தோனி விளையாடும் 11-வது ஐபிஎல் போட்டி இது.
இத்தனை வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடி வருகிறார் தோனி.
8 ஆட்டங்களில் 3 அரை சதங்கள் உள்ளிட்ட 286 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை 20 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
வேறு எந்த வருடத்தை விடவும் இம்முறை அதிக ஸ்டிரைக் ரேட் (100 பந்துகளுக்கு அடித்த ரன்கள்) வைத்துள்ளார் தோனி. இதற்கு முன்பு 2013-ல் 162.89 ஸ்டிரைக் ரேட் வைத்திருந்தார். அந்த வருடம் தோனி 4 அரை சதங்களும் எடுத்திருந்தார்.
ஆனால் இந்தமுறை தோனியின் ஸ்டிரைக் ரேட் 169.23. தில்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், 5 சிக்ஸர், 2 பவுண்டரியுடன், 22 பந்துகளில் 51 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் தோனி.
2011-ல் 23, 2013-ல் 25, 2014-ல் 20 சிக்ஸர்கள் அடித்துள்ளார் தோனி (இதர வருடங்களில் 20-க்கும் குறைவாகவே சிக்ஸர்கள் அடித்துள்ளார்.) ஆனால் 20+ சிக்ஸர்கள் அடிக்க குறைந்தபட்சம் 16 ஆட்டங்களாவது தோனிக்குத் தேவைப்பட்டன. ஆனால் இந்தமுறை எட்டே ஆட்டங்களில் 20 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார் தோனி.
இந்த அசத்தலான, அதிரடியான பேட்டிங்கை ரசிகர்களும் நிபுணர்களும் புகழ்ந்து வருகிறார்கள். பழைய தோனியை மீண்டும் காண்பதுபோல இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
சிஎஸ்கே அணி மற்றும் அதன் ரசிகர்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ளார் தோனி. தனது இரண்டாவது தாய் வீடு என்று சென்னையை அடிக்கடிக் குறிப்பிடுவார். இரு வருடங்கள் கழித்து சிஎஸ்கே அணி மீண்டும் ஐபிஎல் போட்டியில் களமிறங்குவதால் சிஎஸ்கே ரசிகர்களை அதிகம் மகிழ்விக்கவேண்டும் என எண்ணியுள்ளார் தோனி. அதனால் இந்தமுறை அவருடைய பேட்டிங் கூடுதல் ஆக்ரோஷத்துடன் மிளிர்கிறது. மேலும் கடந்த சில மாதங்களாக தோனியின் பேட்டிங் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. முன்பு போல அதிரடியாக ஆடுவதில்லை, டைமிங் இல்லை, சிக்ஸ் அடிக்க
முடிவதில்லை போன்ற விமரிசனங்களுக்கான பதிலடியையும் இந்த ஐபிஎல்-லில் தந்துவருகிறார் தோனி. இதனால் இந்த வருடமும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறத் தயாராகிவருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஐபிஎல்: தோனியின் ஸ்டிரைக் ரேட்
2008 - 133.54
2009 - 127.20
2010 - 136.66
2011 - 158.70
2012 - 128.77
2013 - 162.89
2014 - 148.40
2015 - 121.96
2016 - 135.23
2017 - 116.00
2018 - 169.23
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.