28.03.1868: உலகப் புகழ் பெற்ற 'தாய்' நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி பிறந்த தினம் இன்று!

மாக்சிம் கார்க்கி என்று அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் ரஷ்ய நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 
28.03.1868: உலகப் புகழ் பெற்ற 'தாய்' நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி பிறந்த தினம் இன்று!

மாக்சிம் கார்க்கி என்று அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் ரஷ்ய நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.  இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் 'தாய்' என்ற புதினத்தை எழுதினார்.

மாக்சிம் கார்க்கி ரஷ்யாவில் உள்ள நிஸ்னி நவ்கரோட் என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் 28.03.1868-இல் பிறந்தார். இயற்பெயர் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ். இவரது 5 வயதில் தந்தை இறந்தார். தாயின் ஆதரவும் இல்லாத இவரை இவரின் பாட்டிதான் வளர்த்தார்.

வறுமை காரணமாக பள்ளிப் படிப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை. 8 வயதிலேயே வேலைக்குச் சென்றார். வேலை செய்துகொண்டே தானாகவே முயன்று கல்வி கற்றார். உருசிய, பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், செருமனி ஆகிய மொழிகளைக் கற்றார்.

எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார்.

1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த ‘தாய்’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இவர் 18.06.1936 அன்று மரணம் அடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com