தோனிக்கு நன்றி சொல்லாத அஸ்வின்: வெகுண்ட ரசிகர்கள்!

நன்றி மறப்பது நன்றன்று என்கிற ரீதியில் அஸ்வினுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுவருகின்றன.
தோனிக்கு நன்றி சொல்லாத அஸ்வின்: வெகுண்ட ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது, சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது என இரு ஐசிசி விருதுகள் கிடைத்துள்ளன. ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை (கேர்ஃபீல்டு சோபர்ஸ் டிராபி) பெறும் 3-ஆவது இந்தியர் அஸ்வின் ஆவார். இதற்கு முன்னர் 2004-இல் ராகுல் திராவிடும், 2010-இல் சச்சின் டெண்டுல்கரும் இந்த விருதைப் பெற்றுள்ளனர். சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் ஆகிய இரு விருதுகளையும் ஒரே ஆண்டில் பெறும் 2-ஆவது இந்தியர் அஸ்வின் ஆவார். முதல் இந்தியர் ராகுல் திராவிட். அவர் 2004-இல் மேற்கண்ட இரு விருதுகளையும் வென்றுள்ளார்.

குடும்பத்துக்கு அர்ப்பணிப்பு: இரட்டை விருது கிடைத்திருப்பது குறித்து அஸ்வினிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: இரட்டை விருதுகள் கிடைத்திருப்பது மிகப்பெரிய கெளரவமாகும். இது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சச்சின், ராகுல் திராவிட் ஆகியோரைத் தொடர்ந்து எனக்கு ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது கிடைத்திருப்பது எனக்குள் மிகப்பெரிய உற்சாகத்தை தந்திருக்கிறது. இந்த விருதோடு, சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதும் கிடைத்திருப்பது சிறப்பானதாகும். இந்த விருதுகளுக்காக நான் ஏராளமானோருக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகள் எனக்கு சிறப்பானதாக அமைந்தன. அதிலும் இந்த ஆண்டு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது. இந்த ஆண்டில் நான் பேட்டிங், பெளலிங் என இரு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனது இந்த சாதனைகளுக்கு பின்னால் ஏராளமானோர் இருக்கிறார்கள் என்பது அதைவிட முக்கியமானதாகும். இந்த விருதை எனது குடும்பத்தினருக்கு அர்ப்பணிக்கிறேன். ஐசிசிக்கும், குறிப்பாக எனது சகவீரர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். தோனி ஓய்வு பெற்ற பிறகு ஏற்பட்ட வெற்றிடங்களை தாண்டி இளம் கேப்டனான கோலி தலைமையில் வலுவான அணியாக உருவெடுத்திருக்கிறோம். இந்திய அணி இப்போது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றார்.

ட்விட்டரிலும் இதேபோல தன்னுடைய நன்றியைக் குடும்பத்தினர், கோலி, கும்ப்ளே உள்ளிட்டவர்களுக்குத் தெரிவித்திருந்தார் அஸ்வின். அதில் தோனியின் பெயர் விடுபட்டிருந்தது. உடனே அவரை தோனி ரசிகர்கள் பிடி பிடி என்று பிடித்துக்கொண்டார்கள். நன்றி மறப்பது நன்றன்று என்கிற ரீதியில் அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுவருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com