அரசுப் பள்ளிகளில் பயோ - மெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்யப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஏற்புடையதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

அரசுப் பள்ளிகளில் பயோ - மெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்யப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஏற்புடையதா?' 

இது தொடக்கம்தான்
நிச்சயமாக ஏற்புடையதுதான். ஆசிரியர்கள் சரியான நேரத்திற்குப் பள்ளிக்கு வந்தால்தான் மாணவர்களும் ஒழுங்காக வருவார்கள். பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு என்பது ஒரு தொடக்கம்தான்.மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (சென்ஸஸ்) போன்ற ஆசிரியர்களுக்குத் தொடர்பில்லாத வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நேரம் தவறாமே, கட்டுப்பாடு போன்றவற்றை முதலில் ஆசிரியர்களிடம் கொண்டு வருவோம். பின்பு மாணவர்களிடம் அவை தானே தொடரும். 
சொ.முத்துசாமி, பாளையங்கோட்டை.

தவறுகள் தவிர்க்கப்படும்
இன்று அரசுப் பள்ளிகளின் தரம் சற்று உயர்ந்துள்ளது. இம்முறையைக் கடைப்பிடித்தால் இன்னும் தரம் உயர வாய்ப்பு உள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ இம்முறை வழிவகுக்கும். காலம் பொன் போன்றது. இதை உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். பயோ-மெட்ரிக் முறை அறிமுமாவதன் மூலம் பல்வேறு விதமான தவறுகள் தவிர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆசிரியர்கள், தாமதமின்றி பள்ளிக்கு வர வேண்டும் என்பதை உறுதி செய்யவே இம்முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை வரவேற்போம்.
க.கிருஷ்ணமூர்த்தி, பழனி.

என்ன அளவுகோல்?
இந்த அறிவிப்பு ஏற்புடையதல்ல. ஆசிரியர்கள் ஒழுக்கம், நேர்மை, நேரம் தவறாமையை போன்றவற்றைப் போதிப்பதில் மாணவர்களுக்கு உதாரணமாக இருப்பவர்கள். அவர்கள் மீது சந்தேகம் ஏற்படுவது போன்று இப்படி ஒரு முறையை நடைமுறைப்படுத்துவது முறையல்ல. ஆசிரியர்கள் பலர், பள்ளி முடிந்தும் மாலை நேரங்களில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள். ஒரு ஆசிரியர், பயோ-மெட்ரிக்கில் தன் வருகையைப் பதிவு செய்துவிட்டு, வெளியில் போனால் கண்டுபிடிக்க என்ன அளவுகோல் இருக்கிறது? ஆசிரியர்கள் நேர்மையாக இருந்தால், இந்த நடவடிக்கை தேவையில்லை.
ஏ.ஆர்.கீர்த்தனா, சென்னை.

ஏற்புடையதே
இன்று மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் பயோ-மெட்ரிக் முறையில் வருகைப்பதிவு செய்கின்றனர். இந்த முறையில் ஆள் மாறாட்டம் செய்ய இயலாது. இந்த முறை கடந்த ஓராண்டுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதே முறை அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற முடிவு ஏற்புடையதே.
கோ.ராஜேஷ் கோபால், அரவங்காடு.

முன்னேற்றம் வரும்
தமிழக அரசின் அறிவிப்பு சரியானதே! அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு குறைந்திருக்கிறது. இதற்கு ஆசிரியர்களின் கவனக்குறைவே காரணம். ஆசிரியர்களின் வருகை நேரம் உறுதி செய்யப்படும் நிலையில், மாணவர் வருகை, தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் காணலாம். இன்று தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்தான் கல்வித்தரம் குறைந்து காணப்படுகிறது. எனவே ஆசிரியர்களின் வருகைப்பதிவை பயோ-மெட்ரிக் முறையில் கொண்டு வந்தால் அதை வரவேற்கலாம்.
அ.கருப்பையா, பொன்னமராவதி.

சந்தேகம் கூடாது
ஆசிரியர்கள் தெய்வத்திற்கு நிகரானவர்கள். அவர்கள் பெரிதும் மதிக்கப்பட வேண்டியவர்களே அன்றி, சந்தேகப்படுவதற்குரியவர்கள் அல்லர். எனவே, அரசுப் பள்ளிகளில் பயோ-மெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படும் என்ற அறிவிப்பு ஏற்புடையது அன்று! ஆசிரியர்களின் வருகையைக் கண்காணிப்பது பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கடமையே ஆகும்.
என்.பி.எஸ்.மணியன், மணவாள நகர்.

முக்கிய காரணம்
இன்று கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து அவை மூடப்படும் நிலை ஏற்பட்டதற்கு ஒரு முக்கிய காரணம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்கு வராமையே. சிலர், பள்ளிக்கு வராமலே வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடும் நிலையும் காணப்படுகிறது. ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளில் இது சர்வ சாதாரணமாக உள்ளது. பயோ-மெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யப்பட்டால் இந்தக் குறைகள் நிச்சயம் களையப்படும். போசிய மாணவர்கள் இல்லாமல் பள்ளிகளை மூட வேண்டிய அவசியமும் ஏற்படாது.
கே.கோவிந்தராஜன், திருச்சி.

வழிகாட்டி
கல்வியைக் கற்றுக்கொடுப்பதோடு மட்டுமல்ல, மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தைப் போதிக்கும் இடங்களாகவும் கல்விக்கூடங்கள் திகழ்கின்றன. அத்தகைய பணியை மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டுமென்றால், ஆசிரியர்கள் காலதாமதமின்றி பள்ளிக்கு வர வேண்டும். தமிழக அரசின் அறிவிப்பு சரி
யானதே.
கே.வேலுச்சாமி, தாராபுரம்.

கல்வித்தரம் மேம்படும்
தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஒரு சில ஆசிரியர்கள், குறிப்பாக கிராமப்புற ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை என்பதற்காக, ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயமே இகழப்படுகிறது. பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை அமலானால் அனைத்து ஆசிரியர்களும் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வருவது கட்டாயமாகிவிடும். அதன் காரணமாக மாணவர்களின் கல்வித்தரமும் மேம்படும். மாணவர்கள் நேரத்தின் அருமையை உணரவும் வழியேற்படும்.
பொன்.கருணாநிதி, கோட்டூர்.

மாற்றம் தேவை
அரசுப் பள்ளிகளில் பயோ-மெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கதே. அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவிட்ட நிலையில் இந்த மாற்றம் அவசியமானதே. இதன் மூலம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நேரம் கண்காணிக்கப்படும். வராமலேயே வந்தது போல் காட்டிக்கொண்டிருந்த வருகைப்பதிவுகள் நீக்கப்படும். மாறி வரும் உலகில் மாற்றங்கள் தேவையே.
எம்.எஸ்.இப்ராஹிம், சென்னை.

தேவையற்ற செயல்
இந்தப் புதிய முறையால் எந்தவிதப் பயனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆசிரியர்கள் பயோ-மெட்ரிக் முறையில் தங்கள் வருகையைப் பதிவு செய்துவிட்டு பிறகு தங்கள் சொந்த வேலைகளுக்காக வெளியே சென்றால் அதனை யார் கண்காணிப்பார்கள்? அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா? தேர்தல் நேரங்களிலோ, பணி தொடர்பாக கல்வித்துறை அலுவலகம் செல்ல வேண்டியிருந்தாலோ என்ன செய்வது? எனவே, இது தேவையற்ற செயல்.
எம்.சம்பத்குமார், ஈரோடு.

ரோபோக்கள் அல்லர்
பள்ளிக் கல்வித்துறையில் பொதுவாக தாமத வருகை என்பது மிகமிகக் குறைவாகவே இருக்கும். இந்தப் பெருமைக்கு காரணமானவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். மாணவர்களின் நலன் கருதியும், சமூக நலன் கருதியும் ஆசிரியர்கள் இந்த அக்னி பரீட்சைக்குத் தங்களை உள்ளாக்கிக் கொள்வது நல்லது. அதே சமயம் ஆசிரியர்கள் ரோபோக்கள் அல்லர் என்பதையும் அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
செ.கணேசன், பரமத்திவேலூர்.

பராமரிப்பு இல்லை
அரசின் அறிவிப்பு ஏற்புடையதே. தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டைக் கண்டிப்புடன் பராமரிக்கும் அளவுக்கு அரசுப் பள்ளிகளில் கண்டிப்புடன் பராமரிக்காததால்தான் அரசு இம்முடிவுக்கு வந்துள்ளது. இதனால் உரிய காலத்தில் வகுப்புகள் தொடங்கவும், கற்பித்தல்-கற்றல் ஆகியவற்றின் தரம் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
உ.இராசமாணிக்கம், கடலூர்.

ஊழலுக்கே வழி வகுக்கும்
ஆசிரியர்களின் தாமத வருகை அரசுப் பள்ளிகளில் மட்டும்தான். சரியான நேரத்திற்கு ஆசிரியர்கள் வருகை புரிவது தனியார் பள்ளிகளில்தான். கண்காணிப்பும் ஒழுங்கு நடவடிக்கைகளும்தான் தனியார் பள்ளி ஆசிரியர்களைக் குறித்த நேரத்தில் பணிக்கு வரவழைக்கிறது. அரசுப் பள்ளிகளில் இவையிரண்டும் பெயரளவில்தான் இருக்கின்றன. புதிய பயோ-மெட்ரிக் முறை ஊழலுக்கே வழி வகுக்கும்.
பி.கே.ஜீவன், கும்பகோணம்.

ஏமாற்று வேலை
இந்த பயோ-மெட்ரிக் முறை, கிராமப்புறத் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அவ்வளவாகப் பலன் தராது. சில ஆசிரியர்கள்பயோ-மெட்ரிக் முறையில் வருகையைப் பதிவு செய்துவிட்டு, பின்பு வெளியே சென்று தங்கள் சொந்த வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் பள்ளிக்கு வரக்கூடும். இதனால் பற்பல ஏமாற்று வேலைகளும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஆசிரியர்களின் தனிப்பட்ட தொழில் பக்தியும், மனசாட்சியுமே சரியான கற்றல், கற்பித்தலை ஏற்படும் என்பது நிஜம். ஆனாலும் இது நல்ல தொடக்கம்தான்.
மகிழ்தன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com