திருப்பூர் உள்விளையாட்டரங்கம் திறக்கப்படுவது எப்போது?

திருப்பூரில் விளையாட்டு மேம்பாட்டுக்காக ரூ. 4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உள்விளையாட்டரங்கத்தை விரைவில்...
திருப்பூர் உள்விளையாட்டரங்கம் திறக்கப்படுவது எப்போது?

திருப்பூரில் விளையாட்டு மேம்பாட்டுக்காக ரூ. 4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உள்விளையாட்டரங்கத்தை விரைவில் திறக்கப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையிலிருந்து திருப்பூர் பிரிக்கப்பட்டு 2008-இல் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் விளையாட்டுத் துறைக்கென பிரத்யேக மைதானங்கள் எதுவும் இல்லாத காரணத்தால், தாற்காலிகமாக திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானம், மாநகரின் மையப் பகுதியில் உள்ள நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மைதானம் ஆகியவற்றில் விளையாட்டுப் போட்டிகள், பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாவட்ட அளவில் பெரிய அளவிலான போட்டிகளை விளையாட்டுத் துறை நடத்த வேண்டும் என்றால், தனியார் பள்ளி மைதானங்களையே நாடும் சூழல் நிலவி வருகிறது.
எனவே, திருப்பூரில் விளையாட்டு மேம்பாட்டுக்கென உள்விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதையடுத்து, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் சுமார் 4.86 ஏக்கர் பரப்பளவில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 2013-இல் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, 2014-ஆம் ஆண்டு பிப்ரவரியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
மாநில அரசின் நிதி ரூ. 2.5 கோடி, திருப்பூர் மக்களின் பங்களிப்பாக ரூ. 1.25 கோடி, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்டிஏடி) நிதி ரூ. 65 லட்சம் என மொத்தம் ரூ. 4 கோடியே 40 லட்சம் மதிப்பில் உள்விளையாட்டரங்கம் கட்டப்பட்டு வந்தது. இந்த உள்விளையாட்டரங்கில் திருப்பூர் மக்களவை உறுப்பினர் நிதி ரூ. 50 லட்சத்தில் நவீன தரைத்தளம் அமைக்கப்பட்டது.
இப்பணிகள் அண்மையில் நிறைவு பெற்றன. ஆனால், இந்த உள்விளையாட்டரங்கம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதை விரைவில் திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது: திருப்பூர் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த மாவட்ட விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது.
அதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தும் இதுவரை திறக்கப்படவில்லை. இந்த உள்விளையாட்டு அரங்கத்தை விரைவில் திறப்பதுடன், பிற விளையாட்டுகளுக்கும் தனித்தனியாக மைதானங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றனர்.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான் கூறியதாவது:
பல்நோக்கு உள்விளையாட்டரங்கத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டன. இதுதொடர்பாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பி விரைவில் முறைப்படி திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com