'தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு முறையைக் கைவிடுத்து, மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு முறையைக் கைவிடுத்து, மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து சரியா?

குறைபாடற்றது!
ஒவ்வொரு முறையும் தேர்தலில் தோல்வி அடையும் கட்சிகள் எல்லாம் மின்னணு வாக்குப் பதிவு இந்திரம் தேவையற்றது, முறைகேடுகள் செய்ய வாய்ப்பிருக்கிறது என்று குறை கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறைபாடற்றது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. உலகமே கணினிமயமாகி வேலைகள் சுலபமாக செய்து கொண்டு வரும்போது நாம் மட்டும் ஏன் பழைய முறைக்கே மாற வேண்டும்? வாக்குச் சீட்டு முறைக்கு மாறினால், வேட்பாளர் பட்டியல் அச்சடிப்பதில் தொடங்கி, வாக்குப் பெட்டியைப் பாதுகாப்பது மற்றும் எண்ணி முடிப்பது வரை மிகுந்த செலவும் கால தாமதமும் ஆகும். பழைய வாக்குச் சீட்டு முறைக்கு மாறுவது தேவையற்றது. மேலும், முறைகேடுகள், செல்லாத வாக்குகள் பிரச்னையும் மீண்டும் வரும்.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி

இயந்திரம் சரியே!
கருத்து ஏற்புடையதல்ல. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து காட்டுங்கள் என்று கடந்த ஆண்டு தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் வேண்டியது. இந்த முறையான வாக்குப் பதிவு சரியானதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வந்தால், ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்குச் சீட்டு தயாரிக்க செலவு ஏற்படும். 
அ. அமீர்பாட்சா, அறந்தாங்கி

வன்முறை இல்லை
மின்னணு முறையில் காகிதப் பயன்பாடு குறையும். வாக்குச் சீட்டு முறையில் வன்முறை, குளறுபடிகள் அரங்கேறும், முடிவுகள் தெரிய பல நாட்களாகும். தோற்றுப் போகும் கட்சிக்காரர்கள் வாக்குச் சீட்டு முறையைக் கேட்கிறார்கள். வென்றவர்கள் அமைதி காக்கிறார்கள்.
இ. ராஜு நரசிம்மன், சென்னை

மன நிறைவு!
தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு முறையை மாற்றி, மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதுதான். வாக்குச் சீட்டு முறையில் தங்களது விருப்பமான வேட்பாளருக்குரிய சின்னத்தில் குறியிடுவது என்பது நூறு சதவீதம் வாக்காளர்களுக்கு மன நிறைவைத் தரும் தன்மையில் அமைந்துள்ளது. ஒரு பொத்தானை அழுத்துவதில் மக்களுக்கு மனநிறைவு இல்லை என்பது உண்மையே. அரசியல் கட்சிகளின் எண்ணத்தைவிட மக்களின் உணர்வுகளை அறிந்து மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வருவதில் எவ்வித தவறுமில்லை.
க. கிருஷ்ணமூர்த்தி, பழனி

மாறுதல் வராது
பூட்டு உருவாகும்போதே ஒரு திருடன் உருவாகிறான் என்பார்கள். அதேபோல, எத்தனை புதிய முறைகளைக் கொண்டு வந்தாலும் கள்ள வோட்டை தவிர்க்க இயலாது. அரசும் காகிதப் பயன்பாட்டைக் குறைத்து, கணினிகளை அதிகம் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், மின்னணு முறையைக் கைவிடுத்து பழைய வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வருவதால் எந்த மாறுதலும் வரப் போவதில்லை.
கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு

தேவையற்ற குழப்பம்!
மீண்டும் வாக்குச் சீட்டு முறை வந்தால், தேவையற்ற குழப்பங்களும், கால விரயமும் ஏற்படும். அதோடு, மக்கள் வரிப் பணத்திலிருந்து வாங்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் வீணாகிப் போகும்! வாக்குச் சீட்டு முறை கொண்டு வரப்பட்டால் பல்லாயிரம் கோடி கூடுதல் செலவாகும். தேர்தலில் தோற்றவர்கள் சொல்வதற்காக, மீண்டும் வாக்குச் சீட்டு முறை ஏற்புடையதல்ல!
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி

எதிர்ப்போரின் மெளனம்
மீண்டும் வாக்குச் சீட்டுக்கு செல்வது ஏற்கக் கூடியதல்ல. வாக்குச் சீட்டு முறைக்குத் திரும்பினால், காகிதத்துக்காக மரங்கள் வெட்டப்படும். மிகுந்த தாமதம் ஏற்படும். மிகுந்த நபர்கள் தேர்தல் நடைமுறையில் ஈடுபட வேண்டும். பொருட்செலவும் ஏற்படும். வாக்குச் சீட்டு முறையில் வேறு சில நாடுகளில் வாக்களிப்பவர்கள் சில கோடிகளே. இந்தியாவில் பல கோடி பேர் வாக்களிக்கின்றனர். இந்த விவகாரத்தில் பிற நாடுகளுடன் நம்மை ஒப்பிட முடியாது. மின்னணு வாக்குப் பதிவு முறையில் வெற்றி பெற்றால் அரசியல் கட்சிகள் விமர்சிப்பது இல்லை. தோல்வி அடைந்தால் மட்டுமே விமர்சிக்கிறார்கள். இந்த இயந்திரத்தின் நம்பகத்தன்மைக்காக தேர்தல் ஆணையம் பல முறை வாய்ப்பளித்தும், இம்முறையை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் கலந்து கொள்ளாமல் மெளனமாகவே இருந்தன.
டி.ஆர். ராசேந்திரன், திருநாகேஸ்வரம்

வாய் இருந்தால் அழும்!
உலக நாடுகள் பலவற்றிலும் தேர்தல் என்றாலே வாக்குச் சீட்டுதான். சின்னத்தில் முத்திரை குத்தி, வாக்குச் சீட்டை மடித்து வாக்குப் பெட்டியில் போடும்போது ஏற்படும் திருப்தி, வாக்குப் பதிவு இயந்திரத்தின் பட்டனை அழுத்துவதில் இல்லை. அதற்காக கற்காலத்திலேயே இருக்க முடியுமா...? தோற்றுப் போன கட்சிகள், பழியை மின்னணு வாக்கு இயந்திரத்தின் மேல் போட்டுவிடுவது வழக்கமான ஒன்று. வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு வாய் இருந்தால் அழுதுவிடும்.
எஸ். மோகன், கோவில்பட்டி

அவலங்கள் அரங்கேறும்
மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடி சாத்தியமில்லை. மேலும் எந்த சின்னத்துக்கு வாக்களிக்கிறோம் என்பதற்கான ஒப்புகைச் சீட்டு முறையும் சாத்தியமே. இதையும் மீறி குற்றஞ்சாட்டுவது ஏற்புடையதன்று. சீட்டுக்காக எத்தனையோ மரங்கள் வெட்டப்படும்; அதிகமான தேர்தல் பணியாளர்கள் தேவை; வாக்குப் பெட்டி கடத்தல் போன்ற கடந்த கால அவலங்கள் மீண்டும் அரங்கேறும். மின்னணு இயந்திரம் நிச்சயம் தவறு செய்யாது.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

நிரூபிக்க முடியவில்லை
இன்றைய சூழ்நிலைக்கு வாக்குச் சீட்டு முறை தேவையில்லை. ஏனெனில், தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து மின்னணு இயந்திரத்தில் முறைகேடு இருந்தால் நிரூபிக்கச் சொன்ன பிறகும், எவராலும் நிரூபிக்க முடியவில்லை. வாக்குச் சீட்டு முறை தேவையில்லாத ஒன்று.
கா. சீனிவாசன், மாடரஅள்ளி

என்ன உத்தரவாதம்?
மின்னணு வாக்கு இயந்திரத்தில் சந்தேகம் இருக்கும்பட்சத்தில் முறைகேடுகள் நடக்காமல் இருப்பதற்கு வழிவகை செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டுமேயொழிய, அதை முற்றிலும் தவிர்க்கக் கூடாது. வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடந்தாலும் முறைகேடுகள் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வாக்குச் சீட்டு முறையில் காலம், செலவு அதிகரிக்கும்.
ப. சுவாமிநாதன், சென்னை

கருத்து சரியல்ல!
வாக்குச்சீட்டுகளை எண்ணுவதற்கு கால விரயமாகும். நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் மீண்டும் பழைய முறைக்குத் திரும்புவது சரியல்ல. மின்னணு வாக்குப் பதிவில் தவறு இருந்தால் அதை சரி செய்ய வேண்டுமேயொழிய, மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து சரி அல்ல.
வி. காசி பெருமாள், வெண்ணந்தூர்

கற்காலத்தை நோக்கி...
நாளும் வளர்ந்து வரும் நவீன விஞ்ஞான உலகில் மீண்டும் தேர்தல் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர நினைப்பது கற்காலத்தை நோக்கிப் பயணிப்பது போலாகும். ஆனால் அதே சமயத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஐயமிருப்பின், அதைப் போக்கி நம்பகத்தன்மை உருவாக்க வேண்டும்.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை

நேர விரயம்!
வெற்றி பெற்றவர்கள் மின்னணு இயந்திரத்தை உயர்வாகவும், தோல்வி அடைந்தவர்கள் எதிராகவும் பேசுவார்கள். இது இயல்பு. மனசாட்சிப்படி வாக்களித்த மக்களுக்குத் தெரியும் வாக்களிப்பின் உண்மை நிலவரம். பண விரயம், நேர விரயத்தை விவரமறிந்த வாக்காளர்கள் விரும்ப மாட்டார்கள். வாக்குச் சீட்டு தேர்தலையும் விரும்ப மாட்டார்கள்.
வி. சரவணன், சிவகங்கை

பகிரங்க சவால் விடுத்தும்...
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை நிரூபணம் செய்யுமாறு தேர்தல் ஆணையம் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டும், முறைகேடு செய்ய முடியும் என்பதை எந்த அரசியல் கட்சியும் நிரூபிக்க முடியவில்லை. வாக்குச் சீட்டு முறையில் காகிதம் வீண், செல்லாத வாக்கு விவாதம், இரவு பகலாக வாக்குச் சீட்டு எண்ணிக்கையால் கால விரயம், மறு வாக்கு எண்ணிக்கை அரசியல் அடாவடியால் மேலும் கால விரயம். இவைதான் மிஞ்சும்.
பி. துரை, காட்பாடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com