கேதர் ஜாதவுக்குப் பதிலாகப் புதிய வீரரைத் தேர்வு செய்துள்ளது சிஎஸ்கே!

பந்துவீச்சாளராக மட்டுமில்லாமல் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் நல்ல ஃபீல்டராகவும் உள்ளதால் சென்னை அணிக்குக் கூடுதல் பலமாக...
கேதர் ஜாதவுக்குப் பதிலாகப் புதிய வீரரைத் தேர்வு செய்துள்ளது சிஎஸ்கே!

காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ள கேதர் ஜாதவுக்குப் பதிலாக புதிய வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி "த்ரில்' வெற்றி கண்டது. ஒரு கட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த சென்னை, டுவைன் பிராவோவின் அதிரடி பேட்டிங்கால் வெற்றி வாய்ப்பை நோக்கி முன்னேறியது. இதன்மூலமாக, 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த சீசனில் களம் கண்டுள்ள சென்னை அணி, வெற்றியுடன் தனது ஐபிஎல் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த ஆட்டத்தில் கேதர் ஜாதவ் காயம் காரணமாக 14 ரன்களுக்கு "ரிடையர்ட் ஹர்ட்' முறையில் பெவிலியன் திரும்பினார். பின்னர் மீண்டும் களம் கண்ட கேதர் ஜாதவ், ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். அவர் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 24 ரன்கள் எடுத்தார். எனினும், காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து ஜாதவ் விலகியுள்ளார். சென்னை அணியின் பேட்டிங் பிரிவில் முக்கிய பலமாக இருப்பார் என்று கணிக்கப்பட்ட நிலையில் அவர் விலகியிருப்பது சென்னை அணிக்கு பின்னடைவை உருவாக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் கேதர் ஜாதவுக்குப் பதிலாக இங்கிலாந்து இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லே தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை அணியில் சாம் பில்லிங்ஸ், மார்க் வுட் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள நிலையில் 3-வது இங்கிலாந்து வீரராக டேவிட் வில்லே அணியில் நுழைந்துள்ளார். 

அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு 28 வயது டேவிட் வில்லே-யை சிஎஸ்கே தேர்வு செய்துள்ளது. டேவிட் வில்லே, இங்கிலாந்து அணிக்காக 34 ஒருநாள் மற்றும் 20 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். பந்துவீச்சாளராக மட்டுமில்லாமல் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் நல்ல ஃபீல்டராகவும் உள்ளதால் சென்னை அணிக்குக் கூடுதல் பலமாக இருப்பார் என்று கணிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com