ஆயிரக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்களுடன் புணேவுக்குக் கிளம்பியது ‘விசில் போடு’ எக்ஸ்பிரஸ்! (படங்கள் & விடியோக்கள்)

ரயிலில் ஓரிரு பெட்டிகள் ஒதுக்கித் தந்தால் கூடப் போதும் என்று கேட்டதற்கு ஒரு ரயிலையே ஏற்பாடு செய்துவிட்டது... 
ஆயிரக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்களுடன் புணேவுக்குக் கிளம்பியது ‘விசில் போடு’ எக்ஸ்பிரஸ்! (படங்கள் & விடியோக்கள்)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே சில நாள்களுக்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் - நைட் ரைடர்ஸ் ஆட்டத்தை சென்னையில் நடத்தக்கூடாது என பல்வேறு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. ஆனால் அதையும் மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் ஆட்டம் நடைபெற்றது. எனினும் மைதானத்தின் உள்ளே காலணிகளை வீசியும், செல்லிடப்பேசிகளின் விளக்குகளை எரிய வைத்தும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். பலத்த பாதுகாப்பையும் மீறி மைதானத்தின் உள்ளே இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது பிசிசிஐக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் ஆட்டங்கள் புணேவுக்குத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. வருகிற 20-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புணேவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சென்னையில் நடைபெறுவதாக இருந்த சிஎஸ்கே ஆட்டங்களைக் காண முடியாத ரசிகர்களுக்கு புதிய ஏற்பாடு ஒன்றைச் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம். சென்னையில், சிறப்பு ரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் சிஎஸ்கே ரசிகர்களை புணேவுக்கு அனுப்பி வைத்துள்ளது. விசில் போடு எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தச் சிறப்பு ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புணேவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. 

சிஎஸ்கே ஃபேன்ஸ் கிளப் என்றொரு அமைப்பின் மூலமாக சிஎஸ்கே நிர்வாகத்துக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சென்னை ஆட்டங்கள் புணேவுக்கு மாற்றப்பட்டுள்ளதால், சலுகை விலையில் ரயில் அல்லது விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்து தருமாறும் அல்லது ஆட்டத்துக்கான டிக்கெட் கட்டணத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் வைத்த கோரிக்கைக்கு இதுபோன்ற ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம். ரயிலில் ஓரிரு பெட்டிகள் ஒதுக்கித் தந்தால் கூடப் போதும் என்று கேட்டதற்கு ஒரு ரயிலையே ஏற்பாடு செய்துவிட்டது. இதையடுத்து தோனியின் தீவிர ரசிகரான சரவணன், பிரபு ஆகியோர் புணே செல்லக்கூடிய சிஎஸ்கே ரசிகர்களைத் தேர்வு செய்துள்ளார்கள். 

நாளை புணேவில் சென்னை - ராஜஸ்தான் ஐபிஎல் ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டம் முடிந்தபிறகு அதே சிறப்பு ரயிலில் அனைவரும் அடுத்த நாள் சென்னைக்குத் திரும்புகிறார்கள். சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல் புணேவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்குவதற்கும் அவர்களுடைய உணவுச் செலவுக்கும் பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பயணம் குறித்த புகைப்படங்களும் காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com