ஐபிஎல்-லில் அசத்தலாக அறிமுகமாகியுள்ள ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஆச்சர்யக் கதை!

இவர் ஏன் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பது சுவாரசியமான கதை...
ஐபிஎல்-லில் அசத்தலாக அறிமுகமாகியுள்ள ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஆச்சர்யக் கதை!

ஐபிஎல் ஏலத்தில் ஜோஃப்ரா ஆர்ச்சரை ரூ. 7.20 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. அப்போது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆர்ச்சரைப் பற்றி அதிகம் தெரியாது.

உடனே கிரிக்கெட் ரசிகர்கள் அவரைப் பற்றிய தகவலை அலசியபோது ஆச்சர்யம் அடைந்தார்கள். ஆம். இதுவரை எந்தவொரு சர்வதேச ஆட்டத்திலும் விளையாடாமல் டி20 லீக் போட்டிகளிலும் கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியே புகழ்பெற்றுள்ளார் ஜோஃப்ரா. இதுவரை 20 முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆர்ச்சர், 42 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் ஆறு அரை சதங்களுடன் 89 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இவர் ஏன் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பது சுவாரசியமான கதை.

மேற்கிந்தியத் தீவுகளின் ஒன்றான பார்படாஸில் பிறந்த ஜோஃப்ரா ஆர்ச்சரின் தாய் மேற்கிந்தியத் தீவுகள் பகுதியைச் சேர்ந்தவர். தந்தையின் தாய்நாடு இங்கிலாந்து. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடுவதற்குப் பதிலாக இங்கிலாந்து அணியில் விளையாடவே விருப்பம் கொண்டார் ஆர்ச்சர். அவருக்கு முன்பு மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த கிறிஸ் ஜார்டன், பிறகு இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். அவர்தான் ஆர்ச்சருக்குப் பெரிய ஊக்கமாக இருந்தார். 2013-ல் பத்தொன்பது வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பிடித்தார் ஆர்ச்சர். பிறகு காயமடைந்ததால் அவரால் பார்படாஸ் அணியில் தொடர்ந்து நீடிக்கமுடியவில்லை. தனக்கான ஊக்கம் கிடைக்காமல் இருந்த நிலையில் அவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தார் கிறிஸ் ஜார்டன்.

பார்படாஸ் அணியின் வலைப்பயிற்சியில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சைக் கண்ட ஜார்டன், இங்கிலாந்து கவுண்டி அணியான சஸ்ஸக்ஸ் நிர்வாகத்தினரிடம் ஆர்ச்சரைப் பற்றிக் கூறினார். இதையடுத்து சஸ்ஸக்ஸ் அணியில் ஆர்ச்சர் இடம்பிடித்தார். 2016-ல் அந்த அணிக்காக அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடினார். வேகப்பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாகவும் விளையாடியதால் அதிகக் கவனம் பெற்றார். அவரை டி20 கிளப்புகள் மொய்க்க ஆரம்பித்தன. ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் இடம்பிடித்தார். அந்த அணி இரண்டாம் இடம் பிடித்தது. இதுதவிர பங்களாதேஷ் பிரிமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என முக்கியமான டி20 போட்டிகளில் விளையாடியவர், நேற்று ராஜஸ்தான் அணியில் இடம்பிடித்ததோடு ஐபிஎல் போட்டியிலும் அறிமுகமாகியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வென்றது. ராஜஸ்தானில் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 4 பவுண்டரிகள் உள்பட 52 ரன்கள் அடித்தார். பென் ஸ்டோக்ஸ் 40 ரன்கள் எடுக்க, எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தன. இறுதிவரை போராடிய கிருஷ்ணப்பா கெளதம், 2 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவையிருந்தபோது சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்தார். அவர் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 33, உனத்கட் ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆட்ட நாயகன் ஆனார். இவருடைய வருகை ராஜஸ்தான் அணிக்குப் புதிய பலத்தை அளித்துள்ளது. 

ஆர்ச்சருக்கு தற்போது 23 வயது. மேற்கிந்தியத் தீவுகள் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் இவர் இங்கிலாந்து அணியில் விளையாட வேண்டுமென்றால் 7 வருடம் இங்கிலாந்தில் குடியேறியிருக்க வேண்டும். 18 வயதுக்குப் பிறகு இங்கிலாந்துக்குக் குடியேறிய வீரர்களுக்காக இந்த விதி 2012-ல் அறிமுகமானது. அதன் அடிப்படையில் ஆர்ச்சருக்கு 2022-ல்தான் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கமுடியும். அப்போது அவருக்கு 27 வயதாகிவிடும்.

இதுகுறித்து ஆர்ச்சர் கூறியதாவது: 

இங்கிலாந்து ரசிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமைகள் மாறாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதற்காகத்தான் நான் முழு நேர கிரிக்கெட் வீரராக மாறினேன். நாள்கள் சீக்கிரம் சென்றுவிடும் என்று நம்புகிறேன். 2022 வரை பொறுமையாக இருக்கவேண்டுமா என்கிற வருத்தம் எனக்கில்லை. அதுவரை கிடைத்த வாய்ப்புகளில் என் திறமையை நிரூபித்து புதிய இடங்களைக் காணவுள்ளேன். 

ஐபிஎல் ஏலத்தில் நடந்ததை இன்னும் நம்பமுடியாமல் உள்ளேன். எனக்காகப் பல அணிகள் போட்டியிட்டன. அவ்வளவு பெரிய தொகைக்கு நான் தேர்வானது ஆச்சர்யத்தை அளித்தது என்று பேட்டியளித்துள்ளார் ஜோஃப்ரா ஆர்ச்சர்.

150 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவதோடு யார்க்கர்களையும் துல்லியமாக வீசுவதால் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஆர்ச்சர். ஐபிஎல் போட்டியில் இவருடைய அறிமுகம் ராஜஸ்தானுக்கு மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நேற்றைய ஆட்டத்துக்குப் பிறகு அதிகமாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com