பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்? குவாலிபையரை தக்கவைக்குமா சென்னை?

ஐபிஎல்-இல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 2 போட்டிகளில் முதல் போட்டியின் முடிவிலேயே ஏறக்குறைய பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போகும் அணி யார் என்பது தெரிந்துவிடும். 
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்? குவாலிபையரை தக்கவைக்குமா சென்னை?

ஐபிஎல்-இல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 2 போட்டிகளில் முதல் போட்டியின் முடிவிலேயே ஏறக்குறைய பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போகும் அணி யார் என்பது தெரிந்துவிடும். 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதி பெற்றுவிட்டன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. அடுத்த 2 இடங்களுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் ஆகிய 5 அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வந்தது. 

இதில், நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெங்களூருவை தோற்கடித்து தனது பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது. இதில், தோல்வியடைந்ததன் மூலம் பெங்களூரு அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. 

இதைத்தொடர்ந்து, நேற்று இரவு நடந்த 2-ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு 3வது அணியாக முன்னேறியது. 

இந்நிலையில், ஐபிஎல் லீக் போட்டிகளின் கடைசி நாளான இன்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போகும் 4வது அணி யார் என்பதை தீர்மானிக்கவுள்ளது.

இன்று மாலை நடைபெறும் முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு நடைபெறும் 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்?

மும்பை இந்தியன்ஸ்:

இன்று மாலை நடைபெறும் முதல் போட்டியில் மும்பை அணி, டெல்லியை வீழ்த்தினாலே 14 புள்ளிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். மும்பை அணியின் ரன் ரேட் பிளஸில் (+) உள்ளதால் 14 புள்ளிகள் பெற்றுள்ள ராஜஸ்தான் மற்றும் ஒருவேளை இரவு போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றாலும் மும்பை அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அதனால், மும்பை அணி டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும். 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

இன்று மாலை நடைபெறும் முதல் போட்டியில் மும்பை அணி டெல்லியிடம் தோல்வியடைய வேண்டும். பின்னர், சென்னையுடன் இரவு நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணி சாதரண வெற்றி இல்லாமல் மிகப் பெரிய வெற்றியை பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். 

அதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தால் 53 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்த வேண்டும். 2வது பேட்டிங் செய்தால் 38 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் இலக்கை அடைந்து வெற்றி பெற வேண்டும். இதில், ஏதேனும் ஒன்று நிகழ்ந்தால் பஞ்சாப் அணி 14 புள்ளிகள் பெற்று ராஜஸ்தானைவிட ரன் ரேட்டில் அதிகம் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். 

ராஜஸ்தான் ராயல்ஸ்: 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது இக்கட்டான நிலையில் உள்ளது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி பெங்களூருவை தோற்கடித்து 14 புள்ளிகளை பெற்றது. இருப்பினும், நெட் ரன் ரேட் மைனஸில் (-) உள்ளதால், இன்று நடைபெறும் 2 போட்டிகளின் முடிவு தான் ராஜஸ்தானின் பிளே ஆப் வாய்ப்பை தீர்மானிக்கவுள்ளது. இன்று மாலை நடைபெறும் முதல் போட்டியில் மும்பை அணி டெல்லியிடம் தோல்வியடைய வேண்டும். 

இதைத்தொடர்ந்து, இரவு நடைபெறும் 2வது போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியடைய வேண்டும். இல்லையெனில், பஞ்சாப் அணி வெற்றி பெற்றாலும் முதலில் பேட்டிங் செய்தால் 53 ரன்களுக்கு குறைவான ரன்களின் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். 2-ஆவது பேட்டிங் செய்தால் 37 பந்துகளுக்கு குறைவான பந்துகள் மீதமிருக்கும் நிலையில் தான் வெற்றி பெற வேண்டும். இது நிகழ்ந்தால் பஞ்சாப் அணி வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்றாலும், ராஜஸ்தானைவிட குறைவான நெட் ரன் ரேட்டை தான் பெற்றிருக்கும். அதனால், ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கு 4வது அணியாக முன்னேறிவிடும். 

குவாலிபையரை தக்கவைக்குமா சென்னை? 

பஞ்சாப் அணிக்கெதிராக இரவு நடைபெறும் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டும். இல்லையெனில், சென்னை அணி குறைவான வித்தியாசத்திலாவது தோல்வியடையவேண்டும். சென்னை அணி 2வது பேட்டிங் செய்தால் 76 ரன்களுக்கு குறைவான வித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும். முதல் பேட்டிங் செய்தால், 50 பந்துகளுக்கு குறைவான பந்துகள் மீதமிருக்கும் நிலையில் தோல்வியடைய வேண்டும். இல்லையெனில், ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2வது இடத்துக்கு முன்னேறிவிடும். 

முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணி குவாலிபையர் போட்டியில் தோல்வியடைந்தால் எலிமினேட்டர் போட்டியில் விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேற இன்னொரு வாய்ப்பு இருக்கும்.

3 மற்றும் 4வது இடங்களை பிடிக்கும் அணிகள் முதலில் எலிமினேட்டர் 1 போட்டியில் வெற்றி பெற வேண்டும். அதைத்தொடர்ந்து குவாலிபையரில் தோல்வியடையும் அணியுடன் எலிமினேட்டர் 2 போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com