'ஜனநாயகத்துக்காக மத்திய அமைச்சர்கள் யாருக்கும் அஞ்சாமல் குரல் கொடுக்க வேண்டும் என்று மூத்த பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறிய கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களின் கருத்துகளில் சில...

'ஜனநாயகத்துக்காக மத்திய அமைச்சர்கள் யாருக்கும் அஞ்சாமல் குரல் கொடுக்க வேண்டும் என்று மூத்த பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறிய கருத்து சரியா?'

கலகத்தைத் தூண்டும்
ஜனநாயகத்துக்காக மத்திய அமைச்சர்கள் யாருக்கும் அஞ்சாமல் குரல் கொடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியிருப்பது ஜனநாயகத்துக்காக எழுப்பப்பட்ட குரலாகப் பார்க்க இயலாது. அவர் கூற்றுப்படி நடந்தால் கலகத்தை ஏற்படுத்தும். அரசு வேறு அமைச்சர்கள் - ஆளும் கட்சியினர் வேறு என்பதுபோல இருக்கிறது அவர் பேச்சு. ஜனநாயகத்தின் மூலம்தானே அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கும் சட்ட சபைகளுக்கும் அனுப்பப்பட்டார்கள்? அரசியல் சாசனப்படி செயல்படுவேன் என்று அவர்கள் உறுதி மொழியெடுத்துள்ளார்கள். எனவே கலகத்தைத் தூண்டவே யஷ்வந்த் சின்ஹா அந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
கே.வி.விஜயலட்சுமி, சென்னை.

பதவி சுகத்துக்காக...
யஷ்வந்த் சின்ஹா கூறிய கருத்து சரியானது. தனது பதவி சுகத்துக்காக ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளைப் பார்த்து மவுனம் சாதிக்கக் கூடாது. உயர் பதவியில் உள்ளவர்களிடம் விரோதம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற வகையில் சிலரின் செயல்பாடு உள்ளது. அது சரியல்ல. 
கே.சிங்காரம், வெண்ணந்தூர்.

ஜனநாயக மனநிலை
ஜனநாயகத்துக்காக யாருக்கும் அஞ்சாமல் குரல் கொடுக்க பெரிய தலைவர்கள் கூறினாலும், பதவியில் உள்ளவர்கள், அரசில் பொறுப்பில் உள்ளவர்கள் அவ்வாறு செய்தால் அவர்களைப் பதவியிலிருந்து நீக்க ஆளும் கட்சியின் தலைவர்கள் அஞ்ச மாட்டார்கள். சர்வாதிகாரம் இல்லாமல், ஜனநாயக மன நிலை இருந்தால், அரசில் பதவியில் உள்ளவர்கள் கூட தைரியமாகத் தவறைச் சுட்டிக் காட்டி ஜனநாயக மாண்பை வளர்க்கத் தவற மாட்டார்கள்.
டி.வி.கிருஷ்ணசாமி, நங்கநல்லூர்.

ஏன் பயம்?
யஷ்வந்த் சின்ஹாவின் கூற்று விநோதமாக உள்ளது. ஜனநாயகம் என்பது விதிகளின்படி செயல்படுத்தப்பட வேண்டியது. விதி மீறாமல் செயல்படும் நிலையில், மத்திய அமைச்சரென்ன, சாதாரண குடிமகன் கூட அஞ்சால் செயல்பட உரிமை இருக்கும்போது, ஏன் மத்திய அமைச்சர் பயப்பட வேண்டும்?
எஸ். முருகானந்தம், தாழக்குடி.

கட்டுப்பாடு
ஜனநாயகத்திற்காக மத்திய அமைச்சர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பது சரியே. அது மட்டுமல்ல, மெத்தப் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இந்திரா காந்தி ஆட்சியில் இருந்தபோது நெருக்கடி நிலையை அறிவித்தார். அதை எதிர்த்துக் குரல் கொடுத்த தலைவர்களை சிறையில் அடைத்தார்கள். கட்சிக் கட்டுப்பாட்டைக் கருதி மத்திய - மாநில அமைச்சர்கள் வாய் திறப்பதில்லை. எனினும், மூத்த பாஜக தலைவருக்கு வயதான காரணத்தால் ஆட்சியில் இடம் கொடுக்கப்படவில்லை. இதை மனதில் கொண்டு மேற்படிக் கருத்தை தெரிவித்துள்ளார்.
வீ.சீனிவாசன், சுவாமிமலை.

உள்நோக்கம் உடையது
யஷ்வந்த் சின்ஹா கூறிய கருத்து கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும். ஜனநாயகம் என்ற பெயரில் ஒரு அமைப்பின் குறை நிறைகளை பகிரங்கப்படுத்துவது கட்சிக் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும். மேலும், மத்திய அமைச்சர்கள் தங்களின் பிரச்னைகளை அமைச்சரவைக் கூட்டத்திலோ அல்லது கட்சியின் செயற்குழு, பொதுக்குழு, உயர்மட்டக் குழு கூட்டங்களில் விவாதித்து தீர்வு எட்டப்படுவதுதான் உண்மையான ஜனநாயகமாகும். எனவே, யஷ்வந்த் சின்ஹா கருத்து உள்நோக்கமுடையது. ஏற்புடையதல்ல.
உ. இராசமாணிக்கம், 
கடலூர்.

வழிமுறைகள் உள்ளன
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகிக்கும் அமைச்சர்கள் யாருக்கும் அஞ்சாமல் ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்காமல் வேறு எதற்காகக் குரல் கொடுக்கப் போகிறார்கள்? ஜனநாயக விரோதமாக அவர்கள் ஏதேனும் செய்தால் அதனைத் தட்டிக் கேட்க பல வழிமுறைகள் உள்ளன. கட்சிக்குள் பிரச்னை என்றாலும் அது பொது வெளிக்கு வந்துவிடும். சொந்தக் கோபத்தை இப்படி வெளிப்படுத்துகிறார் எனத் தோன்றுகிறது.
எல். லட்சாராம், சென்னை.

நிராகரிக்க வேண்டும்
மூத்த பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கட்சிக் கட்டுப்பாட்டினை மீறி அவ்வப்போது மத்திய அரசு, ஆளும் கட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டு வரும் சுயநலவாதி. ஜனநாயகத்துக்காக மத்திய அமைச்சர்கள் யாருக்கும் அஞ்சாமல் குரல் கொடுக்க வேண்டும் எனில் எவரை நோக்கி, எதனை எதிர்த்துக் குரல் எழுப்ப வேண்டும்? அவரின் கருத்து முற்றிலும் உள்நோக்கம் கொண்டது. அதனை நிராகரித்து ஒதுக்குவதே நேர்மையும் நல்ல பண்புமாகும்.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

விநோதம் இல்லை
பிரிட்டிஷ் அரசின் அடிமையாக இருந்த நாம் தியாக சீலர்களின் தியாகத்தால் சுதந்திரம் பெற்றோம். சுதந்திரத்தை வரம்புக்குள் ஒரு கட்டுக்கோப்புடன் செயல்படுத்தவே ஜனநாயக அமைப்பை உருவாக்கி எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற நியதியை வகுத்துள்ளோம். ஆகவே, மத்திய அமைச்சர்களானாலும் மாநில அமைச்சர்களானாலும், வரையறுக்கப்பட்ட விதி மீறாமல் குரல் கொடுக்கலாம். இதில் விநோதம் ஏதுமில்லை.
எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.

உரிமை உண்டு
ஜனநாயகத்துக்காக மத்திய அமைச்சர்கள் யாருக்கும் அஞ்சாமல் குரல் கொடுக்க வேண்டும் என்று மூத்த பாஜக தலைவர்க யஷ்வந்த் சின்ஹா கூறிய கருத்து சரியே. ஜனநாயகமே நமது நாட்டின் தூண். ஜனநாயக நாட்டில் மத்திய அமைச்சர்களாகட்டும், சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகட்டும் அனைவரும் மக்கள் பணி செய்ய அமர்த்தப்பட்ட பணியாளர்கள் அவ்வளவே. அமைச்சர்கள் என்றாலும் அஞ்சாமல் குரல் கொடுக்க வேண்டும்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

தனிப்பாதை
யஷ்வந்த் சின்ஹாவின் கருத்து சரியில்லை. தனது எண்ணத்தை, தான் சார்ந்த கட்சியின் மேல்நிலைக் கூட்டத்தில் தெரிவிக்கலாம். அதுதான் ஜனநாயக முறையைப் பின்பற்றுபவரின் செயல். பிரதமர் மோடியின் தலைமையில் இயங்கும் மத்திய அமைச்சர்களை அடிமை போலச் சித்திரிப்பது கட்சியின் மூத்த தலைவருக்கு அழகல்ல. 
என்.எஸ். குழந்தைவேலு, 
சங்ககிரி

'முன்னாள்' அமைச்சர்கள்!
மத்திய அமைச்சர்கள் அரசை எதிர்த்து துணிவாகத் தங்கள் கருத்தைச் சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் அவர்கள் முன்னாள் அமைச்சர்கள் ஆக வேண்டியதுதான்.
எஸ். மோகன், கோவில்பட்டி

பொறுப்புணர்வோடு...
மத்திய அமைச்சர்கள் அரசின் பிரதிநிதிகள். முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர்கள். இந்நிலையில், 'ஜனநாயகத்துக்காக' என்ற போர்வையில் நேரிடையாக அவர்கள் குரல் கொடுத்தால் தேவையற்ற பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்திவிடும். கண்ணியத்தோடும், பொது அமைதியைக் காக்க வேண்டிய பொறுப்புணர்வோடும் நடந்து கொள்ள வேண்டியது மத்திய அமைச்சர்களின் கடமையாகும்.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com