ஐபிஎல் பிளே ஆஃப்: சென்னைக்கு வெற்றி வாய்ப்பு? பலமும் பலவீனமும்

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் குவாலிபையர் 1 எனும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ்அணியும் இன்று (செவ்வாய்கிழமை) மோதுகின்றன. 
ஐபிஎல் பிளே ஆஃப்: சென்னைக்கு வெற்றி வாய்ப்பு? பலமும் பலவீனமும்

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் குவாலிபையர் 1 எனும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று (செவ்வாய்கிழமை) மோதுகின்றன. 

ஐபிஎல் போட்டிகளின் லீக் சுற்றுகள் முடிவுக்கு வந்ததையடுத்து, இன்று பிளே ஆஃப் சுற்று போட்டிகள் தொடங்கவுள்ளன. லீக் சுற்றுகளின் முடிவில் ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் தலா 18 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன. இதையடுத்து, இந்த இரு அணியும் இன்று நடைபெறவுள்ள பிளே ஆஃப் சுற்றின் குவாலிபையர் 1 போட்டியில் மோதுகின்றன. 

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 27-ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு நேரடி தகுதி பெறும். தோல்வியடையும் அணி எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியுடன் 2வது குவாலிபையர் போட்டியில் விளையாடும் 2-ஆவது வாய்ப்பு கிடைக்கும். அதில், வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு 2வது அணியாக முன்னேறும். 

முதல் குவாலிபையர் போட்டியில் இன்று மோத இருக்கும் 2 அணிகளும் தங்களது பலம் மற்றும் பலவீனங்களில் நேர்மாறாக உள்ளன. நடப்பு சீசனில் சென்னை அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. ஹைதராபாத் அணியோ மாறாக பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ்:

சென்னை அணி லீக் சுற்றில் 9 போட்டிகளில் வெற்றியையும், 5 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. சென்னை அணி பந்துவீச்சை காட்டிலும் பேட்டிங்கிலேயே பலமாக தென்படுகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன் மற்றும் ராயுடு நம்பிக்கை அளிக்கின்றனர். வாட்சனுக்கு கடந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த போட்டியில் அவர் மீண்டும் களமிறங்குவார் தெரிகிறது. 

பலமான பேட்டிங்:

பேட்டிங் வரிசையில் வாட்சன், ராயுடு, ரெய்னா ஆகியோர் டாப் ஆர்டரில் நம்பிக்கை அளிக்கின்றனர். நடுகள வரிசையில் தோனி நல்ல நிலையில் உள்ளார். பினிஷிங்க் பொறுப்பில் பிராவோ இதுவரை சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். 

ஆனால், இதற்கு நடுவில் பில்லிங்ஸ் தான் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். முதல் போட்டியில் அரைசதம் அடித்த பிறகு அவர் தொடர்ச்சியாக ஒற்றை இலக்கு ரன்களுடனையே ஆட்டமிழந்து வருகிறார். அதனால், அவருக்கு பதிலாக அனுபவ டு பிளேசிஸை அணியில் சேர்த்து நடுகளத்தில் கூடுதல் பலம் சேர்க்கலாம். 

டு பிளேசிஸை தொடக்க வீரராக களமிறக்கி ராயுடுவை மீண்டும் நடுகளத்து மாற்றி பிளே ஆஃபில் தோனி ரிஸ்க் எடுக்கமாட்டார் என்று தெரிகிறது. பின்னர், பினிஷிங்கில் ஜடேஜாவும் மெல்ல மெல்ல வலு சேர்க்கிறார். அதனால், சென்னை அணி பலமான பேட்டிங்காகவே தென்படுகிறது. 

இது போதாதென்று கடந்த போட்டியில் களமிறங்கிய பந்துவீச்சாளர் சாஹரும் அதிரடி காட்ட அவரும் பேட்டிங்கில் பங்களிக்க காத்திருக்கிறார். பந்துவீச்சில் பலமான ஹைதராபாத்தை எதிர்கொள்ள இது போன்ற நீண்ட பேட்டிங் வரிசை சென்னை அணிக்கு அவசியம்.

ஹைதராபாத்துக்கு சிம்ம சொப்பணம் ராயுடு:

லீக் சுற்றில் சென்னை, ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான 2 போட்டியிலும் சென்னை அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ராயுடு தான். முதல் லீக் போட்டியில் சென்னை அணி முதலில் பேட் செய்தது. அதில், ராயுடு நடுகள பேட்ஸ்மேனாக களமிறங்கி தடுமாறி வந்த சென்னை அணியை அதிரடியில் மிரட்டி ரன் ரேட்டையும் உயர்த்தி அசத்தினார். அந்த போட்டியில் அவர் 37 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். 

2வது லீக் சுற்றில் இலக்கை விரட்டி சென்னை அணி களமிறங்கியது. அதில், ராயுடு வாட்சனுடன் இணைந்து அதிரடி தொடக்கத்தை தந்தார். அரைசதம் அடித்த பிறகு வாட்சன் ஆட்டமிழக்க ராயுடு தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தினார். அதன்மூலம் அந்த அவர் சதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் சென்னை அணியை வெற்றி பெறச் செய்தார். அதனால் தான் இந்த 2 போட்டியிலும் அவரே ஆட்டநாயகன் விருதை வென்றார். 

அதனால், அவர் இன்றைய பிளே ஆஃப் போட்டியிலும் ஹைதராபாத் அணிக்கு அச்சுறுத்தலாக திகழ்கிறார். 

பந்துவீச்சு:

சென்னை அணி வருத்தப்பட வேண்டிய விஷயமே டெத் பந்துவீச்சு எனும் கடைசி கட்ட பந்துவீச்சு தான். அந்த அணி தொடக்கத்தில் சாஹர், நிகிடி என ஸ்விங்கில் மிரட்டினாலும், கடைசி கட்ட பந்துவீச்சு என்று வரும் போது சொதப்பல் தான். அதன் ஸ்பெஷலிஸ்ட் என கருதப்படும் பிராவோவே அதில் சொதப்புகிறார். டெல்லி அணியுடனான கடைசிக்கு முந்தைய லீக் போட்டியில் கடைசி ஓவரில் பிராவோ 26 ரன்களை வாரி வழங்க, அதுவே அந்த போட்டியின் போக்கை முற்றிலுமாக மாற்றியது. 

அதே சொதப்பல்களை சென்னை அணி இந்த போட்டியிலும் கடைபிடிக்காமல் எழுச்சி பெற வேண்டும். தொடக்கத்தில் சாஹர், நிகிடி அசத்துகின்றனர். பின்னர், ஹர்பஜன், ஜடேஜா சுழல் கூட்டணி நடுகள ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்துவதை கச்சிதமாக செய்து வருகின்றனர். இவர்களுடன் ஷர்துல் மற்றும் வாட்சனும் ஒத்துழைக்க காத்திருக்கின்றனர். டெத் பந்துவீச்சை பொறுத்தவரை பிராவோவுடன் வாட்சன், ஷர்துல் மற்றும் நிகிடி உள்ளனர். நிகிடி கடந்த போட்டிகளில் நல்ல நிலையில் உள்ளதால் டெத் பந்துவீச்சில் சொதப்ப மாட்டார் என்று தெரிகிறது. 

ஹைதராபாத்தின் பலவீனம் தான் சென்னையின் பலம்

ஹைதராபாத் அணி பேட்டிங்கில் வில்லியம்ஸனையே பெரிதும் சார்ந்திருக்கிறது. அவரை ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் மிகப் பெரிய பிரச்சனை முடிந்துவிடும். அவரையடுத்து, தொடக்கத்தில் தவான் மற்றும் ஹேல்ஸ் அவ்வப்போது நம்பிக்கை அளித்து வருகின்றனர். இவர்களுக்கு சாஹர் மற்றும் நிகிடி தங்களது ஸ்விங்கை கையாள வேண்டும். பின்னர், ஹைதராபாத் அணி சொல்லிக்கொள்ளும்படி பினிஷிங்கில் ஜொலித்தது கிடையாது. அவ்வபோது பாண்டே மற்றும் யூசுப் பதான் அதிரடி காண்பிப்பர். 

ஹைதராபாத் அணி நடப்பு சீசனில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும், சென்னை அணிக்கெதிரான 2 லீக் போட்டிகளிலும் பெரிதளவு சோபிக்கவில்லை. அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வந்த ஹைதராபாத் அணி கடைசி 3 லீக் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால், அது அந்த அணிக்கு உளவியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும். 

குறிப்பாக 2வது பந்துவீச்சில் எதிரணியை எத்தனை சிறிய இலக்காக இருந்தாலும் கட்டுப்படுத்தி சுருட்டுவதில் வல்லமை படைத்த அணியாக வலம் வந்த ஹைதராபாத்தால் கடைசி கட்ட லீக் போட்டிகளில் அதனை தொடரமுடியவில்லை. அதனால், இதுவும் சென்னை அணிக்கு பலம் சேர்க்கலாம். 

மொத்தத்தில் பேட்டிங் பலமும், பந்துவீச்சு பலமும் நேருக்கு நேர் மோதவுள்ளதால், அதுவும் முக்கியமான போட்டியில் மோதவுள்ளதால் இரு அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவு உள்ளது.

நாம் என்னதான் போட்டிக்கு தயாரானாலும், வரலாற்றில் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும் அன்றைய போட்டியில் களத்தில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது தான் வெற்றிக்கு அவசியம். அதனால், சென்னை அணி ஹைதராபாத்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும் இன்றைய போட்டியில் தங்களது திட்டங்களையும்,வியூகங்களையும் தக்க நேரத்தில் சரியாக செயல்படுத்த வேண்டும். 

இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com