2018 ரஷிய உலகக்கோப்பை: கால் பதித்த அணிகள் கால்பந்தில் சாதிக்குமா?

2018 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஐஸ்லாந்து மற்றும் பனாமா அணிகள் அறிமுக அணிகளாக களமிறங்கி விளையாடுகிறது. 
2018 ரஷிய உலகக்கோப்பை: கால் பதித்த அணிகள் கால்பந்தில் சாதிக்குமா?

2018ம் ஆண்டின் ரஷிய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூலை 15ம் தேதி வரை நடைபெறுகிறது.1930ம் ஆண்டு தொடங்கி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் உலகளவில் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளது. கால்பந்து போட்டிகளை காண்பதற்காக இரவு நேரங்களில் கண் விழித்து பார்க்கும் அளவுக்கு உலகக்கோப்பை கிரிக்கெட்டை விட பிரபலமான தொடர் இந்த உலகக்கோப்பை கால்பந்து. 

இந்த உலகக்கோப்பையில் கவனிக்கத்தக்கது எதுவென்றால் ஐஸ்லாந்து மற்றும் பனாமா அணிகள் தான். கால்பந்து வரலாற்றில் இந்த இரு அணிகளும் முதன்முறையாக பிபா உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

ஐஸ்லாந்து:

பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு முதன்முறையாக தகுதிபெற்றுள்ள ஐஸ்லாந்து அணி, உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் சிறிய நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 3,50,000 தான். முன்னதாக, சுமார் 13 லட்ச மக்கள் தொகையை கொண்ட டிரினாட் டொபாகோ அணியே உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற மிகச் சிறிய கால்பந்து அணி என்ற பெருமையை பெற்றிருந்தது.  

தகுதிச்சுற்றில் 10 போட்டிகளில் விளையாடிய ஐஸ்லாந்து அணி 22 புள்ளிகள் பெற்று உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது. 

உலகக்கோப்பை போட்டியில் இந்த அணி குரூப் டி-யில் அர்ஜென்டினா, குரோஷியா மற்றும் நைஜீரியா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இதில், பலம் வாய்ந்த அர்ஜென்டினாவுடனான போட்டி மிகவும் ஐஸ்லாந்துக்கு மிகவும் கடினமாக இருக்கும். இந்த பிரிவின் மற்ற இரு அணிகள் ஐஸ்லாந்துக்கு கடினமாக இல்லாவிடிலும் சவாலான அணியாக திகழலாம். 

இந்த அணியின் பயிற்சியாளர் ஹெய்மிர் ஹால்கிரிம்சன் பல் மருத்துவராக இருப்பவர். இவரது பயிற்சியின் கீழ் தான் அந்த அணி உலகக்கோப்பைக்கு தகுதிபெற்றது. இதே வேகத்தில் அந்த அணி உலகக்கோப்பையிலும் நாக் அவுட் சுற்றுகளுக்கு தகுதி பெற்று சாதனை படைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.

முதல் போட்டி: அர்ஜென்டினா - 16/06/18
2வது போட்டி: நைஜீரியா - 22/06/18
3வது போட்டி: குரோஷியா - 26/06/18

பனாமா:

இந்த உலகக்கோப்பை தொடரில் அறிமுக அணியாக களமிறங்கும் 2வது அணி பனாமா. பல ஆண்டு கால முயற்சிகளுக்குப் பிறகு முதன்முறையாக பிபா உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது பனாமா அணி. இந்த தகுதியை அந்த எளிதில் ஒன்றும் பெறவில்லை. 

மத்திய அமெரிக்க நாடான பனாமா தகுதிச்சுற்று போட்டியில் கோஸ்டா ரிகாவுக்கு எதிரான போட்டி ஒன்றில் 2-1 என வெற்றி பெற்று உலகக்கோப்பைக்கு தகுதிபெற்றது. இந்த போட்டியில் முதலில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் தான் இருந்தது. பின்னர், போட்டி முடிவதற்கு 2 நிமிடங்களே இருந்த நிலையில் பனாமாவின் கேப்ரியல் டோர்ரஸ் கோல் அடித்தார். 

அந்த பந்து கோல் எல்லைக் கோட்டை தொடவில்லை என்று கூறி கோஸ்டா ரிகா அணியினர் நடுவரிடம் முறையிட்டனர். ஆனால், நடுவர் அதனை கோல் என்று அறிவித்தார். இந்த சர்ச்சை கோல் தான் பனாமா அணியின் முயற்சிக்கு பலன் தேடி தந்து  உலகக்கோப்பைக்கு முதன்முறையாக தகுதி பெற வைத்தது. 

பனாமா அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றதை அடுத்து அந்த நாடு அதனை கொண்டாடும் வகையில் தேசிய விடுமுறை அறிவித்தது. இந்த அணியின் நுழைவு காரணம், அமெரிக்காவால் 1986க்கு பிறகு முதன்முறையாக உலகக்கோப்பைக்கு தகுதிபெற முடியாமல் போனது.     

உலகக்கோப்பை கால்பந்தில் பனாமா அணி பெல்ஜியம், இங்கிலாந்து, துனிஷியா ஆகிய அணிகளுடன் ஜி குரூப்பில் இடம்பெற்றுள்ளது. 

முதல் போட்டி: பெல்ஜியம் - 18/06/18
2வது போட்டி: இங்கிலாந்து - 24/06/18
3வது போட்டி: துனிஷியா - 28/06/18

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com