பிளே ஆஃப் நோக்கிச் செல்லும் புணே! வெளியேறவுள்ள கோலி அணி!

சில நாள்களுக்கு முன்பு கடைசி இடத்தில் இருந்த புணே அணி, இப்போது பிளே ஆஃப்-புக்குச் செல்லக்கூடிய தகுதியை...
பிளே ஆஃப் நோக்கிச் செல்லும் புணே! வெளியேறவுள்ள கோலி அணி!

ஐபிஎல் போட்டி தற்போது இரண்டாம் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. தில்லி அணி தவிர இதர அணிகள் அனைத்தும் குறைந்தது ஏழு ஆட்டங்களாவது விளையாடியுள்ளன. இதனால் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப்-புக்குத் தகுதி பெறும் என்கிற விவாதங்கள் தொடங்கியுள்ளன.

புணே அணி இந்த ஐபிஎல் போட்டியிலும் சுமாராக விளையாடிவந்தாலும் புள்ளிகள் பட்டியலில் தற்போது நான்காம் இடம் பிடித்துள்ளது. இது எதிர்பாராத மாற்றம். சில நாள்களுக்கு முன்பு அந்த அணி கடைசி இடத்தில் இருந்தது. இப்போது பிளே ஆஃப்-புக்குச் செல்லக்கூடிய தகுதியை அடையவுள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை தோற்கடித்தது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ். இதன்மூலம் மும்பையின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது புணே. முன்னதாக மும்பை அணி தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வென்றிருந்தது.

மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. புணே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது. ஆனால், மும்பை அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.  4 ஓவர்களில் ஒரு மெய்டனை வீசியதோடு, 21 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

8 ஆட்டங்களில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் கொண்டுள்ள மும்பை அணி முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி மீதமுள்ள 6 ஆட்டங்களில் 2-ல் வெற்றிபெற்றாலே பிளே ஆஃப் கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.

ஆரம்பத்திலிருந்து பல பிரச்னைகளைச் சந்தித்து வரும் புணே அணி, கடைசி இரு ஆட்டங்களில் வென்றதன் மூலம் தற்போது 7 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது. அந்த அணி மீதமுள்ள 7 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் உறுதியாகிவிடும்.

ஐபிஎல் போட்டியின் பலமாக அணியாகக் கருதப்படும் பெங்களூர் அணி கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி இதுவரை விளையாடிய 7 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளைக் கொண்டுள்ளது.

ஞாயிறு அன்று நடைபெற்ற போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அதிலும் 9.4 ஓவர்களில் 49 ரன்களுக்கு சுருண்டது மட்டுமில்லாமல் அந்த அணியில் அனைவருமே ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இது பெங்களூர் அணியின் மனநிலையை மிகவும் பாதித்துள்ளது. பெங்களூர் அணி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராகும்.

இந்தத் தோல்வி குறித்து கோலி கூறியதாவது: இந்த மோசமான தோல்வி. கவனக்குறைவான பேட்டிங். மனத்தை மிகவும் காயப்படுத்தியுள்ளது. நன்றாக பெளலிங் செய்ததால் இலக்கை எட்டமுடியும் என்றுதான் நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. என்னால் இப்போது ஒன்றும் சொல்லமுடியவில்லை. ஆனால் இது ஏற்றுக்கொள்ளமுடியாத தோல்வி. இந்தத் தோல்வியைப் பெரிதாக ஆராய முடியாது. அந்தளவுக்கு மோசம். இதை மறந்துவிட்டு அடுத்த ஆட்டத்தில் கவனம் செலுத்தவேண்டும். இதுபோல மீண்டும் இந்த ஐபிஎல்-லில் விளையாட மாட்டோம்.

இந்த இக்கட்டான நிலையில் பெங்களூர் அணி பிளே ஆஃப்-புக்குத் தகுதி பெற இன்னும் குறைந்தபட்சம் 6 வெற்றிகளாவது தேவைப்படும். மீதமுள்ள 7 ஆட்டங்களில் இதைப் பெற்றாகவேண்டும். என்ன செய்யப்போகிறார் கோலி?

இதுபோன்ற எதிர்பாராத வெற்றி, தோல்விகளால்  ஐபிஎல் போட்டியின் இரண்டாம் கட்டம் மேலும் சுவாரசியமாகவும் போட்டி முனைப்புடனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com