமுறையைச் சரி செய்ய வேண்டும். தனியார் வழியில் வங்கிகள் செயல்பட்டால், ஏழை எளிய மக்களுக்கு கடன் உதவி என்பது எட்டாக்கனியாகும். பொதுத் துறை வங்கிகள் மக்கள் சேவையை முன்வைத்துச் செயல்பட வேண்டும். லாபத்தை இலக்காக கருதக் கூடாது.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி

கோரிக்கை சரியானது
ஆரம்பத்தில் பொதுத் துறை வங்கிகளின் செயல் திறன் பாராட்டும்படியாக இருந்தது. ஏழை மக்கள் கடன் பெற்று முன்னேற்றம் அடைந்தனர். ஆனால் காலப்போக்கில் பொதுத் துறை வங்கிகளின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. பெரிய தொழிலதிபர்கள் பல ஆயிரம் கோடிகள் கடன் பெற உதவியது. மேலும் அந்தக் கடன்களை சரியாக வசூல் செய்யாத நிலையில், வாராக் கடன் சுமை எழுந்தது. எனவே வங்கிகள் சிறப்பாகச் செயல்படத் தனியார்மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை சரியானது.
வெட்டுக்காடு கே. சிங்காரம், வெண்ணந்தூர்

மூக்கை வெட்டுவதா?
பொதுத் துறை வங்கிகள் ஏற்பட்டதே அனைத்து குடிமக்களுக்கும் தரமான வங்கிச் சேவை அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அரசு வங்கிகளைத் தனியார்மயமாக்க வேண்டும் என்பது, ஜலதோஷத்துக்காக மூக்கை வெட்டிக் கொள்ளும் முட்டாள்தனத்துக்கு ஒப்பானது.
ஆர்.தீனதயாளன், காரமடை

அடித்தட்டு மக்களுக்கானது
வங்கிகளிடமிருந்து அந்நியப்பட்டிருந்த அடித்தட்டு மக்கள், அவை அரசு உடைமையாக்கப்பட்டதால் வங்கி வாடிக்கையாளர்களாக மாறினார்கள். பொதுத் துறை வங்கிகள் செயல் திறனுடன் இயங்க அவை தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்ற கருத்து, காலணியின் அளவுக்கு ஏற்ப கால்களை வெட்டுதல் போன்ற செயலுக்கு ஒப்பானதாகும்.
ஆ. முத்துக்கிருட்டிணன், மதுரை

நலிந்த பிரிவினருக்காக...
சமூகத்தில் நலிந்த பிரிவினர், ஏழைகள், விவசாயிகள், சிறு தொழில் முனைவோர் போன்றவர்களுக்கு உதவி செய்யத்தான் பல தனியார் வங்கிகள் அரசு உடைமையாக்கப்பட்டன. வங்கிகள் மீண்டும் தனியார் மயமானால், வணிகமயமாகிவிடுமே தவிர, சமூக சேவை என்பது கிடைக்காது. 
க. சுப்பிரமணியன், ஜாம்புவானோடை

தனியார்மயம் தீர்வல்ல
அரசுத் துறைகளில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளால் மக்கள் தனியார் துறையை ஆதரிக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் அரசுத் துறைக்கு மாற்று நிச்சயமாகத் தனியார் துறை இல்லை. வங்கிகளில் நடத்தப்படும் பல்வேறு முறைகேடுகள் தனியார் முதலாளிகளால்தான் அரங்கேற்றப்படுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியுமா? எனவே தனியார்மயம் என்பது தீர்வல்ல. குறைபாடுகள் களையப்பட வேண்டும். கொடுத்த கடனை சிரத்தையுடன் வசூல் செய்ய வேண்டும். செலுத்தாதவர்கள் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் அரசு வங்கிகளைக் காப்பாற்ற வேண்டும். அரசு வங்கியானது பல்வேறு வகைகளில் அரசுக்கு உறுதுணையாக இருக்கிறது. அது கைவிடப்படலாகாது.
த. யாபேத் தாசன், பேய்க்குளம்

பொதுநலன்
பொதுமக்கள் நலனுக்காகத்தான் பொதுத்துறை வங்கிகள் ஏற்படுத்தப்பட்டன. அரசின் நிர்வாக கவனக் குறைவு, ரிசர்வ் வங்கியின் கண்காணிப்புக் குறைவு, வங்கி அதிகாரிகள்-பணியாளர்கள் சிலரின் சுயநலம் போன்ற பல தவறுகள் பொதுத்துறை வங்கிகளின் நன்மதிப்பைக் கெடுத்துவிட்டன. அதற்காக வங்கிகளைத் தனியார்மயமாக்க வேண்டும் என்று எண்ணல் கூடாது.
என். முத்துக்கருப்பன், காரைக்குடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com