நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்

நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும் - உ.வே.சாமிநாதையர்; பக்.178; ரூ.90; அடையாளம், புத்தாநத்தம்; )04332 - 273444.
நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்

நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும் - உ.வே.சாமிநாதையர்; பக்.178; ரூ.90; அடையாளம், புத்தாநத்தம்; )04332 - 273444.
தமிழுக்குத் தொண்டு செய்வதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்த உ.வே.சாமிநாதைய்யர் 1930 களில் பல்வேறு இதழ்களில் எழுதிய 12 சிறு சிறு கட்டுரைகளைச் சேர்த்து "நான் கண்டதும் கேட்டதும்' என்ற பெயரிலும், அதே காலகட்டத்தில் எழுதிய 20 கட்டுரைகளை (இவற்றில் ஐந்து கட்டுரைகள் உ.வே.சா. எழுதிய மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரத்தில் உள்ளன) சேர்த்து "புதியதும் பழையதும்' என்ற பெயரிலும் 1936 ஆம் ஆண்டில் தனித்தனி நூலாக வெளியிட்டார். பின்னர் இரண்டையும் ஒரே பதிப்பாக உ.வே.சா. நூல் நிலையம் வெளியிட, அப்பதிப்பை அடிப்படையாகக் கொண்டு தற்போது இத்தொகுப்பு வெளிவந்துள்ளது.
உ.வே.சா. தமிழ்ச் சுவடிகளைத் தேடி ஊர் ஊராக அலைய நேர்ந்ததனால் அதிக பயண அனுபவம் கிட்டியிருக்கிறது. பல ஊர்களில் அவர் சந்தித்த மனிதர்கள் கூறிய செய்திகளையும், அவரது ஆசிரியர்களான மீனாட்சிசுந்தரம்பிள்ளை, தியாகராஜ செட்டியார் போன்றோர் கூறிய தகவல்களையும் சுவையான கட்டுரைகளாக ஆக்கியிருக்கிறார். ஒவ்வொரு சம்பவத்துடனும் தொடர்புடைய காலம், சூழல், ஊர்கள், மனிதர்கள் போன்றவற்றைத் துல்லியமாகக் குறித்திருக்கிறார். எல்லா நிகழ்வுகளுமே சுவையானவைதான். குறிப்பாக போடிநாயக்கனூர் ஜமீந்தாரை நாடி வந்த புலவர் தன்னை வறுமைப்புலி துரத்துவதாகக் கூற, ஜமீன்தார் தனது துப்பாக்கியால் புலியைச் சுட்டு அவர் வறுமையைப் போக்கியது, மிதிலைப்பட்டிக் கவிராயர் தனது முன்னோர்களுக்குப் பொருளுதவி செய்த வெங்கணப்ப நாயக்கரின் பெருமைகளை ஒரு வண்டிக்காரனிடம் கூற, அந்த வண்டிக்காரன், தான் அந்த வெங்கணப்ப நாயக்கரின் பரம்பரையில் வந்தவன் என்று கூறிவிட்டு, கொடுத்ததை வாங்குவது போலாகும் என்பதால் வண்டிக்கான கூலியை வாங்காமல் சென்று விடுவது - இப்படி பற்பல அரிய தகவல்கள் உள்ளன.
எழுதி முடித்து எண்பதாண்டுகள் கடந்த பின்பும் இன்னும் இதிலுள்ள ஒரு வார்த்தை கூட பொருத்தமற்றதாகவோ, பொருள் புரியாததாகவோ இல்லாமலிருப்பது வியப்பும் சிறப்புமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com