கோப்பை வென்றது சென்னை 'சீனியர்' கிங்ஸ் - விமர்சனங்களுக்கு சிஎஸ்கே தக்க பதிலடி

ஐபிஎல் ஏலத்துக்கு பிறகு சிஎஸ்கேவை சென்னை சீனியர் கிங்ஸ் என்று கேலி செய்யப்பட்டதற்கு அந்த அணி கோப்பையை வென்று தக்க பதிலடி தந்துள்ளது.
கோப்பை வென்றது சென்னை 'சீனியர்' கிங்ஸ் - விமர்சனங்களுக்கு சிஎஸ்கே தக்க பதிலடி

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த 11-ஆவது ஐபிஎல் சீசன் நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைந்தது. பரபரப்பாக நடைபெற்ற நேற்றைய இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 

நடப்பு சீசனுக்கான ஐபிஎல் ஏலம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சென்னை அணி வாட்சன், ராயுடு, டு பிளேசிஸ், பிராவோ, ஹர்பஜன் சிங், முரளி விஜய், இம்ரான் தாஹிர் என 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்களையே பெரும்பாலும் எடுத்திருந்தது. அதுமட்டுமின்றி தக்கவைக்கப்பட்ட வீரர்களுள் தோனி, ரெய்னா ஆகியோரும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

வாட்சன்  - 36 வயது
டு பிளேசிஸ் - 33 வயது
ரெய்னா - 31 வயது
ராயுடு - 32 வயது
தோனி - 36 வயது
பிராவோ - 34 வயது
கரண் சர்மா - 30 வயது
ஹர்பஜன் சிங் - 37 வயது
இம்ரான் தாஹிர் - 39 வயது

இதனால், ஏலத்தின் முடிவில் சிஎஸ்கேவின் விரிவாக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அல்ல சென்னை சீனியர் கிங்ஸ் என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர். 

டி20 கிரிக்கெட், கிரிக்கெட் விளையாட்டின் நவீனம் என்பதால் பெரும்பாலும் இளம் வீரர்கள் தான் இதற்கு சிறப்பாக ஜொலிப்பார்கள் என்ற எண்ணம் பெரும்பாலோனோர் மத்தியில் இருந்து வந்தது. 

ஆனால், இந்த பார்வை, எண்ணங்கள் அனைத்தும் தவறு. வயது என்பது வெறும் எண் தான் என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிரூபித்துள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்ற அனைத்து அணிகளையும் விட சிறந்த அணி என்பதை கோப்பை வென்று நிரூபித்துள்ளது. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று கூறப்பட்ட வீரர்களான தோனி, ரெய்னா, வாட்சன், டு பிளெசிஸ், ராயுடு, பிராவோ என இவர்கள் தான் நடப்பு சீசனில் பெரும்பாலான போட்டிகளில் முக்கிய வீரர்களாக ஜொலித்து விளங்கினர். 

ராயுடு, நடப்பு சீசனில் 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். வாட்சன் 555 ரன்களும், தோனி 455 ரன்களும், ரெய்னா 445 ரன்களும் குவித்து தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பிளே ஆஃப் சுற்றின் முதல் குவாலிபையர் போட்டியில் அனைத்து வீரர்கள் திணறிய போதும் மனம் தளராத டு பிளெசிஸ் தனது அனுபவத்தை கொண்டு கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கை அடையச் செய்தார். 

நேற்றைய இறுதிப்போட்டியிலேயே வாட்சன் சதம் அடித்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், அவரால் தனது முதல் 10 பந்துகளில் 1 ரன் கூட எடுக்க முடியவில்லை. புவனேஷ்வர் குமார் மற்றும் சந்தீப் சர்மாவின் ஸ்விங்கில் ரன் குவிக்க முடியாமல் திணறி வந்தார். இருப்பினும், அவர் நிதானம் காட்டி களத்தின் தன்மையை அறிந்து சரியான நேரம் வரும் வரை காத்திருந்து பின்னர் அதிரடிக்கு மாறினார். 

முதல் 10 பந்துகளில் ரன் குவிக்காதவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 117 ரன்கள் குவித்து ஸ்டிரைக் ரேட்டை 200-க்கு மேல் வைத்துள்ளார். இது தான் அனுபவம் என்பதை வாட்சன் நிரூபித்தார். 

இதையடுத்து ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு தோனி வயது குறித்து பேசுகையில், 

"நாங்கள் வயது குறித்து நிறைய பேசினோம். ஆனால், உடற்தகுதி தான் முக்கியம். உதாரணத்துக்கு ராயுடுவுக்கு 33 வயது. அவர் உடற்தகுதியுடன் இருக்கிறார். மைதானத்தின் பெரும்பாலான பகுதிகளை கடந்து சிறப்பாக செயல்படுவார். அவர், மைதானத்தில் பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் நீண்ட நேரம் செலவிட நேர்ந்தாலும் அடுத்த போட்டியில் விளையாட முடியாது என்று புகார் கூற மாட்டார். அதனால், வயதை விட உடற்தகுதி தான் முக்கியம். 

கேப்டன்கள் பெரும்பாலும் விரும்புவது எதுவென்றால், பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும். ஆனால், வீரர்கள் எந்த ஆண்டில் பிறந்தார்கள் என்பது முக்கியமில்லை. 19 வயது வீரராக இருந்தாலும் சரி, 20 வயது வீரராக இருந்தாலும் சரி களத்தில் உடற்தகுதியுடன் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். 

இருப்பினும் எங்களிடம் இருக்கும் குறைபாடுகள் குறித்து எங்களுக்கு தெரியும். ஆனால், எந்த பிரிவில் நாம் சிறப்பாக செயல்பட முடியாது என்பதை நாம் உணர வேண்டும் என்பது தான் முக்கியம். 

உதாரணத்துக்கு, வாட்சனை ஒரு ரன்னை தடுக்குமாறு அழுத்தம் கொடுத்தால் அவர் ஹாம்ஸ்ட்ரிங் மூலம் காயமடையும் வாய்ப்பு  நிறைய உள்ளது. அதன்பிறகு அவர் அடுத்த போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்படும். அதனால், நாம் கூறவேண்டியது அவர்கள் தங்களை அர்பணித்து 1 ரன்னை தடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். ஆனால், ஒரு ரன்னை தடுப்பதற்காக காயம் அடைவது என்பது சரியல்ல.  

ஏனென்றால் வாட்சனோ, பிராவோவோ காயமடைந்து அடுத்த போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் நான் அணி அதே பலத்துடன் இருக்க வீரர்களுள் நிறைய மாற்றங்களை செய்ய நேரிடும். அதனால், வயது என்பது வெறும் எண் தான், உடற்தகுதி தான் முக்கியம்" என்றார். 

ஒருவரை நாம் எத்தனை வயது மூத்தவர்கள் என்று கூறுகிறோமோ அத்தனை அனுபவங்கள் அவர்களிடம் இருக்கும் என்பதையும் நினைவு கூற வேண்டும். அதற்கேற்றவாறு, டி20 கிரிக்கெட் என்பது இளம் வீரர்களின் விளையாட்டு மூத்த வீரர்களுக்கானது அல்ல என்ற பொதுப் பார்வையை மாற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com