சுமைகளும் சுகங்களும் !    கவிஞர் இரா .இரவி !

பத்து மாதம் குழந்தையைச் சுமக்கிறாள் அன்னை 
பத்தியமாக உணவருந்தி காக்கிறாள் சேயை !

சுமையை அவள் சுகமாகவே கருதுகின்றாள் 
சுகப்பிரசவம் வேண்டுமென்று நாளும் நடக்கிறாள் !

தவவாழ்க்கை வாழ்கிறாள் என்றால் மிகையன்று 
தவம் இருந்தே குழந்தையை  ஈன்று எடுக்கிறாள் !

ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்கின்றாள்
ஒவ்வொரு நொடியும் குழந்தையைக் காக்கின்றாள் ! 

கருவுற்ற தகவல் அறிந்ததும் மனம் மகிழ்கின்றாள்
கருவுற்ற நாள் முதலாய் கனவுகள் காண்கின்றாள் !

வயிற்றுக்குள் குழந்தை எட்டி உதைத்தபோதும் 
வலியினைத் தாங்கி வாய் விட்டு சிரிக்கின்றாள் !

தாய்மொழியின்  அருமை பெருமையை அவள் 
தன்சேயுக்குக்  கருவிலேயே  கற்பித்து மகிழ்கின்றாள் !

தாயோடு சேர்ந்து சேயும் ரசிக்கும் இசை
தாயின் கருவிலிருந்தே கேட்கும்   ஓசை !

பிரசவ வலி என்பது சொல்லில் அடங்காது 
பிறப்பு மறுபிறப்பு எடுத்தே வருகின்றாள் !

தாய்மை அடைந்தமைக்காக மகிழ்ந்தபோதிலும் 
தாயாகும் தருணம் உயிர் போய் உயிர் வரும் !

ஆண்கள் யாரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை
அன்புத் தாய்மார்கள் மட்டுமே உணர்ந்த உயிர்வலி ! 

முந்நூறு நாட்கள் அன்னை அவள் படும் பாடு 
மண்ணில் மறக்கமுடியாத துன்பம் பெரும் பாடு !

சுமையையும் சுகமாகக் கருதுபவள் அன்னை 
சுகத்தையும் சுமையாகக் கருதுவது குழந்தை !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com