அது எப்படி பெனால்டி இல்லை?: ஆர்ஜென்டீனாவுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்த நடுவருக்கு நைஜீரிய அணி கேப்டன் கேள்வி!

பந்து கையில் பட்டதா என்று நடுவரிடம் கேட்டேன். ஆமாம் என்றார். பிறகு ஏன் அது பெனால்டி இல்லை என்று...
அது எப்படி பெனால்டி இல்லை?: ஆர்ஜென்டீனாவுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்த நடுவருக்கு நைஜீரிய அணி கேப்டன் கேள்வி!

உலகக் கோப்பை 2018-ல் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி. ஆனால் தொடக்க ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியிடம் டிரா செய்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் 3-0 என ஆர்ஜென்டீனாவை வென்றது குரோஷிய அணி. இதையடுத்து வெறும் 1 புள்ளியுடன் நைஜீரியாவை நேற்று எதிர்கொண்டது முன்னாள் சாம்பியனான ஆர்ஜென்டீனா அணி. வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்த ஆட்டத்தில் 2-1 என்கிற கோல் கணக்கில் அட்டகாசமாக வென்று நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி படைத்துள்ளது.

16 முறை உலகக் கோப்பையில் விளையாடி, ஐந்துமுறை அரையிறுதிக்குத் தகுதி பெற்று, ஐந்துமுறை இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்து இருமுறை உலகக் கோப்பையை வென்றுள்ளது ஆர்ஜென்டீனா அணி. இந்நிலையில் ரஷிய உலகக் கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறிவிடுமா என்கிற அச்சத்தில் நேற்றைய ஆட்டத்தைக் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். 

மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் கோல் அடித்தது ஆர்ஜென்டீனா. முதல் கோலை மெஸ்ஸி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதன்பிறகு பெனால்டி மூலம் நைஜீரியா கோல் அடித்து சமன் செய்தது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் நைஜீரிய அணி பிரமாதமாக விளையாடியது. இதனால் ரசிகர்கள் பதற்றத்துடன் இருந்தார்கள். ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் 4 நிமிடங்கள் மீதமுள்ள நிலையில் மார்கோஸ் ரோஜோ அட்டகாசமான கோல் அடித்து ஆர்ஜென்டீனா அணி வெற்றி பெற உதவினார். மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா 2-1 என ஐஸ்லாந்தைத் தோற்கடித்ததால் 4 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது ஆர்ஜென்டீனா.

இரண்டாம் பகுதியில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தபோது பந்து, ஆர்ஜென்டீனா வீரர் ரோஜோவின் கையில் பட்டது. ஆனால் விடியோ நடுவரிடம் இதுகுறித்து மேல்முறையீடு செய்தபிறகும் பெனால்டி வழங்க மறுத்தார் ஆட்ட நடுவர் கனேயெட் சகிர். அவருடைய இந்த முடிவு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

நைஜீரிய அணி கேப்டன் ஜான் ஒபி இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது: அது எப்படி பெனால்டி இல்லை என்று எங்களுக்குப் புரியவில்லை. பந்து அவர் கையில் பட்டது தெளிவாகத் தெரிகிறதே! போர்ச்சுகலுக்கு நேற்று வழங்கியதை விடவும் மோசமானது இது. கையை வெளியே நீட்டிக்கொண்டிருந்தபோது பந்து அவர் கையில் பட்டது. முதலில் ஒரு பெனால்டி தந்துவிட்டதால் அடுத்த பெனால்டி தர நடுவருக்கு மனமில்லை போல. ஆனால் அது பெனால்டிக்கு உகந்தது என்றால் பெனால்டி தரவேண்டியதுதானே. ஓய்வறைக்கு வந்தபிறகு நாங்கள் விடியோவில் அதைப் பார்த்தோம். பந்து கையில் பட்டது உண்மைதான். நிச்சயம் பெனால்டி வழங்கியிருக்க வேண்டும். பந்து கையில் பட்டதா என்று நடுவரிடம் கேட்டேன். ஆமாம் என்றார். பிறகு ஏன் அது பெனால்டி இல்லை என்று கேட்டதற்கு,
அது எனக்குத் தெரியாது என்கிறார் எனத் தன வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் நைஜீரிய கேப்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com