பிரபுக்களைப் போன்று நடந்துகொள்ள வேண்டாம்: பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

பிரபுக்களைப் போன்று நடந்து கொள்ள வேண்டாம். நீதிமன்ற உத்தரவை மதித்து நடக்க வேண்டும்.
பிரபுக்களைப் போன்று நடந்துகொள்ள வேண்டாம்: பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

பிரபுக்களைப் போன்று நடந்து கொள்ள வேண்டாம். நீதிமன்ற உத்தரவை மதித்து நடக்க வேண்டும். இல்லையெனில் உங்களை அவ்வாறு நடக்க வைப்போம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) கடுமையாக எச்சரித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர், செயலாளர் அஜய் ஷிர்கே உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்யுமாறு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான குழு உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏற்க பிசிசிஐ தொடர்ந்து மறுத்து வருவதாகவும் லோதா குழு குற்றம்சாட்டியுள்ளது.
ஐபிஎல் சூதாட்ட வழக்கின் ஒருபகுதியாக பிசிசிஐயை சீரமைப்பதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம். இக்குழு அளித்த பரிந்துரைகளை கடந்த ஜூலை 18-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்விடம் லோதா குழு தனது இடைக்கால அறிக்கையை புதன்கிழமை அளித்தது. அதில், பிசிசிஐயும், அதன் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களும் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று செயல்படுவது இல்லை. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், லோதா குழு உறுப்பினர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இ-மெயில் உள்பட பல்வேறு வழிகளில் பிசிசிஐ அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோதிலும், அவர்கள் உரிய பதிலை அளிப்பது இல்லை. எனவே, அதன் தலைவர் அனுராக் தாக்குர், செயலாளர் அஜய் ஷிர்கே உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதாவது:
தாங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பிசிசிஐ நினைத்தால் அது தவறு. பிசிசிஐ பிரபுக்களைப் போன்று நடந்து கொள்கிறது. நீதிமன்ற உத்தரவை மதித்து நடக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அவ்வாறு நடக்க வைப்போம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பிசிசிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அரவிந்த் தாதர் கூறியதாவது: நீதிமன்றத்தின் உத்தரவுகள் பெரும்பாலானவற்றை பின்பற்றியே நடந்து வருகிறோம். இதுவரை நிறைவேற்றாத உத்தரவுகளை அடுத்தகட்டமாக நிறைவேற்றுவோம் என்றார்.
எனினும், இந்த பதிலில் நீதிபதிகள் திருப்தியடையவில்லை. "பிசிசிஐ கண்டிப்பாக சட்டப்படி நடக்க வேண்டும். இப்போது பிசிசிஐயின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. நீதிமன்றத்தின் உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும்' என்று கூறிய நீதிபதிகள், அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக, 70 வயதுக்கு மேற்பட்டோர் பிசிசிஐ பொறுப்புகளில் இருக்கக் கூடாது. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் நிர்வாகிகளாக இருக்கக்கூடாது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பிசிசிஐ பதிலளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட லோதா குழுவின் பரிந்துரைகளை 6 மாதத்தில் முழுமையாக அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும், அந்தப் பரிந்துரைகள் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணித்து அறிக்கை அளிக்குமாறும் லோதா குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com