எங்களிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டார் கோலி

3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி எங்களிடம் இருந்து வெற்றியைப் பறித்துவிட்டார் என நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம்  தெரிவித்தார்
எங்களிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டார் கோலி

3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி எங்களிடம் இருந்து வெற்றியைப் பறித்துவிட்டார் என நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம்  தெரிவித்தார்.
மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தைத் தோற்கடித்தது இந்தியா. இந்த ஆட்டத்தில் கோலி ஆட்டமிழக்காமல் 154 ரன்களும், தோனி 80 ரன்களும் குவித்தனர்.
ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜேம்ஸ் நீஷம் மேலும் கூறியதாவது: நாங்கள் குவித்த 285 ரன்கள் என்பது எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியாத ஸ்கோராக இருந்திருக்கலாம். ஆனால் நாங்கள் பேட் செய்தபோது ஆரம்பம் முதல் கடைசி வரை கடுமையாகப் போராடினோம். அதேநேரத்தில் நாங்கள் மோசமாக பந்து வீசியதாகவும் நினைக்கவில்லை.
கோலியும், தோனியும் மிக அற்புதமாக ஆடினர். இலக்கை துரத்தும் வல்லமை கொண்ட வீரர்களில் கோலியும் ஒருவர். அவரைப் போன்ற ஒரு வீரருக்கு எதிராக பந்துவீசும்போது நமக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் சில விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை.
40 முதல் 45 ஓவர்களுக்குள் நாங்கள் விக்கெட் வீழ்த்தியிருந்தால் ஆட்டத்தின் போக்கு எங்களுக்கு சாதகமாக மாறியிருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் மிகச்சிறப்பாக ஆடிய கோலி கடைசியில் எங்களிடம் இருந்து வெற்றியைப் பறித்துவிட்டார். அடுத்த ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக பந்துவீச முயற்சிப்போம். அப்போது வெற்றி எங்கள் வசமாகும் என நம்புகிறேன் என்றார்.
இந்த ஆட்டத்தில் கோலியுடன் இணைந்து 3-ஆவது விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்து இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் கேப்டன் தோனி. இந்த ஆட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக தோனி முன்வரிசையில் (4-ஆவது வீரராக) களமிறங்கி அதிரடியாக ரன் சேர்த்தார்.
தோனியின் இந்த முடிவு நியூஸிலாந்து அணிக்கு ஆச்சர்யமாக இருந்ததா என நீஷமிடம் கேட்டபோது, "நிச்சயமாக இல்லை. தோனியின் ஆட்ட முறையைப் பற்றி எங்களுக்குத் தெரியும். அவர் ஆரம்பத்தில் நிதானமாக செயல்பட்டு பின்னர் அதிரடியாக ஆடி ரன் குவித்துவிடுவார் என்பது தெரியும். ஒரு பேட்ஸ்மேன் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடும்போது வெளிப்புறத்தில் 4 பீல்டர்களை வைத்து அவரை கட்டுப்படுத்துவது சவாலானதாகும்.
மொஹாலியில் சற்று பனி பெய்தாலும், தில்லி அளவுக்கு பனியின் தாக்கம் இல்லை. இந்தியாவில் இதுபோன்ற சூழல்கள் இருக்கும் என்பது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். இந்த சூழலை எப்படி கையாள வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com