'நாடாளுமன்ற அமளியால் அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியிருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'நாடாளுமன்ற அமளியால் அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியிருப்பது சரியா?

கடமையைச் செய்யாமல்...
நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறுவதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் இதர வசதிகளுக்காக மக்கள் வரிப் பணம் லட்சக்கணக்கில் செலவிடப்படுகிறது. மக்கள் மற்றும் நாட்டு நன்மைக்காக விவாதம் செய்ய வேண்டிய இடத்தில் ரகளை செய்து நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்கப்படுகிறது. நமது விலை மதிப்பற்ற வாக்கைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினற்களாக ஆனவர்கள் தங்களது கடமையைச் செய்யாமல் எதிர்வினையாற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியது முற்றிலும்
சரியானதே!
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

ஜீரணிக்க மாட்டார்கள்
மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையை உணர்ந்து, அவரவர் தொகுதி மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க, வாதிட்டுப் போராடி, அவரவர் உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய இடம்தான் நாடாளுமன்றம். மக்களால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் இன்னும் எத்தனை காலத்திற்குதான் இப்படிக் கூச்சலிட்டு அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்கக் காரணமாக இருப்பார்களோ? இப்படிப்பட்டவர்களை மக்கள் எவ்வளவு காலம்தான் ஜீரணிப்பார்கள்?
ஆர்.எஸ். கண்ணன், வில்லியனூர்.

ஏற்றுக் கொள்ளலாம்
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அவை அமளி என்பது தவிர்க்க முடியாதது. சரியான காரணம் இருந்தால் அமளி ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் இன்று அமளி என்பது அற்பக் காரணங்களுக்காக நடைபெறுகிறது. தேச நலனை முன்வைத்து ஆளும் கட்சியை எதிர்த்து அமளி செய்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆளும் கட்சி தவறு செய்தால் அதை தட்டிக் கேட்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எதிர்க்கட்சிகளுக்கு நிச்சயம் உண்டு.
த. யாபேத்தாசன், பேய்க்குளம்

உண்மையே!
குடியரசு துணைத் தலைவர் கூற்று உண்மையே. நாடாளுமன்றம் ஆக்கபூர்வமாக செயல்படாமல் அமளியில் வீணாவது மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி நம்பிக்கை இழக்கச் செய்யும். மக்களின் முகம் சுளிக்கச் செய்யும் நாடாளுமன்ற அமளிகளுக்கு வாய்ப்பில்லாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு, ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் உண்டு. 
வி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, வரட்டணப்பள்ளி

பொறுப்பினை உணர்ந்து...
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று நம்பிக்கையின்மை ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் தனது உரிமைக்காக குரல் எழுப்ப வேண்டியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை முடக்குவது ஆரோக்கியமானதல்ல. குடியரசுத் துணைத் தலைவர் கூறிய கருத்து முற்றிலும் உண்மையே. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமையையும் பொறுப்பினையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி

நேரு காலத்திலும்...
ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்திலிருந்து நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டுத்தான் வருகிறது. ஆனால் அவர் காலத்தில் காரணம் இருக்கும். இப்பொழுது எதற்கெடுத்தாலும் அமளி செயற்கையாக உண்டாக்கப்படுகிறது. வாக்குக்கும் வாக்கு உரிமைக்கும் வித்தியாசம் தெரியாத மக்கள் எழுபது சதவீதம் பேர் உள்ளார்கள். எனவே நாடாளுமன்ற அமளியால் அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்ற கூற்று மனபிரமைதான்.
உ. இராசாமணி, மானாமதுரை

கவலைப்பட மாட்டார்கள்
நாடாளுமன்றத்தில் என்ன நடக்கின்றது என்பது ஏழை, எளிய, படிக்காத பாமரனுக்குத் தெரியாது. அது பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். மேலும், தற்போது ஆளும் கட்சியாக இருப்பவர்கள், எதிர்க்கட்சியாக இருந்தபொழுது அமளியில் ஈடுபட்டவர்கள்தான். எனவே, நாடாளுமன்ற அமளியால் அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்பது ஆளும் கட்சியிலிருந்து வழக்கமாகக் கூறப்படும் குற்றச்சாட்டு என்பதுதான் உண்மை.
கே. வேலுச்சாமி, தாராபுரம்.

வாஜ்பாய் காலத்தில் தொடங்கியது
தற்போதைய காங்கிரஸ் கட்சியின் கடும் காட்டமான அமளி முறைகள் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தொடங்கியது. வாஜ்பாயின் முதல் பிரதமர் பதவிக் காலத்தில் இருந்து பெரும் எதிர்ப்பு, இரண்டாம் பதவிக் காலத்திலும் தொடர்ந்தது. அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீது கற்பனையான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, நாடாளுமன்றத்தில் அவரைப் பேச விடாமல் அமளியில் ஈடுபட்டது அக்கட்சி. ஜார்ஜ் பெர்னாண்டஸை அமைச்சராக அங்கீகரிக்க முடியாது என்றது.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்திலிருந்து அவர் காங்கிரஸின் பரம விரோதியாக இருந்தது மட்டுமல்லாமல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். இதுபோன்ற அரசியல் காரணங்களுக்காக மட்டும் பெர்னாண்டஸ் பகிஷ்கரிப்பும் அடாவடி அமளியும் வாஜ்பாய் பிரதமர் காலத்தில் நடந்தது. அதனை மன்மோகன் சிங் காலத்தில் பாஜக திருப்பி அளித்தது. நாட்டில் பெரும் ஊழல்கள் மலிந்ததும் அப்போதுதான்.
தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாத காங்கிரஸ் தனது இருப்பை உறுதி செய்து கொள்ள, நியாயமான காரணமின்றி அடாவடி அமளியில் ஈடுபடுகிறது. காங்கிரஸ் மீதுதான் மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்பது பல்வேறு தேர்தல்களில் உண்மையாகி வருகிறது.
கே.வி. விஜயலக்ஷ்மி, சென்னை

கருத்து சரியல்ல
எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவதும், அவர்களே ஆளும் கட்சி வரிசையில் வந்து அமர்வதும் வழிவழியாக வரும் நடைமுறைதான். குடியரசு துணைத் தலைவர் கருத்து சரியானதல்ல.
பெ. நடேசன், எருமப்பட்டி

மக்களுக்கு துரோகம்
ஆண்டுக்கு ஆண்டு இரு அவைகளும் செயல்படும் நாட்கள் கணிசமாக குறைந்துள்ளது. அந்தக் குறைவான நாட்களும் அமளியால் ஒத்திவைக்கப்பட்டு வீணடிக்கப்படுவது மக்களுக்குச் செய்யும்
துரோகமாகும்.
பி.கே. ஜீவன், கும்பகோணம்

மக்களின் மனக் குமுறல்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்படாமல் அமளியில் ஈடுபடுவதால் தங்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார்களே என மக்கள் மனக்குமுறலில் உள்ளார்கள். அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்னும் கருத்து சரியே.
கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு

கடமை தவறுகிறார்கள்
நாடாளுமன்றத்தில் அமளி உண்டாக்கி அவையை முடக்குவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையிலிருந்து தவறுகிறார்கள். அமளியைக் கைவிட்டு, தங்கள் கடமையைச் செவ்வனே நிறைவேற்றினால்தான் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி

நம்பிக்கை இழக்க மாட்டார்கள்
நாடாளுமன்றத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்க வாய்ப்பில்லை. இது அனுபவபூர்வமானது. மக்களுக்கு எதையும் நினைவு வைத்துக் கொண்டு அரசியல்வாதிகளைப் பார்ப்பதில்லை. மாறாக, தேர்தல் சமயத்தில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பெருவாரியான மக்கள் முடிவு எடுப்பதால் அந்தக் கட்சி ஆட்சியில் அமர்கிறது.
ரகுராம், சென்னை

மக்களாட்சித் தத்துவம்
நாடாளுமன்றம் என்பது மக்களாட்சித் தத்துவத்துக்கு கண்ணியமான எடுத்துக்காட்டாகும். உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை அமைதியான முறையில் வெளிப்படுத்துவது, நாகரிகமான முறையில் நடந்து கொள்வது கடமையாகும். 
கே. கோவிந்தராஜன், அல்லூர்

ஏனோ தானோ மனப்பான்மை
வெங்கய்ய நாயுடு கூறியது சரியே. விவாதங்கள், வாக்கெடுப்பு மூலம் மக்களுக்கு ஆற்ற வேண்டிய திட்டப் பணிகள் இருக்கும்போது, உறுப்பினர்கள் ஏனோ தானோ மனப்பான்மையுடன் செயல்பட்டால் மக்கள் நிச்சயம் நம்பிக்கை இழப்பார்கள்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்

சேவை ஆகாது
நாடாளுமன்றம் மக்கள் நலனைப் பாதுகாக்கவே அமையப் பெற்றது. எனவே, அங்கு விவாதம் செய்யலாமே தவிர, அமளி கூடாது. அமளியால் மன்றத்தையே முடக்கி, செயல்படாமல் செய்வது தேர்ந்தெடுத்த
மக்களுக்குச் செய்யும் சேவை ஆகாது.
வி.எஸ். கணசேன், அயனாவரம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com