தடாலடியாக நான்காவது இடத்துக்கு முன்னேறிய மும்பை: இதர அணிகள் பதற்றம்!

நேற்றைய ஆட்டம் பழைய மும்பையை ஞாபகப்படுத்தியது...
தடாலடியாக நான்காவது இடத்துக்கு முன்னேறிய மும்பை: இதர அணிகள் பதற்றம்!

இதை யாருமே எதிர்பார்த்திருக்கமுடியாது. 

மே 4-ம் தேதி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த மும்பை அணி தற்போது நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஐந்தே நாள்களில் கடகடவென முன்னேறி முதல் நான்கு இடங்களில் ஒன்றைப் பிடித்ததால் இதர அணிகள் கலக்கமடைந்துள்ளன. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டி மிகவும் சுவாரசியமாக கட்டத்தை அடைந்துள்ளது. 

மே 4 அன்று, பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது. இதனால் கடைசி இடத்தில் இருந்த மும்பை, 5-ம் இடத்துக்கு முன்னேறி அசத்தியது. மே 6 அன்று, கொல்கத்தா அணியை 13 ரன்களில் வீழ்த்தியது மும்பை. அந்த வெற்றிக்குப் பிறகும் புள்ளிகள் பட்டியலில் மும்பை 5-வது இடத்தில்தான் இருந்தது. 10 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் இருந்தது கொல்கத்தா. மிக மோசமான நிலையில் இருந்தபோதும் மற்ற அணிகள் போல துவளாமல் மீண்டு வருகிறது மும்பை. 

நேற்றைய ஆட்டம் பழைய மும்பையை ஞாபகப்படுத்தியது. மும்பை இந்தியன்ஸ் 102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி கண்டது. கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 18.1 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வீழ்ந்தது. மும்பை வீரர் இஷான் கிஷண் ஆட்டநாயகன் ஆனார் கடந்த 11 சீசன்களில் இரு அணிகளும் மொத்தம் 22 ஆட்டங்கள் விளையாடியதில் 18 ஆட்டங்களில் மும்பையே வென்றுள்ளது.

இந்த வெற்றியினால் தற்போது 10 புள்ளிகளுடன் ஜம்மென்று நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது மும்பை. யாரும் எதிர்பாராத திருப்புமுனை இது. 

மே 1 அன்று பெங்களூருவிடம் தோற்றது மும்பை. அதனையடுத்து 8 ஆட்டங்களில் 2-ல் வெற்றி 6-ல் தோல்வி என்கிற மோசமான நிலையில் இருந்தது மும்பை. மீதமுள்ள ஆறு ஆட்டங்களை வென்றால்தான் பிளேஆஃப் என்கிற இக்கட்டான நிலைமை வேறு. பெங்களூருக்கு எதிரான அந்தத் தோல்வி மும்பை அணியை மிகவும் காயப்படுத்தியது. அன்று முதல் புதிய அத்தியாயத்தை எழுத ஆரம்பித்தார்கள் மும்பை வென்றார்கள்.

பஞ்சாப்பை வீழ்த்தியும் அடுத்ததாக கொல்கத்தாவை இருமுறை வீழ்த்தியும் தொடர்ச்சியாக 3 வெற்றிகளைப் பெற்றுள்ளது மும்பை. இதனால் நீண்டநாளாக நான்காம் இடத்தில் இருந்த கொல்கத்தா தற்போது 5-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது. 

அடுத்ததாக ராஜஸ்தான், பஞ்சாப், தில்லி ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது மும்பை. இந்த மூன்றிலும் வென்றுவிட்டால் பிளேஆஃப் உறுதி. ஆனால் இது நடக்கக்கூடாது என்பதுதான் இதர அணிகளின் விருப்பம். ஏனெனில் ஐபிஎல்-லில் மிகவும் ஆபத்தான அணி மும்பை தான். சென்னை சூப்பர் கிங்ஸை அதிகமுறை வென்ற அணி இதுமட்டும்தான். அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள மும்பையால் எந்த அணியின் ஐபிஎல் கனவையும் சிதைக்கமுடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com