ஸ்மைல் ப்ளீஸ் கோலி: மேலும் ஓர் ஆட்டத்தில் தோற்றாலும் ஆர்சிபி-யால் பிளேஆஃப்-புக்குச் செல்ல முடியும்!

ஸ்மைல் ப்ளீஸ் கோலி: மேலும் ஓர் ஆட்டத்தில் தோற்றாலும் ஆர்சிபி-யால் பிளேஆஃப்-புக்குச் செல்ல முடியும்!

ஸ்மைல் ப்ளீஸ் கோலி. இன்னமும் வாய்ப்புள்ளது. கடைசிவரை போராடவும்...

நேற்றும் சோகமாக இருந்தார் விராட் கோலி. ஹைதராபாத்திடமும் தோற்றுப்போனதால் இனிமேல் பெங்களூர் அணியால் 16 புள்ளிகளுடன் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியாது என்கிற நிலை. 14 புள்ளிகள் இருந்தாலும் நெட்ரன்ரேட் உதவவேண்டும். இப்படியொரு சிக்கலான நிலையில் அவரால் மட்டும் எப்படி உற்சாகமாக இருக்கமுடியும்? 

நேற்றைய ஆட்டத்தில், பெங்களூரு அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வென்றது. டாஸ் வென்ற பெங்களூரு பீல்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் 146 ரன்களையே எடுக்க முடிந்தது. பெங்களூரு தரப்பில் சிராஜ் அபராமாக பந்துவீசி 3 விக்கெட்டையும், டிம் செளதி 2 விக்கெட்டையும், உமேஷ், சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. ஹைதராபாத் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டையும், ரஷீத்கான், கெளல், புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் அடிப்படையில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது ஹைதராபாத். ஆனால், 6 புள்ளிகளுடன் பரிதாபமான நிலையில் உள்ளது பெங்களூர். இனிமேல் பிளேஆஃப் வாய்ப்பில்லை என்று சோகமாக உள்ளார் ஆர்சிபி ரசிகர்கள்.

ஆனால், அவர்களின் சோகத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது ஒரு கணக்கு. 

ஒரு ரசிகர், பெங்களூருக்குச் சாதகமான பிளேஆஃப் சாத்தியக்கூறுகளைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதன்படி முடிவுகள் அமைந்தால், மீதமுள்ள நான்கு ஆட்டங்களில் பெங்களூர் வென்றாலே போதும்... 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்-புக்கு நேரடியாகத் தகுதி பெறமுடியும். அட, வேண்டுமானால் மேலும் ஓர் ஆட்டத்தில்கூட கோலி அணி தோற்றுக்கொள்ளட்டும். அப்போதும் நெட்ரன்ரேட் அடிப்படையில் பெங்களூர் அணியால் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியும் என்கிறது அந்தக் கணக்கு. எப்படி என்று பார்க்கலாம்.

மீதமுள்ள போட்டிகளின் முடிவுகள் இவ்வாறு அமையவேண்டும்:

மே 8: பஞ்சாப் - ராஜஸ்தான் = பஞ்சாப் வெற்றி 
மே 9: கொல்கத்தா - மும்பை = மும்பை 
மே 10: தில்லி - ஹைதராபாத் = ஹைதராபாத் 
மே 11: ராஜஸ்தான் - சென்னை = சென்னை 
மே 12: பஞ்சாப் - கொல்கத்தா = பஞ்சாப் 
மே 12: தில்லி - பெங்களூர் = பெங்களூர் 
மே 13: சென்னை - ஹைதராபாத் = ஹைதராபாத் 
மே 13: மும்பை - ராஜஸ்தான் = மும்பை
மே 14: பஞ்சாப் - பெங்களூர் = பெங்களூர் 
மே 15: கொல்கத்தா - ராஜஸ்தான் = கொல்கத்தா 
மே 16: மும்பை - பஞ்சாப் = பஞ்சாப்
மே 17: பெங்களூர் - ஹைதராபாத் = பெங்களூர் 
மே 18: தில்லி - சென்னை = சென்னை
மே 19: ராஜஸ்தான் - பெங்களூர் = பெங்களூர் 
மே 19: ஹைதராபாத் - கொல்கத்தா = ஹைதராபாத் 
மே 20: தில்லி - மும்பை = தில்லி 
மே 20: சென்னை - பஞ்சாப் = சென்னை

இந்த முடிவுகளின்படி அணிகள் கடைசியாக புள்ளிகள் பட்டியலில் இவ்வாறு அமையும்: 

ஹைதராபாத் - 22 புள்ளிகள்
சென்னை - 20 புள்ளிகள்
பஞ்சாப் - 18 புள்ளிகள்
பெங்களூர் - 14 புள்ளிகள்
மும்பை - 12 புள்ளிகள்
கொல்கத்தா - 12 புள்ளிகள்
தில்லி - 8 புள்ளிகள்
ராஜஸ்தான் - 6 புள்ளிகள்

அதாவது இதன்படி நெட்ரன்ரேட் பிரச்னை எதுவும் இல்லாமல் ஜம்மென்று பிளேஆஃப்-புக்கு நேரடியாகச் செல்லலாம் ஆர்சிபி. 

வேண்டுமானாலும் ஓர் ஆட்டத்தில் தோற்றுக்கொள்ளட்டும். அப்போதும் 12 புள்ளிகளுடன் நெட்ரன்ரேட் உதவியுடன் பிளேஆஃப்-புக்குச் செல்ல முடியும். 

இந்தக் கணக்கை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதை ஆர்சிபி ட்விட்டர் கணக்கு லைக் செய்துள்ளதால் பலருக்கும் இதுகுறித்து தெரியவந்துள்ளது.

ஆக... ஸ்மைல் ப்ளீஸ் கோலி. இன்னமும் வாய்ப்புள்ளது. கடைசிவரை போராடவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com