அப்படி என்ன தான் சொன்னார் பிரீத்தி ஜிந்தா? சமூகவலைதளங்களில் வைரலாகும் விடியோ  

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா, மும்பை இந்தியன்ஸ் அணி பைனலுக்கு செல்லாதது மகிழ்ச்சி அளிப்பதாக...
அப்படி என்ன தான் சொன்னார் பிரீத்தி ஜிந்தா? சமூகவலைதளங்களில் வைரலாகும் விடியோ  

நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் சுற்று போட்டிகள் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) சென்னை - பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியுடன் முடிவுக்கு வந்தது. 

நேற்றைய சூழ்நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் கடைசி அணிக்கான இடத்துக்கு மும்பை, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில், நேற்றைய முதல் போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் மோதின. இதில், மும்பை அணி வெற்றி பெற்றிருந்தால் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்திருக்கும். 

ஆனால், மும்பை அணி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இதனால், பிளே ஆஃப் நுழைவுக்கான போட்டி ராஜஸ்தான் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியாக குறைந்தது. இதையடுத்து, பஞ்சாப் அணி சென்னையை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் ராஜஸ்தானை பின்னுக்குத் தள்ளி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. 

இது ஒரு புறம் இருக்க பொதுவாகவே பஞ்சாப் அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளின் போதும் அந்த அணியின் இணை உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா மைதானத்துக்கு வந்து வீரர்களுக்கு ஆதரவு அளித்து ஊக்கமளிப்பார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியின் போதும் அவர் மைதானத்துக்கு வந்திருந்தார். அப்போது, அவர் தனது அருகில் இருந்த நபரிடம் ஏதோ கூற அது மைதானத்தில் உள்ள கேமராக்களில் பதிவாகி ஒளிபரப்பானது. 

அந்த குறிப்பிட்ட காட்சியை மட்டும் எடுத்து அதில், பிரீத்தி ஜிந்தா பேசுவதின் உதட்டசைவை வைத்து சமூகவலைதளவாசிகள் அவர் கூறியதை கணித்துள்ளனர். இதையடுத்து, அந்த விடியோவையும் பதிவிட்டு அவர் கூறியிருப்பதாக கூறப்படும் வாக்கியத்தையும் இணைத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, அந்த விடியோ காட்சி வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என அனைத்து சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. 

அந்த விடியோவில் பிரீத்தி ஜிந்தா கூறியிருப்பதாக கூறப்படுவது, 

"மும்பை அணி பைனலுக்கு முன்னேறாதது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது." (மொழி பெயர்க்கப்பட்டுள்ளது) 

ஆனால், நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியடைந்து ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. இதன்மூலம், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் 4-ஆவது அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தகுதி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com