'தமிழகத்தில் மொழிப்போருக்கான களம் மீண்டும் உருவாகி உள்ளது' என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'தமிழகத்தில் மொழிப்போருக்கான களம் மீண்டும் உருவாகி உள்ளது' என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது சரியா?'

உரிமைக் குரல்!
தமிழகத்தில் மொழிப் போருக்கான களம் மீண்டும் உருவாகியுள்ளது என ஸ்டாலின் கூறியிருப்பது சரிதான். வட மொழி ஆதிக்கம் வளர்ந்தால் தமிழுக்குரிய இடம் பின்னுக்குத் தள்ளப்படும். இது போர்க்குரல் அல்ல. உரிமைக் குரல்!
ச. கண்ணபிரான், 
திருநெல்வேலி.

தவறாகும்
கட்சி நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படும்போது மொழிப் பிரச்னையைக் கையில் எடுப்பதும் பின்னர் விட்டு விடுவதும் திமுகவுக்கு வாடிக்கை. அவ்வாறான களம் உருவாகியுள்ளதாகக் கூறுவது தவறாகும்.
கோ. ராஜேஷ் கோபால், 
அரவங்காடு.

தடையேதும் இன்றி...
உலக மொழி என்ற பெயரால் ஆங்கிலமும், தேசிய மொழி-பொது மொழி என்ற பெயரால் இந்தியும் திணிக்கப்படாமல், தமிழகத்தில் தமிழுக்குரிய அங்கீகாரம் உறுதிப்பட வேண்டும். தமிழகத்தில் தமிழுக்குரிய உரிமையும் தகுதியும் பறிக்கப்படாமலும், பாதிக்கப்படாமலும் தடையேதும் இன்றித் தொடர வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் மொழிப்போருக்கான களம் மீண்டும் உருவாகாமல் தவிர்க்கப்படும்.
வி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, 
வரட்டணப்பள்ளி.

இன்று நிலை வேறு
1960-களில் திமுகவின் தூண்டுதலில் நடைபெற்றது மொழிப்போர் அல்ல. அராஜகம் நிறைந்த போராட்டம். அப்பாவி மாணவர்களைத் தூண்டிவிட்டு இந்தி மொழி மேல் தேவையற்ற வெறுப்பை அவர்கள் மனதில் விதைத்தனர். இன்று நிலைமை அப்படியல்ல. மாணவர்கள் உலக நடப்பை அறிந்துள்ளனர். அரசியல் தலைவர்கள் குடும்பத்தினர் இந்தி கற்பதும், ஆங்கிலம் மட்டுமே பயிற்றுவிக்கும் பள்ளிகளில் சேர்ந்து கல்வி கற்பதும் அனைவரும் அறிந்ததே. ஸ்டாலின் கூறுவதுபோல் மொழிப்போர் மீண்டும் வருவது கனவில் கூட நடக்க வாய்ப்பில்லை.
மா. தங்கமாரியப்பன், 
கோவில்பட்டி.

காலகட்டம் வேறு
திமுக ஆட்சிக் காலத்தில்தான் ஆங்கில வழிக் கல்விக்கூடங்கள் புற்றீசல் போல் தோன்றின. அவற்றை வளர்த்தெடுத்த பெருமை அவர்களையே சாரும். இந்தி கற்பிக்காத ஆங்கில வழிக் கல்விக் கூடங்களே இல்லை. அன்றைய காலகட்டம் வேறு, இன்றைய காலகட்டம் வேறு. அரசியல்வாதிகள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை தமிழ் வழிக் கல்விக் கூடங்களில்தான் சேர்ப்போம் என்று உறுதி மொழி எடுக்கட்டும். 
பூவை பி. தயாபரன், பெங்களூரு.

மனிதனின் அடையாளம்
மொழிப்போர் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஒரு மனிதனின் அடையாளமே மொழி. ஆனால் தமிழகம் மொழிப்போர்க்களம் காண ஏதுவாக சூழல் இல்லை என்றே தெரிகிறது. 
சி.ஸ்டீபன்ராஜ், பொம்மிடி

பகல் கனவு
மொழியை, மொழித் திணிப்பை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைத்தால் அது பகல் கனவுதான். மறைமுக மொழித் திணிப்பு இருப்பதாகத் தோன்றினாலும், அது மக்கள் பிரச்னையாக இல்லை என்பதுதான் இன்றைய நிலை.
பி.கே.ஜீவன், கும்பகோணம்.

முற்றிலும் சரியே
தமிழகத்தில் மொழிப்போருக்கான களம் மீண்டும் உருவாகியுள்ளது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது முற்றிலும் சரியே. ஒரு மனிதனின் அடையாளமே அவனது தாய்மொழிதான். தாய்மொழி மூலம் கல்வி கற்கும் நாடுகள் எல்லாம் வல்லரசுகளாக விளங்குகின்றன. பாரதம் போல் பன்முகம் கொண்ட, பல மொழிகள் பேசும் நாட்டில் எந்த மொழியையும் திணிக்கக் கூடாது.
சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

ஆட்சிக்கு வர...
மொழிப் போருக்கான களம் உருவாகியுள்ளது என்னும் ஸ்டாலினின் கருத்து முற்றிலும் தவறானது. ஒரு முறை இந்திக்கு எதிராக வெறியைத் தூண்டி, அரசியல் செய்து, ஆட்சிக்கு வந்த திமுக, எப்படியாவது ஆட்சிக்கு வர விரும்புகிறது. ஆயினும் ஒன்றுபட்ட நாட்டில் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நிலையில் பெரும்பாலான இளைஞர்கள் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் நாட்டமுள்ளனர் என்பதே இன்றைய எதார்த்த நிலை.
ஆர். விஸ்வநாதன், சென்னை.

எடுபடாது
திமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலுக்கு வர இந்த ஆயுதத்தைத் தற்போது எடுத்திருக்கிறார்கள். இப்போது அந்த வாதம் எடுபடாது. இவ்வாறு சொல்லிச் சொல்லியே, தமிழர்கள் தமிழ்நாட்டைவிட்டு வெளியே செல்லாதவாறு செய்துவிட்டார்கள்.
எல். சதானந்தம், கரூர்.

கண்டிப்பாக அமையாது
தமிழகத்தில் மொழிப்போருக்கான களம் கண்டிப்பாக அமையாது. இந்தித் திணிப்பு போராட்டம் நடத்தி, பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பலியிட்டு, தமிழகத்தை ஓர் இருண்ட காலத்துக்கு இட்டுச் சென்றதை இன்று ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கிறார்கள். மொழியின் பெயரால் மக்களை மடமையில் ஆழ்த்தியது, நீறுபூத்த நெருப்பாக மனதில் கனன்று கொண்டுள்ளது. மீண்டும் மொழி பெயரால் போராட்டங்களை நடத்துவது வீண் வேலையே!
கே. கோவிந்தராஜன், அல்லூர்.

முனை மழுங்கிவிட்டது
மாறி வரும் உலகச் சூழலுக்கு ஏற்ப, தமிழ்ச் சூழலும் மாறிவிட்டது. மொழியுணர்வு, பண்பாட்டுணர்வு, இன உணர்வு உள்ளிட்ட முத்அமை உணர்வுகள் அனைத்தும் முனை மழுங்கிப்போய்விட்டன. இன்றோ மொழியை வெறும் ஒரு கருவியாகத் தகவல் தொடர்பிற்கு மட்டும் என எண்ணும் புதிய தலைமுறை உருவாகிவிட்டது.
வெ. பாண்டுரங்கன், திருநின்றவூர்.

முற்றிலும் சரியே!
மொழிப்போருக்கான களம் உருவாகி வருகிறது என்ற கூற்று முற்றிலும் சரிதான். இந்தி பற்றி நேரு கொடுத்த உறுதிமொழி என்னாயிற்று? பெரும்பான்மையோர் பேசுகின்ற காரணம் காட்டி இந்தி திணிக்கப்படுகிறது. இதனால் தமிழ் வளர்ச்சி தடைபடும். எனவேதான் தமிழ் இனம், தமிழ் மொழியைக் காக்க, மொழிப் போருக்கான களம் மீண்டும் உருவாகியுள்ளது என்று ஸ்டாலின் கூறியிருப்பது முற்றிலும் சரியே.
உ. இராசாமணி, மானாமதுரை.

அபாயம் நீங்கிவிட்டது
இந்தி மொழி திணிக்கப்படும் அபாயம் முற்றிலும் நீங்கிவிட்டது. வட மாநிலங்களில் பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ள நமது இளைஞர்கள் பணித் தேவையின் காரணமாக தாமாகவே முன்வந்துதான் இந்தி கற்று வருகிறார்கள். எனவே ஸ்டாலின் பேச்சு அரசியல் ஆதாயத்தை உள்நோக்கமாகக் கொண்டதேயன்றி வேறல்ல.
எம். கோவிந்தராஜ், குடியேற்றம்.

மீண்டும் மொழிப்போர்...
தாய்மொழியைத் தெருவில் நிற்க வைத்து இந்தியை அரங்கேற்றி, இந்தி மொழி பேசாத மக்கள் மீது எல்லா வகையிலும் திணிப்பது மொழிப் போருக்கான களத்தை மீண்டும் உருவாக்கும் என்பதில் தவறில்லை.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

இனத்தின் அடையாளம்
ஓர் இனத்திற்கு அடையாளமாக இருந்து, அந்த இனத்தின் வரலாற்றைப் பாதுகாத்து, பாண்பாட்டைச் செம்மைப்படுத்துவது அந்த இனத்தின் மொழியே ஆகும். மொழி அழியும்போது அந்த இனமே அழிந்து போகும். தேசிய அளவில் குறிப்பிட்ட மொழிக்கு முக்கியத்துவம் தர முயற்சிக்கும் நிலையில், தாய்மொழியைக் காக்கும் பொருட்டு மொழிப்போருக்கான களம் உருவாகி உள்ளது. ஸ்டாலின் கூறியுள்ளது சரியே.
மா. பால்ராஜ், தேவதானப்பட்டி.

வேகம் இருக்காது
திராவிடத் தலைவர்களின் வசீகரமான பேச்சுக் கலையில் மயங்கி, தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள். இன்று 2018-இல் அரசியல்வாதிகள் பற்றியும், அவர்கள் குடும்பத்தினரின் மொழிப்பற்று பற்றியும் மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். முன்புபோல, தமிழ் மொழிப்போருக்கான வீரியம் - வேகம் இருக்காது. மக்கள் விவேகம் நிறைந்தவர்கள்.
இ. ராஜு நரசிம்மன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com