பெங்களூர் படுதோல்வி: விராட் கோலி வேதனை

ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தாவிடம் படுதோல்வி கண்டது வேதனையளிப்பதாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
பெங்களூர் படுதோல்வி: விராட் கோலி வேதனை

ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தாவிடம் படுதோல்வி கண்டது வேதனையளிப்பதாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் ஆட்டத்தில் 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 19.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து 132 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த பெங்களூர் அணி 9.4 ஓவர்களில் 49 ரன்களுக்கு சுருண்டது. இதுதான் ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணியால் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர். இந்த ஆட்டத்தில் பெங்களூர் வீரர்களில் ஒருவர்கூட இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை.
போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி கூறியதாவது: இது எங்களுடைய மிக மோசமான பேட்டிங். இது மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த ஆட்டத்தின் ஒரு பாதிக்குப் பிறகு நாங்கள் எளிதாக வென்றுவிடலாம் என்று நினைத்தோம். ஆனால் எங்களின் பேட்டிங் பொறுப்பற்றதாக அமைந்துவிட்டது. தற்போதைய நிலையில் வேறு எதையும் சொல்ல முடியாது. எங்களின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
2-ஆவது பாதி ஆட்டம் குறித்து மறுஆய்வு செய்ய தேவையில்லை. இந்த தோல்வியை மறந்துவிட்டு, அடுத்த ஆட்டத்தை நோக்கி செல்வது அவசியமாகும். நாங்கள் சிறந்த அணி. இதற்கு முந்தைய ஆட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தோம். எங்கள் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் தங்களின் தவறை உணர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன். எனவே அனைவரும் இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு வர வேண்டும். சிறப்பாக ஆடி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும். இனிமேல் இதுபோன்று நாங்கள் ஆடமாட்டோம் என்பது மட்டும் உறுதி என்றார்.


பெளலர்களுக்கு கம்பீர் பாராட்டு
வெற்றி குறித்துப் பேசிய கெளதம் கம்பீர், 'இந்த வெற்றி புத்துணர்வைத் தந்துள்ளது. அனைத்து பாராட்டுகளும் பெளலர்களையே, குறிப்பாக கோல்ட்டர் நைல், உமேஷ் யாதவ் ஆகியோரையே சேரும். எங்களிடம் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் போன்று மற்ற அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. எங்கள் அணியில் மூன்று பந்துவீச்சாளர்கள் 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசுகிறார்கள். அது எங்களுக்கு சாதகமாக அமைந்தது.
எனினும் எங்களின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. முதல் 6 ஓவர்களில் நாங்கள் குவித்த ரன்களைப் பார்க்கும்போது, 20 ஓவர்களில் 170 ரன்கள் குவித்திருக்க வேண்டும். எனவே பேட்டிங் பொறுத்தவரையில் எங்கள் வீரர்கள் முழு பலத்தையும் வெளிப்படுத்துவது அவசியம். ஒரு தொடரை வெல்ல வேண்டுமானால் அனைத்து துறைகளிலும் ஓர் அணி சிறப்பாக செயல்பட வேண்டும்' என்றார்.
இன்றைய ஆட்டம்
பெங்களூர்-ஹைதராபாத்
இடம்: பெங்களூரு
நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு:
சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com