பிளேஆஃப் வாய்ப்பு: நான்காம் இடத்துக்குக் கடுமையாகப் போட்டியிடும் நான்கு அணிகள்!

மீதமுள்ள ஒரு இடத்துக்குத்தான் 4 அணிகள் தற்போது போட்டியிட்டு வருகின்றன... 
பிளேஆஃப் வாய்ப்பு: நான்காம் இடத்துக்குக் கடுமையாகப் போட்டியிடும் நான்கு அணிகள்!

ஐபிஎல் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறுவதற்காக எல்லா அணிகளும் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றன.

இதில் ஹைதராபாத், சென்னை, பஞ்சாப் ஆகிய அணிகள் தகுதி பெறுவதற்குப் பிரச்னையே இல்லை.

ஏனெனில் ஹைதராபாத் அணி மீதமுள்ள 5 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் வென்றால் போதும். 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளோடு பிளேஆஃப்-புக்குச் சென்றுவிடும்.

சென்னை அணி மீதமுள்ள நான்கு ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் வென்றால் போதும். 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளோடு பிளேஆஃப்-புக்குச் சென்றுவிடும்.

பஞ்சாப் அணி மீதமுள்ள 5 ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களில் வென்றால் போதும். 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளோடு பிளேஆஃப்-புக்குச் சென்றுவிடும்.

இந்த மூன்று அணிகளும் பிளேஆஃப் செல்ல அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. இதனால் பிளேஆஃப்-புக்கு 3 இடங்கள் உறுதிசெய்யப்பட்டுவிட்டன என்று இதைக் கொண்டு கூறமுடியும்.

மீதமுள்ள ஒரு இடத்துக்குத்தான் 4 அணிகள் தற்போது போட்டியிட்டு வருகின்றன. இன்றைய நிலவரப்படி 4 அணிகளுக்கும் வாய்ப்புள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

நேற்று இரு முக்கியமான ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் மும்பை அணியின் வெற்றி ஐபிஎல் போட்டியை மேலும் சுவாரசியமாக்கியுள்ளது.

மும்பை இண்டியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 37-வது ஆட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மும்பை இண்டியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 37-வது ஆட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்திருந்தது. ஹார்திக் பாண்டியா 35 ரன்களுடனும், டூமினி 13 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன், ரஸ்ஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களையே எடுத்தது. இதனால் கொல்கத்தா 13 ரன்களில் தோல்வியைத் தழுவியது. மும்பை தரப்பில் ஹார்திக் 2 விக்கெட்டையும், மெக்ளேனகன், பும்ரா, க்ருணால், மார்கண்டே ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா தொடர்ந்து 3-வது இடத்திலும், மும்பை 5-வது இடத்திலும் உள்ளன.

மற்றொரு ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த அணியின் லோகேஷ் ராகுல் ஆட்டமிழக்காமல் 84 ரன்களைக் குவித்தார். முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஜோஸ்பட்லர் அதிகபட்சமாக 51 ரன்களை எடுத்தார். பஞ்சாப் அணியின் முஜிப்பூர் ரஹ்மான் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டை வீழ்த்தினார். 18.4 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை பஞ்சாப் அணி எடுத்தது. 3 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 54 பந்துகளில் 84 ரன்களுடன் லோகேஷ் ராகுலும், 23 ரன்களுடன் ஸ்டாய்னிஸும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ராஜஸ்தான் தரப்பில் கெüதம், ஆர்ச்சர், ஸ்டோக்ஸ், அனுரீத் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் பிளேஆஃப் அருகில் சென்றுள்ளது பஞ்சாப் அணி. 

தில்லி அணி 10 ஆட்டங்களில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி மீதமுள்ள நான்கு ஆட்டங்களை வென்றாலும் 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறுவது மிகக்கடினம். அதுவும் அந்த அணியின் நெட்ரன்ரேட் -0.411 என்று மோசமாக உள்ளது. உலக அதியசம் ஏதாவது நிகழ்ந்தால் மட்டுமே தில்லி அணியால் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியும்.

கொல்கத்தா மீதமுள்ள 4 ஆட்டங்களில் 3-ல் வென்றால் பிளேஆஃப்-புக்குச் சென்றுவிடும். 4 அணிகளில் இந்த அணிக்கு மட்டுமே அதிக வாய்ப்புள்ளது. ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் பரவாயில்லை என்கிற நிலைமை உண்டு.

ஆனால் மும்பை, பெங்களூர், ராஜஸ்தான் ஆகிய அணிகள் மீதமுள்ள அனைத்து ஆட்டங்களையும் வென்றால் மட்டுமே பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியும். இது கடினமானது என்றாலும் இதற்கு முன்பு சென்னை, பெங்களூர், மும்பை ஆகிய அணிகள் இதுபோன்ற ஒரு சவாலைக் கடந்து வந்து பிளேஆஃப்-புக்குத் தகுதிப் பெற்றுள்ளன. எனவே இந்த மூன்று அணிகளுக்கும் இன்னமும் வாய்ப்புண்டு என்று உறுதியாகக் கூறமுடியும்.

கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ராஜஸ்தான்... இந்த நான்கு அணிகளில் எது நான்காம் இடத்தைப் பிடிக்கப்போகிறது? பார்க்கலாம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com