ஹைதராபாதை போராடி வென்றது புணே

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாதை தோற்கடித்தது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ்.
ஹைதராபாதை போராடி வென்றது புணே

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாதை தோற்கடித்தது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ்.

இதன்மூலம் 3-ஆவது வெற்றியைப் பெற்ற புணே அணி, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 4-ஆவது இடத்துக்கு முன்னேறியது. அந்த அணியின் விக்கெட் கீப்பர்
எம்.எஸ்.தோனி 34 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் தோனி தன் மீதான விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். முன்னதாக ரன் சேர்க்க முடியாமல் தடுமாறிய தோனி, கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தார்.
புணேவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியில் யுவராஜ் சிங் உடல்நலக்குறைவு காரணமாக இடம்பெறவில்லை. புணே அணியில் அறிமுக வீரராக தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் களம்புகுந்தார்.
டாஸ் வென்ற புணே அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, டேவிட் வார்னரும், ஷிகர் தவனும் ஹைதராபாதின் இன்னிங்ûஸ தொடங்கினர். அதிரடியாக ரன் சேர்க்க முடியாமல் தடுமாறிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.1 ஓவர்களில் 55 ரன்கள் சேர்த்தது.
ஷிகர் தவன் 29 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த கேன் வில்லியம்சன் 14 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 21 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஹென்ரிக்ஸ் அரை சதம்: இதையடுத்து களம்புகுந்த மோசஸ் ஹென்ரிக்ஸ் அதிரடியாக ஆட, மறுமுனையில் நிதானமாக ரன் சேர்த்த டேவிட் வார்னர் 40 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சேர்த்த நிலையில் உனட்கட் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
இதையடுத்து தீபக் ஹூடா களமிறங்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஹென்ரிக்ஸ், தாக்குர் வீசிய கடைசி ஓவரில் பவுண்டரியை விளாசி 26 பந்துகளில் அரை சதம் கண்டார். இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. ஹென்ரிக்ஸ் 28 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 55, தீபக் ஹூடா 10 பந்துகளில் 1 சிக்ஸர்,
2 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
புணே தரப்பில் உனட்கட், கிறிஸ்டியான், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
திரிபாதி அதிரடி: பின்னர் ஆடிய புணே அணியில் ஆரம்பத்தில் நிதானம் காட்டிய திரிபாதி, புவனேஸ்வர் குமார் வீசிய 3-ஆவது ஓவரில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளை விளாச, அதிரடி ஆரம்பமானது.
ஆனால் பிபுல் சர்மா வீசிய அடுத்த ஓவரில் ரஹானே 2 ரன்களில் (7 பந்துகள்) ஆட்டமிழக்க, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் களம்புகுந்தார். அவர், வந்த வேகத்தில் பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்க, முகமது சிராஜ் வீசிய 5-ஆவது ஓவரில் திரிபாதி ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டினார்.
தொடர்ந்து வேகம் காட்டிய திரிபாதி, எஸ்.கெளல் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதனால் அவர் 32 பந்துகளில் அரை சதம் கண்டார். இதன்பிறகு பிபுல் சர்மா ஓவரில் ஸ்மித் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்களை விளாச, 10 ஓவர்களில் 83 ரன்களை எட்டியது புணே.
ரஷித் கான் வீசிய அடுத்த ஓவரில் ஸ்மித் போல்டு ஆனார். அவர் 21 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தோனி களமிறங்க, திரிபாதி 41 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார்.
தோனி சிக்ஸர் மழை: இதையடுத்து தோனியுடன் இணைந்தார் பென் ஸ்டோக்ஸ். புணேவின் வெற்றிக்கு கடைசி 6 ஓவர்களில் 76 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. கெளல் வீசிய 15-ஆவது ஓவரில் தோனி ஒரு சிக்ஸரையும், ஸ்டோக்ஸ் ஒரு பவுண்டரியையும் விரட்டினர். இதன்பிறகு கடைசி 4 ஓவர்களில் 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால் 17-ஆவது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் (10 ரன்கள்) ஆட்டமிழக்க, மனோஜ் திவாரி களம்புகுந்தார். அவர் ஒரு பவுண்டரியை விளாச, புணேவின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்டன. முகமது சிராஜ் வீசிய 18-ஆவது ஓவரில் திவாரி ஒரு பவுண்டரியை விளாச, தோனி தன் பங்குக்கு ஒரு சிக்ஸரையும், பவுண்டரியையும் விரட்டினார்.
புவனேஸ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசிய தோனி 29 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். அந்த ஓவரில் 19 ரன்கள் கிடைக்க, கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.
கெளல் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் மனோஜ் திவாரியின் கேட்ச்சை ரஷித் கான் கோட்டைவிட, அது பவுண்டரியானது. இதன்பிறகு கெளல், அபாரமாக பந்துவீச, கடைசிப் பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அதில் தோனி பவுண்டரியை விளாச, புணே 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
தோனி 34 பந்துகளில் 61, மனோஜ் திவாரி 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹைதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார், பிபுல் சர்மா, ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


புள்ளிகள் பட்டியல் (புணே}ஹைதராபாத் ஆட்டம் வரை)

அணிகள் போட்டி வெற்றி தோல்வி புள்ளி

மும்பை 6 5 1 10
கொல்கத்தா 6 4 2 8
ஹைதராபாத் 7 4 3 8
புணே 6 3 3 6
டெல்லி 5 2 3 4
பஞ்சாப் 6 2 4 4
பெங்களூர் 6 2 4 4
குஜராத் 6 2 4 4

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com