சாய் பிரணீத்: இந்திய பேட்மிண்டனின் புதிய நட்சத்திரம்!

சூப்பர் சீரிஸ் போட்டியில் இதற்கு முன்னால் காலிறுதிக்குப் பிறகு அவர் சென்றது கிடையாது.
சாய் பிரணீத்: இந்திய பேட்மிண்டனின் புதிய நட்சத்திரம்!

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சூப்பர் சீரிஸ் போட்டியில் பிரணீத் பட்டம் வெல்வது இதுவே முதல்முறை.

சூப்பர் சீரிஸ் போட்டியில் இதற்கு முன்னால் காலிறுதிக்குப் பிறகு அவர் சென்றது கிடையாது. ஆனால் இந்த ஒரு கோப்பையை வென்றதன் மூலம் அனைத்தையும் தகர்த்தெறிந்துவிட்டார் இந்த 24 வயது இளைஞன். சாய்னா நெவால், சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோருக்குப் பிறகு சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்ற நான்காவது இந்தியர் என்கிற பெருமையுடன்.

சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் சாய் பிரணீத் 17-21, 21-17, 21-12 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான ஸ்ரீகாந்தை தோற்கடித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை ஸ்ரீகாந்த் 21-17 என்ற கணக்கில் கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டின் ஆரம்பத்தில் ஸ்ரீகாந்த் 4-1 என முன்னிலை பெற்றார். இதன்பிறகு சாய் பிரணீத் அபாரமாக ஆட, இருவரும் 10-10 என்ற கணக்கில் சமநிலையை எட்டினர். தொடர்ந்து அசத்தலாக ஆடிய சாய் பிரணீத் 21-17 என்ற கணக்கில் 2-ஆவது செட்டை கைப்பற்றினார். இதையடுத்து நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட்டில் அபாரமாக ஆடிய சாய் பிரணீத் அந்த செட்டை 21-12 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் ஆனார். சூப்பர் சீரிஸ் போட்டி ஒன்றின் இறுதிச் சுற்றில் இரு இந்தியர்கள் மோதியது இதுவே முதல்முறையாகும். சாய் பிரணீத்தும், ஸ்ரீகாந்தும் இதுவரை 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் சாய் பிரணீத் இந்தப் போட்டியோடு சேர்த்து 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

சாய் பிரணீத், பயிற்சியாளர் கோபிசந்தின் பெருமைக்குரிய மாணவர்களில் ஒருவர். 2004 முதல் அவரிடம் பயிற்சி பெற்றுவருகிறார். சிங்கப்பூர் ஓபன் இறுதிச் சுற்றில் விளையாடிய ஸ்ரீகாந்த், சாய் பிரணீத் ஆகிய இருவரும் ஹைதராபாதில் உள்ள கோபிசந்த் அகாதெமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள் இருவரும் சிங்கப்பூர் ஓபன் இறுதிச் சுற்றில் விளையாடியது குறித்து கோபிசந்த் கூறியதாவது:

சாய் பிரணீத், ஸ்ரீகாந்த் இருவரும் சிங்கப்பூர் ஓபன் இறுதிச் சுற்றில் விளையாடியதற்காக பெருமை கொள்கிறேன். அது மிகப்பெரிய போட்டி. அதில் பிரணீத் வாகை சூடியிருக்கிறார். அவர் இப்போது இளம் வீரர்தான். அவர் இன்னும் நிறைய ஆண்டுகள் விளையாட முடியும். சிங்கப்பூர் ஓபனில் வென்ற பட்டம், சாய் பிரணீத் உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான நம்பிக்கையை கொடுக்கும்.

சாய் பிரணீத்தின் பாட்மிண்டன் வாழ்க்கையை பார்த்தால், அவர் பெரிய வெற்றிகளைப் பெற்றதை தெரிந்து கொள்ளலாம். லீ சாங் வெய் உள்ளிட்ட முன்னணி வீரர்களை அவர் வீழ்த்தியிருக்கிறார். அவர் திறமையான வீரர். ஆனால் அவர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். சாய் பிரணீத், உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட தகுதி பெறுவார் என நம்புகிறேன். ஸ்ரீகாந்தும் தகுதி பெற வாய்ப்புள்ளது என்றார்.

சூப்பர் சீரிஸ் போட்டியை வெல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. கோபிசந்த் போன்ற திறமையான பயிற்சியாளர்கள் புதுப்புதுத் திறமைகளைக் கண்டெடுத்துவருகிறார்கள். இந்திய பேட்மிண்டனின் பொற்காலம் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com